Posts

இருள் ஊடுருவும் சாளரம்

  1 கிள்ளியெடுத்த அளவிற்கு கங்கு இரு கண்களிலும்; அவளுடைய மூக்குக்கும் சிவக்க வரும் என்பதை நம்பமுடியாமல்தான் நின்றுகொண்டிருந்தேன். மழை ஓய்ந்ததின் நிசப்தம் அச்சுறுத்துவதாக இருந்தது; புழுக்கம் வேறு. அடுப்படியிலிருந்து ஊசி விழும் சத்தம் கூட கேட்கவில்லை; அம்மை ஏதோ துணுக்குற்றிருக்கவேண்டும். நான்கு மாத கலவரங்கள் அனைத்தும் முடிவுக்கு வந்துவிட்டதாகத் தோன்றியது. மூச்சு விடும் அசைவு கூட வெளிப்படாமல் அமலி நின்றுகொண்டிருந்தாள்; இமைக்காத விழியோரம் தவறிவிழத் தயாராக இரு முத்துகள் திரண்டிருந்தன.   கொஞ்சமாய் துணிச்சலைத் திரட்டிக்கொண்டு கேட்டேன். “அமலிக்கு.. என்னாச்சு?” வழமையான செல்லங்கொஞ்சும் குரலைச் சிரமப்பட்டு கொண்டுவந்துவிட்டேன். கண்களை மூடிக்கொண்டாள். அப்போதைக்கு அந்தச் சலனமே கூட போதுமென்றிருந்தது; ஆறுதலாக இருந்தது. அவதிஅவதியாக எச்சிலை விழுங்கினாள். உடைந்து அழப்போகிறாளா? காதுக்கு பின்னாலிருந்து தொண்டைக்கு கோடு போட்டதைப் போல வியர்வை இறங்கிக்கொண்டிருந்தது; அவிழ்த்திருந்த முதல் பித்தான் அனுமதிக்கும் எல்லை வரை அதைப் பார்க்கமுடிந்தது. பார்வை அங்கு விழுவதை உணர்ந்தவளாக துணியின் இருமுனைகளையும் இறுக்கிப் பி