சங்கல்பம்
‘நாவமரத்தில் பால் சுரக்கிறது. பெரியம்மாவுக்குதான் ரொம்ப மேலுக்கு முடியாமல் இருக்கிறது.’ என்று கடிதத்தில் அப்பா எழுதியிருந்த இடத்தை நான் நிதானித்து கூட வாசிக்கவில்லை. ஒரு பதினைந்து பைசா தபாலட்டையில் எழுதிவிடக்கூடிய சேதிகளை முக்கால் ரூபாய் இன்லாண்ட் கடிதத்தில் நீட்டிமுழக்குவது அவரது வழக்கம். அதிலும் இதுபோன்ற தொடர்பற்ற வாக்கியங்களை அடுத்தடுத்து எழுதுவதில் விற்பன்னர். ஆனால் அடுத்த வாரத்தில், ஊருக்கு வந்து இறங்கியபோது விஷயம் வேறுவிதமாக இருந்தது. வீட்டிற்கு பின்னாலிருந்த ஒழுங்கையில் சனம் அடிக்கடி போவதும் வருவதுமாக இருந்ததை என்னவென்று விசாரிக்கப்போக, எல்லாம் அந்த நாவமரத்து பால் சுரக்கும் சமாச்சாரம்தான். நாவம்மாள் கோயில் புது விளக்கும் விசேஷமுமாக ஜேஜேவென இருப்பதாக அம்மா சொன்னார். ஓரெட்டு பார்த்துவிட்டு வரலாமென போனபோது, இரண்டாம் அடுக்கு கிளையில் ஒரு சிறிய தூக்குவாளி தொங்கிக்கொண்டிருந்தது. கடந்த ஒன்றரை வாரங்களுக்குள் அம்மரத்தில் ஆறு இடங்களில் வெடிப்பு உண்டாகி பால் வந்திருப்பதாக மாமா கை காட்டி சொல்லிக்கொண்டிருந்தார். எங்கிருந்தோ ஒரு பூசாரியை சம்பாரித்து கொண்டுவந்திருந்தார்கள். அவர் ஆளுக்கு ...