Escape from the self

கடந்த ஞாயிற்று கிழமை ஒரு ஆறு மணியளவில் மருத்துவமனையில் ஒரு இளம்பெண் தீக்காயத்துடன் அனுமதிக்கபட்டாள்.. கிட்டத்தட்ட சவமாகத்தான்... வயது பதினான்காம்.. பிழைக்க வாய்ப்பில்லை என்ற ஒப்புக்கொள்ளமுடியாத உண்மையை சொன்னதும் அருகிலிருந்த ஒரு நடுவாந்திர வயதுக்காரர் நெஞ்சில் அடித்து கொண்டு கதறி சோர்ந்து விழுந்தார்.. விசாரித்ததில் அறிந்த உண்மைதான் அடுத்த சில மணி நேரங்களுக்கு ஒரு சில நினைவு பிம்பங்களை கிளறிவிட்டு கொண்டிருந்தது.. அந்த மனிதர் ஏசியதால்தான் அவரது மகளான அந்த இளம்பெண் மண்ணெண்ணெய் ஊற்றி பற்றவைத்து கொண்டிருக்கிறாள்..மருத்துவமனையில் சேர்ந்த ஒரு மணிநேரத்திற்குள் அவள் மூச்சு நின்று போனது...

எல்லாமே ஒரு மூன்று மணி நேரத்திற்குள் நடந்து முடிந்திருந்தது... சம்பவத்திலிருந்து கொஞ்சம் பின்னோக்கி நகர்ந்தால்.. இறந்து போனது, ஸ்ட்ரெச்சருக்கு லஞ்சம் தந்தது, மருத்துவமனை அனுமதிக்கு போலீஸ் கேஸ் போட்டது, வழியெங்கும் உயிர் போகும் வலியில் கதறிக்கொண்டு வந்தது, வீட்டில் வாழை இலையில் சுருட்டப்பட்டது, ஊரே அலறியடித்து அந்த அறைக்குள் ஓடியது, தனக்கு தானே தீயிட்டு கொளுத்திகொண்டது, அப்பா அடித்ததோ திட்டியதோ நிகழ்ந்தது..... அதற்கு முன்னால்? எங்கேயோ ஒரு மதிய வேலை உறக்கத்திலோ, மரத்தடியில் பாண்டி / பல்லாங்குலி விளையாடியோ, கோடையின் வற்றிய குளத்தில் குளித்து மகிழ்ந்தோ, தம்பியுடன் சண்டையிட்டு கொண்டோ...இப்படியாக என்ன செய்து கொண்டிருந்திருப்பாள்? இதில் ஏதோ ஒன்றிலோ இல்லை சமநிலை சம்பவம் ஒன்றிலோ இருந்த மனநிலை அப்பா அதட்டிய பின்னான அந்த முடிவெடுக்கும் நிலைக்கு எப்படி தாவ முடிந்தது?

சிறுவயது முதலே நான் கடந்து வந்த தற்கொலைகள் எல்லாம் கண்முன்னே வந்து போயின.. நான் பிறக்கும் முன்னே என் பெரிய மாமா, தாத்தாவுடன் ஏற்பட்ட மனகசப்பில் பால்டாயில் குடித்து வாழ்வை முடித்துகொண்டாராம்.. இன்றளவும் அந்த காணாத மாமாவைப் பற்றி அம்மா சொல்லும் கதைகள் மட்டுமே நினைவினில் தாங்கிக்கொண்டு நிற்கிறது.. எனக்கு சரியாக மூன்று வயது இருக்கும் போது, அப்பாவின் கடுஞ்சொல் பொறுக்காமல் அம்மா தூக்கு போட்டுகொண்டார்.. உறவினர் வீட்டில் இருந்த அப்பா சேதி தெரிந்ததும் அங்கு மணற்பரப்பில் விளையாடி கொண்டிருந்த என்னை தூக்கி கொண்டு முற்களையும், மாட்டு தொழுவங்களையும் தாண்டி எங்கள் வீட்டிற்கு ஓடியது இன்னமும் நினைவிருக்கிறது.. நாங்கள் செல்வதற்குள் அண்டைவீட்டார் அம்மாவை இறக்கி தரையில் கிடத்தி சுற்றி உட்கார்ந்து மாரடித்து அழுது கொண்டிருந்தனர்.. யாரோ ஒருவர் என்னை இழுத்து அம்மாவின் முகத்தருகே அமரவைத்தார்.. தூக்கு, தற்கொலை, மரணம் எதுவுமே புரியாத மனநிலையில் இருந்த எனக்கு, திடீரென அசைந்த அம்மாவின் கட்டைவிரலை எல்லோரும் காட்டி ஏதோ சொன்னார்கள்... அப்பாவும் சின்ன மாமாவும் அடுத்த நொடி அம்மாவை கார் வைத்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற காட்சி இப்போது நினைத்தாலும் இருதயம் படபடக்க தொடங்கிவிடும்..


ஆனாலும் இன்றுவரை அம்மா அதைப் பற்றி பேசியது இல்லை.. எனக்கு சம்பவம் நினைவிருக்காது என்பது அவரது எண்ணம்.. அன்றைய தினம் அம்மாவை தூக்கி கொண்டு ஓடிய சின்ன மாமா திருமண வாழ்வில் ஏற்பட்ட கசப்பில் செல்ஃபாஸ் மாத்திரையை தின்று நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது செத்துபோனார்... செய்தி வந்ததும் தொலைபேசியுடன் அப்படியே கீழே விழுந்து அம்மா கதறியது இன்றும் கண் முன் நிற்கிறது...மேலே படிக்க வைக்கவில்லை என்று பூச்சிமருந்து குடித்து, மருத்துவமனை செல்லும் வழிநெடுக்க "என்ன எப்படியாவது காப்பாத்திருங்க" என்று அடிதொன்டையில் அழுது, போய்சேரும் முன்னரே செத்துப்போன பக்கத்துவீட்டு பிரேமா அக்கா, தன் அம்மாவுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தூக்கமாத்திரைகளை ஒரு பிடி விழுங்கிவிட்டு இடுகாட்டிற்கு தானே நடந்து சென்று படுத்துக்கொண்டு மாண்ட ஆனந்த் அண்ணன் என்று பள்ளி வயதில் நான் கடந்துவது தற்கொலை படலங்கள் ஒவ்வொன்றும் இன்னமும் மனதறுக்கிறது...

கல்லூரி நாட்கள்... உண்மையிலேயே வாழ்க்கையின் விளிம்பு பருவம் அதுதான்..எத்தகைய அநாசய முடிவையும் யோசிக்காமல் எடுத்துவிடும் பருவம்.. விடுமுறை நாட்களில் சொற்ப நபர்களே இருந்த விடுதியில், விடுமுறை முடிந்து வந்த நண்பர் ஒருவர் கதவை திறக்க ஐந்தாறு நாட்களுக்கு முன்பே தூக்கில் தொங்கி காண சகிக்காத நிலையில் உடலிழுத்து தொங்கிக் கொண்டிருந்தான் ஹரிவரசன்.. போலீஸ் வந்தது.. ஏதேதோ தடையம் பார்த்தது.. ஒரு லெட்டரை அந்த அறைக்குள் கண்டுபிடித்து சுருட்டி பைக்குள் வைத்துக்கொண்டது.. சக மாணவியின் பெயர் இருந்ததாய் வதந்தி.. கதை சுற்றி விட நம் ஆட்களுக்கா தெரியாது? அதே போல வாழ்க்கையில் ஏதோ ஒரு புள்ளியை குறி வைத்தே ஓடும் என் நெருங்கிய நண்பன் சரவணகுமார் ஏதோ ஒரு மன அழுத்தத்தில் நோயாளிக்கு கொடுக்கும் மயக்க மருந்தினை அதிக அளவில் தனக்கே செலுத்தி அறையை சாத்திக்கொண்டு உள்ளேயே மரணித்து போனான்.. இந்த மரணத்திற்கும் பின்னாலும் கட்டுகதைகள் பல உலவிக்கொண்டுதான் இருந்தன..

கணவன் மனைவி கருத்துவேறுபாடு என்று இதுவரை நூற்றிற்கும் மேலான சவப்பெட்டிகள் என் கண் முன்னே நிறைந்திருக்கின்றன.. ஒவ்வொன்றிற்குள்ளும் சில சித்திரைவதைகளோ ஒரு கொலையோ மறைக்கப்பட்டு தற்கொலை சாயம் பூசப்பட்டிருக்கும்.. ஆனால் இந்த ஒரு பதினான்கு வயது சிறுமிக்கு கொளுத்திக்கொண்டு சாகும் அளவிற்கு அப்படி எப்படி நிகழ்ந்தது அந்த மன இறுக்கம்.. எப்படி பீறிட்டது அந்த கோபம், அந்த ரோஷம், அந்த இயலாமை, அந்த குருட்டு தைரியம்... அவள் மனதில் என்ன ஓடிக்கொண்டிருந்திருக்கும்..? இங்கு சொல்ல பட்டிருக்கும் ஒவ்வோர் மரணமும் தன்னை மாய்த்துக் கொள்ள மட்டும்தானா? இல்லை தன்னுடைய பிரிவின், இழப்பின் வழியை யாரோ உணர வேண்டும் என்பதற்கா?

பெற்றோரின் கண்டிப்பு, திருமண உறவு விரிசல், கிழித்தெறிய பட்ட காதல் கடிதங்கள், உப்பு சப்பற்ற தேர்வு முடிவுகள், என தற்கொலைக்கான காரணங்கள் எல்லாம் நமக்கு குப்பையாக தெரியும் வேளை எப்படி அங்கே ஓர் உயிர் மாய்வது சாத்தியமாகிறது?? காரணங்களோ, இல்லை தற்கொலை சரியா தவறா என்றெல்லாமோ பற்றி இங்கு பேசுவதற்கில்லை.. தற்கொலைக்கு முன்னான மனநிலை..? எப்படியொரு விந்தையான குழப்பம் அது.. சம்பவத்திற்கான முயற்சி செய்தவர்கள் உயிருக்கு போராடும் நிலையில் "என்னை எப்படி எப்படியாவது காப்பாத்திருங்க" என்று ஓலமிடுவது எப்படி சாத்தியபடுகிறது.. "புள்ளக்குட்டியெல்லாம் பத்தி கவல படாம ஒரு வேகத்துல பண்ணிட்டேன் என்ன காப்பாத்திருங்க.." என்ற வரியில் உள்ள அந்த "வேகம்" என்பதைத்தான் புரிந்துக்கொள்ள முடியவில்லை...





Suicide as Escape from the Self  என்ற ஓர் ஆராய்ச்சி கட்டுரையில் சில பதில்கள் கிடைக்கின்றன... இது ஆறு படிகளாக அந்த மனநிலை மாற்றத்தை சொல்கிறது..

  1. எதிர்ப்பார்ப்பு நிலைப்பாடு ஒன்றை ஏற்படுத்திக்கொண்டு அதில் சறுக்குவது 
  2. தாழ்வு மனப்பான்மை விளைவாய் தன் மீதே ஓர் நம்பிக்கையின்மை ஓர் குற்ற உணர்வு ஏற்படுகிறது..
  3. தன்னை பற்றிய அதீத சிந்தனை.. அதுவே தன்னைப் பற்றிய ஓர் கவலையாக மாறுகிறது...
  4. ஒரு மன வலிக்கான அவசர தீர்வை தேடும் நிலை உருவாகிறது..
  5. இந்நிலையில் இறந்த மற்றும் எதிர்காலங்கள் மனக்கண்ணில் தெரிய மறுக்கபடுகிறது.. நிகழ்காலம் வெறுமையாய் அதேநேரம் மிகநீளமாய் தெரியும்..
  6. ஆறாம் படி தற்கொலை எண்ணத்திற்கும் தற்கொலைக்குமான விளிம்பு நிலை.. தடையுணர்ச்சி அறுந்து போகிறது..பயம் விலகி கொள்கிறது.. தன்னை மட்டுமே ஒரு புள்ளியில் நிறுத்தி யோசிக்கும் வேளையில் அறிதல் நிலை வெடித்து ஓர் தற்கொலை நடக்கிறது..


ஒவ்வோர் படியிலும் எவ்வளவு மன வலியைக் கடக்கிறார்கள்.. எவ்வளவு மன சிதறல்.. சிலர் சாமியாடுகிறார்களே அதே போல இது ஒரு மயக்க நிலை.. தற்கொலை குறிப்புகள் பெரும்பாலும் பிதற்றலாய் இருப்பதற்கும் இதுவே காரணம்.. போலியாய் பயமுறுத்த, மிரட்ட நினைக்கும் தற்கொலை நாடகங்களில் இந்த மனநிலை இருக்காது.. இது ஒரு தீர்க்கமான குழப்ப நிலை.. மூன்றே வழிகள் தான் கண்ணில் தெரியும்... ஏதோ ஒரு மருந்து இல்லை ஓர் நிறைநித்திரை அல்லது மரணம்...வாழ்வில் எப்போதும் சிறந்ததை தேடும் மனித மனதிற்கு மரணம் அவ்வேளையில் மிகச்சிறந்த வழியாய் தெரியப்பெருவது ஆச்சர்யம் அற்ற அவலம்..

அதோடு தற்கொலைக்கு நீண்ட நாள் மன அழுத்தம் பெரும்பாலும் காரணமில்லை.. ஒரு சம்பவம்..ஒரு சின்ன பொறி.. அதுதான் பிரதான மையக் கரு.. அறிவியல் இதுபோல என்னென்ன சொன்னாலும் ஒரு சிறுமிக்கும் இதுபோல படிகளான மன பிழறல் எப்படி சாத்தியம் என்று இன்னமும் அந்த புள்ளியிலேயே வட்டமடிக்கிறது மனது.. "தெரியாம பண்ணிட்டேன்ப்பா... உடம்பெல்லாம் எரியுதுப்பா..." என்ற அவளின் அந்த கடைசி ஓலம் இப்போதும் நினைவில் இருக்கிறது.. "தெரியாம"- அதுதான் இங்கே குழப்பமே.. அங்கேயே நிற்கிறேன் இன்னமும்..