மணிமொழியும் மரணித்த பொழுதுகளும்...


"எனக்கு தெரியும்.. அவன் அப்பவே சரியான வேஸ்ட், லூசர்.. இப்பவும் அப்டிதான் இருப்பான்

என்ற பொன்வசந்தம் வசனத்தை இந்நேரம் மணிமொழியும் எனக்கானதாய் சொல்லிக்கொண்டிருக்கக்கூடும்.. எங்கோ பெங்களூரில் வேலை பார்க்கிறாள் என அவளைப் பள்ளி நாட்களில் தாறுமாறாக நோக்கிய கோபால் விசாரித்து வைத்துள்ளான்.. நல்லது.. முன்பதிவு செய்தும் பின்சக்கரத்தின் தலையில் அமர்ந்து பயணம் செய்ய வேண்டிய கட்டாயம்.. அடிக்கடி குலுக்கி தூக்கி போடுகிறது.. கையில் இருக்கும் டைரியைக் கொண்டு நினைவுளை சொறியலாம் என்றால் சக்கரம் அனுமதிப்பதாய் இல்லை.. பக்கத்தில் இருப்பவரை பார்த்தால் பயணங்களில் ஜூ.வி ஓசி வாங்கி படிப்பவர் போல தெரிகிறது.. டைரி உள்ளேயே கிடக்கட்டும்..

சம்பிரதாயமாக டிக்கெட் செக் செய்கிறார்கள்.. வாலட்.. வேண்டாம் வேண்டாம் என்றபோதும் பிடிவாதமாக மூன்று ஐநூறு ரூபாய் தாள்களை விரையமாக்கி மணிமொழி வாங்கி கொடுத்தது.. "எதுக்கு இவ்வளவு காஸ்ட்லியா.." என்று நான் ப்ச் கொட்டியபோது கடையில் யாரும் பார்க்காததாய் எண்ணிக்கொண்டு அவள் கொடுத்த முத்தத்தின் ஈரத்தை கன்னத்தில் தடவி பார்க்கிறேன்.. "ஐ.டி. கார்டு கொடுங்க" என்று டிக்கெட் செக்கர் சீனிற்கு "கட்" சொல்கிறார்.. அன்றைய தினம் லாண்ட்மார்க்கில் எடுத்துக்கொண்ட புகைப்படத்திற்கு பின்னால் செருகப்பட்டிருக்கும் இருக்கும் பான்கார்டை நீட்டினேன்..



மணிமொழியை விவரிக்காமல் மூன்றாம் பத்தியைக் கடக்கும் பொறுமையில்லை எனக்கு..  கொஞ்சம் வளர்ந்துவிட்ட குழந்தை.. அழகிலும் அடத்திலும்.. அன்று சீருடைக்கும் இரட்டை ஜடைக்கும் அழகியல் சாயம் பூசியவள்.. பள்ளி நிர்வாகத்திற்கு மாநில ரேன்க் வாங்கிவிடக்கூடிய நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒரு வால்நட்சத்திரம், ஆசிரியர்களுக்கு அமைதியான பிள்ளை, தோழிகளின் பொறாமை கதவை ரஜினிகாந்த் பாணியில் ஷோல்டரிங் செய்பவள், எனக்கு கவிதை எழுத கற்றுதந்தவள்.. தினமும் பள்ளிக்கு கொஞ்சம் தாமதம் செய்து, அவளுடைய 'லேடி பேர்டு' சைக்கிளில் உரசியோ ஒருக்களித்தோ என்னுடைய சைக்கிளை நிறுத்திவிட்டு வகுப்பிற்கு செல்வேன்.. மாலையில் சைக்கிள் எடுக்கும் போது அவளின் புன்னகை ஆயிரம் கவிதைகள் சொல்லும்..

பேச தொடங்கும் வரை தெரியவில்லை அவள் பிசாசு என்பது.. கல்லூரி வந்தபின் குறுஞ்செய்தி, அன்றைய ஹட்ச் நெட்வொர்கின் ஐந்து பைசா சேவை புண்ணியத்தில் விடிய விடிய உலக அறிவை பகிர்ந்தது, எட்டு மாதங்கள் கழித்து சென்னையில் முதல் சந்திப்பு.. பின்னர் வாரமொரு முறை, இரு முறை...தினம்.. கிட்டத்தட்ட நாசமாய் போன எல்லோரின் பாதையைத்தான் பின்தொடர்ந்தேன்.. அவளுக்கு கோபமே வராது என்று அவளுக்கும் எனக்கும் பொதுவான தோழிகள் அனுமானித்திருந்தது நாராயணசாமியின் வாக்குறுதியைப் போல பதினைந்து நாட்களுக்குள் சாயம் வெளுத்தது.. பைக்கில் சென்றுகொண்டிருக்கும்போது வாக்குவாதம் வந்தால் அங்கேயே இறங்கி பஸ் ஸ்டாப்பிற்கு நடக்க தொடங்கிவிடுவாள்.. ஃபோனை ஸ்விச் ஆஃப் செய்வது, நம்பர் மாற்றுவது என சராசரி சேட்டைகளை கொஞ்சம் அழகு சேர்த்து செய்வாள்..

இருவருக்கும் இடையேயானது காதல் என்பது உணரப்பட்டிருந்தது.. ப்ரோபோசல் ஜல்லிக்கட்டு எதுவுமே நடந்ததாய் நினைவில்லை.. ஒரு பேருந்து பயணத்தில் ஏதோ ஒரு குருட்டு தைரியத்தில் இதழில் முத்தமிட்டேன்..

"லூசு.. மொதல் கிஸ்ஸ இப்படிதான் அரக்கபறக்க கொடுப்பியா?"

"பஸ்.."

"சோ?"

இப்படி சீண்டும்வேளை மட்டும் அவளது சிரிப்பு ஒரு மார்க்கமாய் இருக்கும்.. சீண்டலுக்கேற்ப சாது மிரண்டேன்.. இவ்வாறாக ஒரு முறை பெசன்ட் நகர் பாரிஸ்டாவில் சுற்றியிருப்பது கண்ணாடி சுவர் என்று அறியாமல்...ச்சீ..எழுத்து வரம்பு மீறுகிறது...இப்போது பஸ்ஸில் கண்ணை விழித்தால் பக்கத்தில் நம்ம ஜூ.வி. இடுகாட்டில் எரிக்கும்பொது பாதியில் விரைத்தெழும் பிணத்தைப் போல அஷ்ட கோணலாக வாயை பிளந்துகொண்டு தூங்கிகொண்டிருந்தார்.. அந்த காட்சியை நினைவிலிருந்து நீக்கி மணிமொழியின் பிம்பத்தை உள்ளே கொண்டுவருவது உடனே சாத்தியமில்லை...

கிரிக்கெட்டில் சச்சின் பிடிக்கும்.. ஆனால் டெஸ்ட் மேட்சின் விதிமுறை கூட தெரியாது.. ஃபாலோ-ஆன்னா என்ன? என்பாள் வெள்ளந்தியாய்.. விவரிக்க முற்பட்டால் என் கை விரல்களைக் கோதிக்கொண்டு எதையும் செவியேற்ற மாட்டாள்.. சினிமாவில் கதையும் திரைக்கதையும் ஒன்றுதான் என்று வாதாடுவாள்.. அலைபாயுதே மாதவன், சூர்யா மற்றும் அவ்வபோதான விஜய் ரசிகை.. டிவியில் நல்லவேளை மெகா சீரியல் பார்க்க மாட்டாள்.. சேர்த்து வைத்து நீயாநானா பார்த்துவிட்டு, கோபிநாத் ஒரு ஜீனியஸ் என்பாள்...விகடன் கூட வாசிக்க மாட்டாள்.. சுஜாதா கேள்விபட்டிருக்கேன் என்பாள்.. சாரு  நிவேதிதா.. எதற்கு வம்பு? என்ன கொடுமையெனில் இவற்றில் எதையுமே அவளைவிட அதிகமாக தெரிந்ததாக நான் காட்டிகொண்டால்...கடைசியில் பைக்கில் இருந்து இறங்கி விடுவாள் அல்லது செல்ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்படும்..

கெட்ட வார்த்தை பேசினால் வயிற்றில் ஒரு பஞ்ச் விழும்.. இத்தனைக்கும் அவள் முன்பு நான் யதேச்சையாய் பிரயோகித்தவை என் இலக்கணபடி கெட்ட வார்த்தைகளே அல்ல.. ஒரு ஞாயிற்றுகிழமை காலையில்,பைக்கில் பின்னமர்ந்து கேட்டாள்,

"ஹேர் கட் பண்ணியிருக்கியா?"

"காலைலதான், எப்டியிருக்கு? "

"மயிரு மாதிரி இருக்கு"

சடாரென வண்டியை பிரேக்கடித்தேன்.. 

"ஹே...இப்ப என்ன சொன்ன?"

"ஹ்ம்ம்.. (சிரித்துக்கொண்டே) மயிரு மாதிரி இருக்குன்னு சொன்னேன், செவிடா?"

"இதுக்குதான வயித்துல குத்துவ.. இரு.. " என்று விரட்ட ஆயத்தமாக, படு ஸ்லோ மோஷனில் சொன்னாள்..

"வயித்துல குத்திடாதே...உம்புள்ள உள்ள இருந்தாலும் இருக்கலாம்.."

"எரும...(அடிக்க போலியாய் கையை ஓங்கி ...) நா இன்னும் அந்த ஸ்டெப்புக்கு போகலையேடி..."

"போயிட்டாலும்..."

நல்லவேளை அந்த சீண்டலை பரிசீலிக்க அப்போது சந்தர்ப்பம் ஏதுவாய் இல்லை.. 

பணி நிர்பந்தத்தில் இருவரும் வேறு ஊர்களுக்கு மாற்றலாக வேண்டிய கட்டாயம்.. ஐந்து பைசா ஸ்கீம் எல்லாம் முடிந்துபோய்விட்டது.. பேலன்ஸை பொருத்து உலக அறிவை பகிர்ந்து கொண்டோம்.. முன்பு துண்டு சீட்டுகளில் எழுதி கொடுத்த கவிதைகளை ஃபேஸ்புக்கில் அப்லோட் செய்ய பலர் என்னை unfriend செய்தார்கள்.. 

"உன் கனவுகள் 
இல்லாத 
இரன இரவுகளில் 
உறங்கியிருக்கவோ 
உயிருடன் இருக்கவோ 
சாத்தியம் குறைவு"

என்று மடக்கி மடக்கி போட்டு எதையோ நான் எழுதி வைக்க ஃபோன்வழி இதழ் நனைக்கப்படும்..விழுந்திருக்கும் இருபது லைக்குகளில் எத்தனை பெண்கள் என்பதை சரியாய் சொல்லுமளவிற்கு பொசஸிவ்.. இரண்டு முறை நம்பர் மாற்றியதற்கும் இந்த பொசஸிவ்னெஸ்தான் காரணம்..

இரண்டு மாதங்களுக்கு முன்பு சக ஃபேஸ்புக் தோழியொருத்தி "ur wife is so lucky" என பீட்டர்விட எனக்கு மேட்டர் கிழிந்தது.. அங்கிருந்து ஆரம்பித்த விவாதம் என்னை ப்ளாக் செய்வதில் முடிந்தது.. நம்பர் மாற்றப்பட்டது.. ஒவ்வொரு முறையும் அவள்தான் சமாதான தூது அனுப்பி வைப்பாள்.. "sry da.. itz ma mistk"  இதை அநேகமாக அவள் டெம்ப்லெட்டாக வைத்திருக்ககூடும்.. அதிக பட்சம் ஒரு வாரம்தான் தாங்கும்.. ஒரு முறை ஒன்பதாவது நாளை கடக்க..

"நீ 
தவறி விழுந்து 
அழத்தொடங்கும் 
முன்பே 
நான் 
வேண்டுமென்றே 
கீழே விழுந்து 
உன்னை 
சிரிக்கவைத்த 
நாளில் 
தொடங்கியிருக்கும் 
இந்த காதல்"

என்று அரைபுட்டி பீரில் நான் பிதற்றிவைக்க அவளது  டெம்ப்ளேட் என் மொபைலை வந்தடைந்தது.. இம்முறை கொஞ்சம் வினோதம்தான்.. இரண்டு மாதங்கள்.. இடையில் எத்தனை மொக்கை கவிதையால் தூது அனுப்பியும் பதில் இல்லை.. கம்பெனி மாறி விட்டாள் என அவளது ஃபேஸ்புக்  தோழி சொன்னாள்..தங்கிருந்த வொர்கிங் வுமன் விடுதியையும் காலி செய்துவிட்டாள் என அறிந்தேன்..தொடர்ந்து மூன்று ஞாயிற்று கிழமை அவளைத் தேடி சென்றேன்.. ஏற்கனவே அவளது அப்பா காதிற்கு எங்களது விஷயம் எட்டிவிட்டதாக கேள்வி.. வீட்டிலும் விசாரிக்க முடியாது.. பழைய நண்பர்கள் என்னைவிட அப்டேட்டில் பின்தங்கியுள்ளனர்..எப்படியோ கோபாலைப் பிடித்துவிட்டேன்..தூங்கிஎழுந்தால் பெங்களூர்.. தேடி பிடித்து அறைய வேண்டும்.. முத்தமிட வேண்டும்..வாய்ப்பிருந்தால் அன்றைய சீண்டலுக்கு பதிலும் சொல்லலாம்..முடிந்தால் கல்யாணமே செய்துவிடலாம்..மீண்டும் வாலட்டை எடுத்து அவளின் புகைப்படத்தை முத்தமிடுகிறேன்...மொபைல் கீச்சிடுகிறது...

"ts s ma new num"

my-ஐ ma என திரிக்கும் ஆங்கில ஆடம்பரத்தை இந்த இடத்திலும் விட்டுகொடுக்கவில்லை அவள்.. கைகள் நடுங்குகிறது எனக்கு..

"on thd way to bangelore" என்று அவசர எழுத்துபிழையுடன் ரிப்ளை அனுப்புகிறேன்..

"bt d seat next 2 me s free" என்ற எளிதில் புரியாத பதிலுடன் புரியாத ஸ்மைலி ஒன்றையும் அனுப்புகிறாள்.. குறுகுறுவென மொபைலை வெறித்து பார்த்து கொண்டிருக்கிறேன்..

பின்னாலிருந்து எழுந்து வந்து தலையில் கொட்டி,கழுத்தை இறுக்கிபற்றி உதட்டில் முத்தம் பதிக்கிறாள்.. ஜூ.வி விழித்து கொண்டுவிட்டார்.. நாங்கள் பொருட்படுத்துவதாய் இல்லை..

முற்றும்