நீ கோரினால்...

அறுவை சிகிச்சை அரங்குகளின் உள்கட்டுமானத்தை வடிவமைக்கும் நிபுணர்கள், .சி. கண்ட்ரோல், டிஜிட்டல் கடிகாரம் இவையெல்லாம் இருக்கும் அலுமினிய/ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் யூனிட்டில் ஒரு மியூஸிக் ப்ளேயரையும் இரண்டு ஸ்பீக்கர்களையும் சேர்த்துவிடுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை எனக்கு அது அத்தியாவசியம் என்பேன்.   அங்கே உயிருக்கு ஒருவன் போராடிக்கொண்டிருக்கும்போது உங்களுக்கு பாட்டு அவசியமா என்றால், நிச்சயமாக தேவைதான்; ஒரு விதத்தில் கவனத்தை ஒருங்கிணைப்பதில் அது உதவுகிறது என்று சொல்வேன். என்னுடைய பேராசிரியர் ஒருவர்  பாட்டு பாடிக்கொண்டேதான் அறுவை சிகிச்சை செய்வார். அறுவைக்கான கருவிகளைக்கூட செவிலியரிடம் செய்கையில்தான் கேட்பார். பாடல்கள் தங்குதடையின்றி வந்துகொண்டிருக்கும். அட்டகாசமான துல்லியத்துடன் இருக்கும் சிகிச்சை. நாம் ஏதாவது இடைமறித்து அவரிடம் சந்தேகம் கேட்டால், அந்த நுணுக்கத்தை இழந்துவிடுவார். மிக முக்கியமாக பல வாய்களுக்கு அது பூட்டு போட்டுவிடும். பாடல் ஓடிக்கொண்டிருக்கும்போது அநாவசிய பேச்சோ/கூச்சலோ இருக்காது. நண்பர்கள் சிலர் கரோகீ மட்டும் ஒலிக்கவிட்டுக்கொண்டு அறுவைசிகிச்சை செய்வார்கள். மருத்துவர் பென் கார்ஸனை (Gifted Hands)  ரோல் மாடலாக வைத்திருக்கும் நண்பர் ஒருவர், பென் தான் உபயோகிப்பதாய் சொல்லியிருக்கும் இசை துணுக்கை கேட்டுகொண்டே காரியத்தில் கட்சிதமாய் இருப்பார். சிலர் கர்நாடக சங்கீதம் கேட்பார்கள். தபேலா, வயலின் என தனி தனி இசை கருவிகளை மட்டும் கேட்பவர்கள் உண்டு.

ஒரு அறுவை அரங்கினுக்குள் ஒலிக்கும் பாடல் மற்றவர்களை தொந்தரவு செய்யாத வண்ணத்தில் அதீத சப்தமில்லாமல், வர்லாம் வா/நாக்க மூக்க வகையறாக்களாய் இல்லாமல் இருப்பது அவசியம்சக அறுவை அரங்கு ஊழியர்களிடமும் நாம் கேட்கும் பாடல்கள் கொஞ்சம் மனதளவிலான சுறுசுறுப்பைக் கொடுக்கவேண்டும். அதற்காக தனி ப்ளேலிஸ்ட் மூன்று வைத்திருக்கிறேன். பாடல்வரிகள் நன்கு பரிட்சயமான மெலடிகள்தான் என்னுடைய சாய்ஸ். மெலடியல்லாத ஒருவித டேஜாவூ உணர்வை தரக்கூடிய பாடல்களும் பட்டியலில் இருக்கும். ஆம், சில பாடல்கள் அந்த டேஜா வூ உணர்வை தரக்கூடியவை. சிலவை சந்தோஷமான தருணங்கள். சிலவை மிக வாழ்வின் மோசமான தருணங்களை. அப்படியாக ஒரு மென்சந்தோஷத்தை மீட்டுத்தருகின்ற பாடல்கள் அறுவை சிகிச்சை மாதிரியான அதீத மனஅழுத்தம் கொடுக்கும் பணிகளை செய்யும்போது நிச்சயம் மனதை இலகுவாக்குகின்றன. இந்த உளவியல் குறித்த சில ஆராய்ச்சி அறிக்கைகளும் இதனை ஆமோதிக்கின்றன.

சமீபத்தில் 180 படத்தின் 'நீ கோரினால்...' பாடல் ஒலித்துக்கொண்டிருக்கும்போது ஊழியர் ஒருவர், என்ன பாட்டு சார் இது கேட்டமாதிரியே இல்ல என்று சொன்னார். அப்போதுதான் ஒரு வகையில் என்னுடைய டேஜா வூ பாடலாக இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். இப்படி பெரும்பான்மையானவர்களுக்கு பரிட்சயம் இல்லாத பாடல்கள் ஏதோவொரு காரணத்தால் நம்மிடம் ஒட்டிக்கொள்கின்றன. அந்த படம் வந்த நாளின், அந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருந்த நாட்களின் இருந்த நம் வாழ்க்கையை, இப்போது நாம் அதை மீண்டும் கேட்கும் அந்த நொடியில் பிரக்ஞையின்றி உள்ளூர அனுபவித்துவிடுகிறோம். அதுதான் அந்த டேஜா வூ. இத்தனைக்கும், 180 ஒரு சூர மொக்கையான படம், இந்த பாடலும் ஒன்றும் அவ்வளவு சூப்பரெல்லாம் இல்லை. அதுவும் அந்த பாடலைப் பார்த்தால் லைட்டாக நெளிய ஆரம்பித்துவிடுவேன். காரணம், அந்த பாடலின் கரு, பிரியா ஆனந்திற்கு பிறந்தநாள்; சித்தார்த் வரிசையாக பரிசுகளை கொடுத்துக்கொண்டே இருக்கிறார்; அத்தனை பரிசுகளுக்கும் மதன் கார்க்கி புண்ணியத்தில் கவித்துவமான துப்புகள்; ஒவ்வொன்றாக பிரியா கண்டுபிடித்து எடுக்கிறார். இதில் உனக்கு நெளிய என்ன இருக்கிறது என்று கேட்கலாம். நமக்கு சுட்டுப்போட்டாலும் வராத ஒரு விஷயத்தை அடுத்தவன் அலட்சியமாக செய்யும்போது ஒரு புகைச்சல் வருமே அதுதான் அந்த நெளிதல் என்று அறிக.

பெண்களுக்கு அன்பளிப்புகள் வாங்குவதை பற்றி கண்களை மூடிக்கொண்டு யோசித்தால், கைக்கடிகாரம், கடிகாரம், கடிகாரம், வாட்ச்...அவ்வளவுதான். அப்படியே எனக்கு ஜாம் ஆகிவிடும். அதையும் தாண்டி புத்தகம் என்று யோசித்தால், தோழிகளின் மூஞ்சி போகும் போக்கை மனக்கண்ணில் காண சகிக்கவில்லை. நாம் இப்படியிருக்க, சில பேர் அதிலே விற்பன்னனாக இருப்பான்கள். லிப்ஸ்டிக், பெர்ஃப்யூம் என பிராண்ட் வாரியாக தெரிந்துவைத்திருப்பான்கள். கொஞ்சம் கம்பு சுழற்றிப்பார்த்தேன். முடியவில்லை. இப்போதெல்லாம், ஆண் பெண் பேதமெல்லாம் பார்ப்பதில்லை. எல்லோருக்கும் புத்தகம் என்ற நிலைப்பாட்டிற்கு வந்துவிட்டேன். இது ஒரு விதத்தில் திணிப்புதான். பத்தில் ஒருவருக்குதான் வாசிப்பு பழக்கம் இருக்கும். வாசிப்பு இல்லாததை குறையாக சொல்லவில்லை. சொல்லப்போனால் புத்தக வாசிப்பு பழக்கத்தை பெருமையாக நினைப்பதைவிட ஆகப்பெரிய மொண்ணைத்தனம் எதுவுமேயில்லை. இருந்தாலும் இப்படியான அன்பளிப்புகள் பெறுபவரைவிட கொடுப்பவருக்கு அதிக நிறைவைக் கொடுக்கிறது. அன்பளிப்பின் உளவியலே அதுதான் என்ற பட்சத்தில் கொடுக்கும் நமக்கு அந்த அன்பளிப்பு பிடித்திருக்கவேண்டும் என்று நினைப்பேன். எனவேதான், புத்தகம் மட்டும் என்ற முடிவிற்கு வந்துவிட்டேன். இதில் இன்னொரு சுயநலமும் இருக்கிறது. இப்படியாக நான் ஆரம்பித்தப்பிறகு, எனக்கு வரும் அன்பளிப்புகளும் புத்தகங்களாக வருகின்றன. மிக முக்கியமாக, அலாரம் டைம் பீஸ், ஃபோட்டோ ஃப்ரேம், ஷோகேஸ் பொம்மைகள் இத்யாதிகளிடமிருந்து விடுதலை கிடைத்திருக்கிறது

புத்தகம் அன்பளிப்பதில் சில கூறுகள் முக்கியமானவை. பெறுபவரின் விருப்பமான புத்தக வகை எது என்று கொஞ்சம் தெரிந்துகொள்ளவேண்டும்; புதிதாக வாசிப்பவருக்கு வெண்முரசை வாங்கிக்கொடுத்து நம் இலக்கிய திறமையை காட்டி அவரை அதன் பிறகு வாழ்க்கையிலேயே எந்த புத்தகத்தையும் தொடவிடாமல் விரட்டியடிக்கும்  பாவத்தை செய்யாமல், எளிய வாசிப்பிற்கான புத்தகத்தை தேர்வுசெய்யவேண்டும்; பெறப்போகிறவரிடமே எந்த புத்தகம் வேண்டும் என்று கேட்பது தவறில்லை, சஸ்பென்ஸ் வெங்காயமெல்லாம் இதிலே தேவையேயில்லை; அனைத்தையும் விட மிக முக்கியம், புத்தகம் கொடுத்தப்பின் ஒரு முறைக்கு மேல் படிச்சுட்டியா என்று கேட்டு நச்சரிக்கக்கூடாது.
இதைவிட முக்கியம் புத்தகம் அன்பளிப்பாக பெறுபவர் கவனிக்கவேண்டியவை- வாங்கியவுடன் முகர்ந்து பார்த்து நக்கி பார்த்து அதனுடன் ஒரு செல்ஃபீ எடுப்பதும் உடனே அதனை இன்ஸ்டாவிலோ, ஃபேஸ்புக்கிலோ அப்லோடிவிட்டு தூக்கி கிடாசிவிடுவதும் கட்டாயம் தவிர்க்கவேண்டிய பாவச்செயல்; கூடுமான வரை அன்பளித்தவர் உங்களிடம் கேட்கும் முன்னரே புத்தகத்தை படித்துவிடுங்கள், தவறவிட்டால் அவர் முதன்முறை கேட்ட பிறகு படித்துவிட்டு அவர்களிடம், ஃபீட்பேக் கொடுத்துவிடுங்கள்; ஏற்கனவே இருக்கும் ஒரு புத்தகத்தை யாரேனும் அன்பளித்தால், அன்பளித்தவருக்கு மரியாதை கொடுத்து அதனை வைத்துக்கொண்டுகையில் இருக்கும் பிரதியை வேறு யாருக்காவது கொடுத்துவிடுங்கள்; என்ன புத்தகம் வேண்டும் என்று யாராவது கேட்கும்போது துளி கூச்சப்படாமல் உங்கள் தேர்வை சொல்லுங்கள் (பெருந்தன்மையாக உங்கள் தேர்வு என்று சொல்லி பத்து பிரதிகள் ரமணிச்சந்திரன் வந்துசேர்ந்த மிக மோசமான அனுபவத்தில் சொல்கிறேன்). 

2017 துவக்கத்தில் வாசிப்பு குறித்த ஒரு முக்கியமான சூளுரை எடுத்து இப்போதுவரை நிறைவேற்றி வருகிறேன்- கையிலிருக்கும் புத்தகங்களைவிட யாரேனும் அன்பளிக்கும் புத்தகங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வாசிப்பது. இப்படியாக ஆனப்பிறகு, சில முக்கியமான மாற்றங்களை கவனிக்கிறேன். புத்தகங்களை விரைவாக வாசித்துமுடிக்க முடிகிறது; இப்போதெல்லாம் புத்தகங்கள் வாங்குவதே அடுத்தவர்களுக்கு அன்பளிக்க மட்டுமே, எனக்கானவைகள் அன்பளிப்புகளாகவே வந்துசேர்ந்துவிடுகின்றன; நீங்கள் புத்தகம் பரிசளிக்கும் நண்பர்கள், அதுவரை வாசிப்பு பழக்கமே இல்லாதவராயினும், அதன் பிறகு, பிறருக்கு புத்தகங்கள் அன்பளிக்க ஆரம்பிக்கிறார் அல்லது குறைந்தபட்சம் உங்களுக்கு மட்டுமாவது புத்தகங்களை பரிசளிக்கிறார்.

இதையெல்லாம்விட புத்தகங்களில் எழுதிக்கொடுக்கப்படும் வரிகளில் எனக்கு அலாதி ஆதர்சம் உண்டு. சிலர் கவிதை எழுதுவார்கள்; சிலர் படம் வரைவார்கள்; சிலர் ஏதோவொரு பாடல்வரியை எழுதுவார்கள்; சிலர் அப்துல் கலாம் அல்லது சமுத்திரக்கனி வகையறாகளின் பொன்மொழிகளை எழுதுவார்கள். அந்த ஒரு பக்கத்தில் மட்டும் அத்தனை அபத்தங்களுக்கும் பாவமன்னிப்பு உண்டு.  'அன்புடன்' என்ற ஒருவரின் கையொப்பத்தில் இருக்கும் பிரியம் அந்த புத்தகத்தை இன்னும் நெருக்கமாக்கிவிடும். சமீபத்தில் புத்தகம் ஒன்றை அன்பளித்த தோழியிடம், எதுவும் எழுதவில்லையா என்றதற்கு, நான் எதும் எழுதினால், அதைத் தாண்டி அந்த புத்தகத்தை உன்னால் வாசிக்கமுடியாது என்றாள். 300 பக்கங்களைத் தாண்டிய ஒரு பெருங்கதை அந்த வெறுமையான முதல் பக்கத்தில் இருப்பதாக தோன்றுகிறது.

*