96, Rosy retrospection, சில பொய்கள்...

பள்ளிக்கூட காதல் என்று இதுவரை காட்டப்பட்ட திராபைகளிலிருந்து, இந்த படம் கொஞ்சம் வெளியே வந்திருக்கிறது. கொஞ்சம்- அவ்வளவுதான். மற்றவை எல்லாம் கொஞ்சம் ஓவராகத்தான் கூவுகிறார்கள் என்ற தொனியில்தான் இருக்கிறது. ரொமாண்ட்டிசைஸ் செய்யாமல் யோசித்துப் பார்த்தால் இந்த படத்திற்கான முழு பாரமும் முதிர்ந்த ஜானுவின் தோள்களில்தான் ஏற்றிவிடப்பட்டிருக்கிறது. காய்ந்துக்கொண்டிருக்கும் த்ரிஷாவின் மஞ்சள் நிற காட்டன் குர்த்தியை இறுதியில் காட்டும்போது அத்தனை நிசப்தம். 
படத்தில், தஞ்சாவூரைக் காட்டும்போதே தியேட்டர் அல்லோலகலப்படுகிறது. ஃபிலோமினா நகர், மஹாராஜா சில்க்ஸ் என்றெல்லாம் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஏதோ தல-தளபதி ரெஃபெரன்ஸ் வந்ததைப்போல ஆரவாரம். நம்மைப் பொருத்திப்பார்க்கும், நம்மோடு தொடர்புடைய ஒரு விஷயத்தை காட்டும்போது நிகழும் பரவசம் அது. அப்படி யாரும் இந்த படத்தின் காதல் காட்சிகளில் ஒன்றினார்களா என்று தெரியவில்லை; அவை ஒரு சினிமாவிற்கான புனைவு சுதந்திரத்தில் ரம்மியமாக படமாக்கப்பட்டிருப்பவை. அவ்வளவுதான். மற்றபடி இங்கு வந்து 'அது வந்து...என்னுடைய பள்ளி பருவத்தில்...' என்று எழுதப்படுபவை எல்லாமே ரொமாண்ட்டிசேஷன் குவியல்கள். இது என்றில்லை 'ஜரினாவாகிய நான்...' 'கலையரசியாகிய நான்...' எல்லாமே அப்படியான அனத்தல்கள்தான்.
இப்படியான கடந்தகாலம் பற்றிய அதீதங்களை மிகைப்படுத்தல்களை ஏன் வலிந்துப்போய் செய்கிறார்கள் என்று யோசிக்கவேண்டியிருக்கிறது. கொஞ்சம் விலகி வந்து நின்றுகொண்டு யோசித்தால், இது எதுவும் அடுத்தவர்களுக்காக செய்யப்படும் ஒன்றாக தெரியவில்லை. மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டு நம்மை நாமே திடப்படுத்திக்கொள்வதற்கு, நிகழ்காலத்தின் அப்பட்டமான நிஜத்திலிருந்து கொஞ்சம் தப்பித்துக்கொள்ள ஒரு இனிமையான புனையப்பட்ட கடந்தகாலம் நமக்கு தேவைப்படுகிறது. இதை பொய் என்று முத்திரை குத்தி ஒதுக்கிவைக்க முடியாது. திரிக்கப்பட்ட, சமயங்களில் அசலிலிருந்து வெகு தொலைவில் புனையப்பட்ட நிஜம்.
நிகழ் காலத்தின் மீது தங்களை மீறிய கர்வம் உள்ளவர்கள் சொல்லும் கடந்த காலத்தை கவனியுங்கள். வசந்தத்திற்கான வேலையே அதில் இல்லை. இலைகள் கூட கருப்பாக இருந்ததாக சொல்வார்கள். தெருவிளக்கில் படித்தேன்; மாடு மேய்த்து படித்தேன்; மூட்டை தூக்கினேன்; வாத்தியாருக்கு வீட்டு வேலை பார்த்துக்கொடுத்தேன் இத்யாதி இத்யாதி... 'ஆனால் இன்னைக்கு பார்' என்ற புள்ளியில் வந்து நிறுத்துவார்கள். என்னடா மனுஷன் இவன் இப்படி அடிபட்டு எந்திரிச்சு வந்து நிக்கிறானே என்று அவரின் உயரம் நம்மை பிரமிக்கவைக்கிறதோ இல்லையோ, அவர் அவருடைய மனதிலேயே அந்த கணம் ஒரு விஸ்வரூபம் எடுத்து நின்றுகொண்டிருப்பார்.
வாழ்க்கை முழுக்க துயரத்தை மட்டுமே சந்தித்தவரா அவர்? இல்லை. அதே மனிதரிடம் இரண்டு நாட்கள் கழித்து, பள்ளி நாட்களில் யாரையும் காதலித்தது உண்டா என்று கேட்டு பாருங்கள். 'விமலான்னு ஒருத்தி இருந்தா...' என்று அவர் ஆரம்பித்து சொல்லும் அந்த கடந்தகாலத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் சொன்ன தெரு விளக்கில் படித்ததோ, மூட்டை தூக்கியதோ வரவே வராது. வந்தாலும் அதிலொரு பாரமே இருக்காது. இப்போதைய கடந்தகாலம், விமலாவை மையப்படுத்தி விரிகிறது. இதில் வரண்டு போன வார்த்தைகளுக்கே வேலையில்லை. அதோடு கொஞ்சம் அதீதங்களும் அனிச்சையாக சேர்ந்துகொள்கின்றன. அவை கேட்போரை ஸ்வாரஸ்யப்படுத்துவதைவிட தனக்கே தன் இறந்தகாலத்தின் மீது அளவு கடந்த பிரயாசத்தை நிறுவ தேவைப்படுகின்றன.
கடந்தகாலத்தைப் பற்றி சிந்திக்கும்போதோ பேசும்போதோ எழுதும்போதோ, நம்மால் தேவையற்றதாகவோ, அந்த நினைவுகளுக்கு தொந்தரவாக இருப்பதாகவோ தோன்றும் விஷயங்களை வடிகட்டிவிட முடிகிறது. மாறாக அந்த நினைவை வலிமை பெறவோ அழகுறவோ செய்யும் ஒரு புனைவை உள்ளே சேர்த்துக்கொள்ளமுடிகிறது. இவ்வாறாக தன் நிகழ்காலத்தை நிந்தனை செய்து கடந்தகாலத்தை உயர்வாக கொண்டாட முடிகிறது. இந்த bias'ஐ உளவியலில் rosy retrospection என்று சொல்கிறார்கள்.
கடந்தகாலம் என்பது இன்றைய நிகழ்காலத்தைப் பற்றிய ஏக்கங்களுடனும், கனவுகளுடனும் வளர்ந்த காலம். கனவுகள் எப்போதும் வண்ணமயமானது. அதுவும் விழித்துக்கொண்டே எதிர்காலத்தைப் பற்றி காணும் கனவு எப்போதும் பரவசம் தருபவை. அப்படியான பரவசங்களால் நிறைந்த கடந்தகாலம். இன்றைய நிகழ்காலத்தில் அப்படியான எதிர்ப்பார்ப்புகள் எல்லாம் தோற்கடிக்கப்பட்டு, அம்மணமாக நிற்கும்போது, அதிலிருந்து கொஞ்சம் விடுவித்துக்கொண்டு கடந்த கால இன்பங்களையும் பரவசங்களையும் அசைப்போடுவது கொடுக்கும் அலாதி சுகம்தான் இந்த bias'ற்கு காரணம். ஒரு கணத்தில் அந்த கனவுகள் மீண்டும் மெய்ப்படப்போகின்றன என்று ஆழ்மனது நம்பிவிடுகிறது. தற்காலிகமாக ஒருவனை திடப்படுத்திவிடுகிறது. ஆனால் மீண்டும் இயல்பிற்கு வரும்போது அவன் மிக மோசமாக தோற்கடிக்கப்படுவான்.
இந்த படம் பார்க்கும் போதும் நிகழ்காலத்தின் வலிகளைத் தற்காலிகமாக மறக்க, ராமும் ஜானுவுமே தங்களின் கடந்த காலத்தை ரொமாண்ட்டிசைஸ் செய்து யோசிக்கிறார்களோ என்று தோன்றியது. ஒரு கட்டத்தில் ஜானு, ஒரு படி மேலே போய், கடந்த காலத்தில் அந்த காதல் நிறைவேறியிருந்தால் எப்படி இருக்கும் என்று ஒரு கதையை ராமின் மாணவிகளிடம் சொல்கிறாள். அப்போது அந்த தற்காலிக சுகம் தரும் மனவிடுதலையை ஜானு கண்களில் காட்டுகிறாள். இந்த rosy retrospection தெளிவான முடிவுகளை எடுப்பதிலிருந்து மனிதர்களைக் குழப்புகின்றது; இது ஒரு வித declinism என்றெல்லாம் அறிவியல் என்னென்னவோ சொன்னாலும், வாழ்க்கை இப்படியான தற்காலிக தருணங்களுக்காகத்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதுதான் இந்த புனைவுகளின், ரொமாண்ட்டிசேஷன்களின், பொய்களின், கற்பனைகளின், bias'களின் பின்னிருக்கும் அழுத்தமான அச்சாரம். கற்றது தமிழ் வாய்ஸ் ஓவர் ஒன்று எங்கிருந்தோ சன்னமாக கேட்கிறது. இந்த பொய்ங்கற விஷயம் மட்டும் இல்லைன்னா இந்த உலகத்துல அழகு, அபூர்வம்ங்கற விஷயங்கள் இல்லாமலே போயிருக்கும்
*