A Beer please...

இதைத்தான் பேசப்போகிறேன் என்று எஸ்.ஜே.சூர்யா போல முன்னரே அதன் ஒன் லைனை சொல்லிவிட்டு கதையை ஆரம்பிக்கிறார். எனவே கட்டுமானத்தை ஊகிப்பதில் எந்த தொந்தரவும் இல்லை. ஓர் ஆண் முற்போக்காக பேசப்போகிறான், முடிவில் அத்தனையையும் மீறி ஒரு பெண்ணைக் கையாளுமிடத்தில் அதிகார மனோபாவத்தைக் கட்டவிழ்க்கப் போகிறான். எதிர்ப்பார்த்த திசையில்தான் கதை நகர்கிறது. எதிர்ப்பார்த்த மாதிரியே நிறைவடைகிறது. ஆனால் முழுமையாக இருக்கிறதா?



முற்போக்கு ஆண் (பெரியாரிஸ்ட்) vs பிராமண பெண், இந்த அடையாளங்களுக்கான முரண்பாடுகளைப் பேசும் இருபது நிமிடங்கள்தான் களம். அதற்குள் அந்தப் பெண்ணின் பின்னணி சார்ந்த பலகீனங்களைப் பட்டவர்த்தனமாக்கி ஹீரோ அவளை முற்போக்கு கேலி செய்து சிறுமைப்படுத்த வேண்டும், அவனே கதையின் ஒன் லைன் படி ஒரு புள்ளியில் சறுக்க வேண்டும். ஒரு கதை தன் போக்கில் வளராமல், இப்படி நாம் ஸ்கெட்ச் போட்டுவிட்டு வரைவதில் என்ன சிக்கல் வருமோ, அதுதான் இயக்குநருக்கு வந்திருக்கிறது. இதையெல்லாம் பேசிவிட வேண்டுமென்று ஒரு பட்டியலைத் தொகுத்துக்கொண்டு ஓர் உரையாடலைக் கட்டமைக்கும்போது அது ஓர் இயல்பான நிகழ்வாக இல்லாமல், வலிந்த திணிப்பாக துருத்திக்கொள்கிறது. நிச்சயம் இயக்குநர் எடுக்கவிரும்பியது ஒரு நீதிக்கதையோ ஓர் வெளிப்படையான அரசியலையோ அல்ல என்று நம்புகிறேன். அப்படி நம்புவதற்கு காரணமும் அவரேதான், அவரது aesthetics. ஃப்ரேம்களில் அத்தனை freshness இருப்பது கலைரசனையின் வெளிப்பாடு. subtle art of expressing தெரிந்த மனிதராகவே படுகிறார். செய்நேர்த்தியின் பக்குவமும் ரம்மியமாக இருக்கிறது. இவைகளுக்கு நடுவில்தான் அந்தத் திணிப்பு நிகழ்கிறது.

பிராமண அப்பா
ஆண்ட பரம்பரை
சிக்கன் ஃபிங்கர்ஸ்
சில்லி பீஃப்
மோடி படம்
எஸ்.வீ.சேகர் மாமனார்
மத்தவங்கல்லாம் ஒழுங்கா
GDP - தினமலர் - Global economics

இதுவரை எதுவுமே அன்னியமாக தெரியவில்லை. 'ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்களைத் தொகுத்து வசனம் எழுதியிருக்கிறார்' என்ற சில விமர்சனங்களைப் பார்த்தேன். கிராமத்து டீக்கடையிலிருந்து காஃபிடே வரைக்கும் வாட்ஸப், டிக்டாக், ஃபேஸ்புக் ஏதோவொன்று இல்லாத உரையாடலே சாத்தியமில்லை என்ற எதார்த்தத்திற்கு நாம் வந்து பல காலம் ஆகிவிட்டது. பல முற்போக்குவாதிகள் பெரியாரையும் அம்பேத்கரையும் வாசித்ததைவிட ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்களை வாசித்து தங்களுக்கான அரைவேக்காட்டு சித்தாந்தங்களை உருவாக்கிக்கொண்டதுதான் அதிகம். எனவே அதெல்லாம் குறையாகவே படவில்லை. ஆனால் அந்தப் புள்ளி வரை, இரண்டு ஹாஃப் பாயில்களின் உரையாடல் போல ஓர் ஒழுங்குடன் செல்லும் கதை, அடுத்த கட்டத்தில் அடிவாங்குகிறது.

உங்க வீட்லகூட ஓகே, எங்க வீட்ல அக்செப்ட் பண்ணுவாங்கன்னு நா எதிர்ப்பாக்கவே இல்ல’ - இது மிக சாதாரணமான வசனம். இதன் எதார்த்தம் அதுவரை முற்போக்கு முக்காடுக்குள் இருக்கும் நாயக கதாப்பாத்திர வார்ப்புக்கு தெளிவாக தெரியும். அதனை கேலி செய்தோ கண்டுகொள்ளாமலோ கடக்கவேண்டிய விதத்தில் வடிவமைக்கப்பட்ட அந்தப் பாத்திரம் அந்த இடத்தில், ‘இல்ல, எனக்கு புரியல, என்ன உங்க வீட்ல அக்சப்ட் பண்ணதுல என்ன ஸ்பெஷல்என்று சீன் போட ஆரம்பித்த இடத்திலிருந்து, இயக்குநர் தன் ஸ்கெட்ச்சில் மிச்சம் இருப்பவற்றை வலிந்து அடுக்க ஆரம்பிக்கிறார். கொஞ்சம் கூட ஒட்டாமல் போக்கு தடம் புரள்வது இந்த இடத்தில்தான். அதுவும்இரு குடும்பங்களுக்குள்என்பதை சுருக்கி, ‘உனக்கு எனக்குஎன்று பேச நினைக்கும் நாயகி சட்டென reservationக்கு தாவும்போது, கதைக்குள் அப்பட்டமான பிரச்சார நெடி அடிக்க ஆரம்பிக்கிறது.

Fallacy of Economy based reservation பற்றிய lecture முடியும்போது கொஞ்சம் மீண்டும் தங்களின் இயல்பான ஹாஃப் பாயில் வேடத்திற்கு இருவரும் திரும்புகிறார்கள். Honour killing, எந்த பிராமினும் கத்தியெடுத்து குத்தல - இந்த இடங்களெல்லாம் பாத்திரத்தில் ஓரளவு பொருந்திவிடுகின்றன.

மீண்டும் பீஃப் பற்றிய பேச்சு வரும்போது, இயல்பு திரும்பிவிடுகிறது. அசைவம் உண்ணும் பெரும்பாலான பெண்களுக்கே மாட்டிறைச்சி உண்பதில் விருப்பமிருப்பதில்லை. மாட்டிறைச்சி உண்பதையும் புரட்சியின் வடிவமாக இணையம் மாற்றிவைத்திருக்கிறது. கூடாது என்பவர்களை எதிர்ப்பதோடு நிறுத்தாமல், பிடிக்காது என்பவர்களையும் சங்கி என்று சொல்லும் அரைவேக்காடுகள் இங்குண்டு

காதலுக்குள் அத்தனை கிறுக்குத்தனங்களும் அடக்கம். அடுத்தப் புள்ளியில் அதை நோக்கி கதை வடிவாக திரும்புகிறது, ‘நா ஒன்னும் வேற யார்க்கிட்டயோ இத சொல்லலயே, உரிமைலதான சொல்றேன்..’ அந்த இடத்திலிருக்கும் அணுக்கம் அத்தனை அசலானது. அந்தப் பெண்ணின் குழைவும் அவ்விடத்தில் மிக அழகு

அடுத்த சில நொடிகளிலேயே ஸ்கெட்ச்சின் தேவை கருதி, ஹீரோநீங்க அடுத்தவன் ஃபுட்ல..’ என்று ஆரம்பிக்கும் இடம்தான் அடுத்த மெகா சறுக்கல். Neutralisation மனப்பாங்கிற்கு வந்துவிட்ட நாயகியும் மீண்டும் யூடர்ன் அடித்து ஸ்கெட்சிற்கு துணைப்போக ஆரம்பிக்கும்போது, நமக்கு சோர்வாகிவிடுகிறது. அதன் பிறகு நீளும் democracy, ரங்கராஜ் பாண்டே வசனமெல்லாம்அட போங்கய்யாஎன்றாகிவிடுகிறது. திரும்பவேண்டிய திசையை நோக்கி மெல்ல வளையாமல், மடக்கென ஸ்டியரிங்கை ஒடித்த இடம் அது. 

எந்த இடத்தில் ஹீரோ தன்னுடைய ஆணாதிக்கத்தை நிறுவப்போகிறான் என்று பார்த்துக்கொண்டு வந்தால், ஏமாற்றம்.

தன்னை நாசூக்காக கழட்டிவிட்டுவிட்டு தன் உறவினர்களுடன் இசை கச்சேரிக்கு அவள் போனதிலிருக்கும் complex- அவன் வெளிப்படுத்துகிறான். ஒட்டு மொத்த கதையோட்டத்தில் அவன் அசலாக கோபப்பட வேண்டிய இடம் அதுதான். சரியாகவே கோபப்படுகிறான். ‘பெரிய posh மயிருஎன்று அவன் சொல்வது அந்த இடத்திற்கு அத்தனை பொருத்தமாகதான் வருகிறது. சட்டென பின்னணி இசை மாறுகிறது. ‘ஒரு பொண்ணுக்கிட்ட வல்கரா பேசுறஎன்ற வசனம் முளைக்கிறது. காதலனிடம் காதலியோ, காதலியிடம் காதலனோ தார்மீகமாக கோபப்படும் இடத்திலெல்லாம் அறச்சிந்தனை முளைத்து பெண்ணியம் ஆணியம் என்று பேச ஆரம்பித்தால் உலகத்திடம்செத்த சுத்தாம இருஎன்று சொல்லிவிடலாம். அதுவும் அந்த இடத்தில் அவனது கோபம் முழு நியாயத்துடன் இருக்கிறது. ஆனால், அவனுக்கு பதிலாக அந்தப் பெண் மிக எளிதாக victim card- கைப்பற்றிவிடுகிறாள். காரணம் ஸ்கெட்ச்சில் அப்படி இருக்கிறது. அதைத் தாண்டி செல்லும் உரையாடல், possessiveness, suspicion என்ற இருபாலருக்கும் பொதுவான தளத்தில் போகிறதேயொழிய chavunism என்ற தளத்திற்கு வரவேயில்லை. அவனது அலைப்பேசியை அவள் கேட்டு பிரச்சனை செய்வதும் சந்தேகப்படுவதுமாக காட்சிகளில் பாலினங்களை மிக எளிதாக மாற்றி யோசிக்க முடியும். இவை அனைத்தையும்விட,  திருமணத்தை கிட்டத்தட்ட நெருங்கிவிட்ட ஓர் இணை, தங்களுக்கிடையிலான அத்தனை முரண்பாடுகளையும் அது சார்ந்த கிளை சேதிகளையும் முதன்முறையாக பேசி விவாதிப்பதைப் போல அடைசலாக அடுத்தடுத்து பேசிக்கொண்டே போவது, ஒரு மாதிரியான forced உணர்வைதான் தருகிறது.

நீ சந்தேகப்பட்டுட்ட, you are cheap’ என்ற அர்த்தத்தில் அந்தக் காதல் அங்கே முறிகிறது. இன்னொரு பியர் ஆர்டர் செய்யப்படுவதுடன் ஒருவழியாக சுபம்.



விமர்சனத்துக்கு உட்படுத்தப்படாத எந்த விஷயமும் காலப்போக்கில் காணாமல் போகும் என்பதே உண்மை. இது சித்தாந்தங்களுக்கும் பொருந்தும். எந்த சித்தாந்தமும் அதற்கான staunch வடிவத்தில் இன்று புழக்கத்தில் இல்லை. இடதோ வலதோ எல்லாமே அவரவர் வசதிக்கேற்ப வடிவம் மாறிக்கொண்டேதான் இருக்கும். தன்னால் எவ்வளவு தூரம் வளைந்துகொடுக்கமுடியுமோ அவ்வளவு தூரத்திற்குதான் ஒன்றை ஏற்றுக்கொள்ளமுடியும்

திராவிட முற்போக்கு ஆண்களுக்கு இருக்கும் ஆணாதிக்கத்தைச் சுட்டிக்காட்ட முனைந்திருக்கும் முதல் வெளிப்படையான முயற்சி. அதற்காகவே இயக்குநரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இலக்கு அத்தனை அர்த்தப்பூர்வமானது என்பதால், அதை கலையாக மாற்றுமிடத்தில் திணிப்புகளால் இப்படைப்பு திணறியிருந்தாலும், இதனை முழுமையாகவே ஏற்கச் செய்கிறேன். குறிப்பிட்டிருந்த இரண்டு pivot pointகளில் சறுக்காமல் இருந்திருந்தால் மனதிற்கு மிகவும் நெருக்கமான படைப்பாக நின்றிருக்கும் என்பது வருத்தம் மட்டுமே.

-

இதுவரை ஒரு படைப்பாக மட்டுமே எடுத்துக்கொண்டு பேசியிருக்கிறேன். தலைப்பில் இருக்கும் கருப்பு சிவப்பு, முயல்குட்டி எல்லாம் தாண்டி red label, black label, vat69, பச்சை கலர் பியர் பாட்டில் என இயக்குநருக்கே தெரியாத குறியீடுகளையெல்லாம் கண்டுபிடித்து பேச எனக்கு அத்தனை நாட்டமில்லை.  இதிலிருக்கும் அரசியலைப் பேச வேண்டுமா என்றால், 'கருத்து ஜெயமோகனுடையதா ஒளசேபச்சனுடையதா?' என்ற வாதத்தில் 'ஒளசேபச்சனதுதான்' என்று ஏற்பவன் நான். எல்லா கதாப்பாத்திரங்களிடமும் political correctness எதிர்ப்பார்ப்பது ஒரு படைப்பிற்கு செய்யும் அவமதிப்பு என்பது என் நம்பிக்கை. இதில் சிலர் முரண்படலாம். அவரவர் விருப்பம்.  

ஆனால் இதில் எந்தப் புள்ளியில் அரசியலின் அவசியம் உள்ளே வருகிறதென்றால், கருப்பின் அரைவேக்காட்டுத்தனங்களையும், காவியின் சங்கித்தனங்களையும், நீலம் உள்ளே நுழைந்து வெளிச்சம்போட்டு காட்டும்போதுதான். நான் அறிந்தவரையில், ரஞ்சித்தின் படைப்புலகம் அத்தனை கறார்த்தனமானது. நாயக பிம்பத்தில் இருப்பவர்களுக்கான political correctnessஇல் அத்தனை சிரத்தை எடுப்பவர். அவரது பெண்கள் மனவலிமை மிக்கவர்கள். பெண்ணியத்தின் இழை கதையோட்டத்தில் பிசிறில்லாமல் இருக்கும். ஒரு தலித்தை மறந்தும் கூட politically incorrectஆக சித்தரிப்பதில் விருப்பமில்லாதவர். பேட்டை நாவல் வெளியீட்டின் போது, அதில் சில கதாப்பாத்திரங்கள் கெட்ட வார்த்தை பேசுவதைக் குறிப்பிட்டு சொல்லிக்காட்டி மேடையிலேயே அதிருப்தியை வெளிப்படுத்தியவர். இயல்பில் இருப்பதைக் கூட படைப்பில் காட்டக்கூடாதென தன் political correctnessஇல் அத்தனை கறாராக இருக்கும் ஆசாமி. அவர் இப்படைப்பை endorse செய்வதை பெரியாரிஸத்தைக் கீறிப்பார்ப்பதாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்றால், நாளை ஒரு தலித் ஆணாதிக்கவாதியைப் பற்றிய சித்திரத்தையும் இதே நல்லெண்ணத்தோடு நீலம் வெளியிடும் என்று மனப்பூர்வமாக நம்புகிறேன். நன்றி.