பிம்பங்கள்

நண்பன் படத்தில் ஒரு இண்டெர்வியு காட்சி வரும். அதிகம் கொண்டாடப்பட்ட போலித்தனமான படத்தில் வந்த போலித்தனமான ஒரு காட்சி. கை கால்கள் முறிந்து, தேறி வந்து சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி ஜீவா பதிலளித்து கொண்டிருப்பார். இனி இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்ற ரீதியில் தத்துவார்த்தமாக அந்த பதில்கள் இருக்கும். நிறைவாக, உங்கள் வேலையை நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள், என் ஆட்டிடியுடை (சரியான தமிழ் பதம்?) நான் வைத்துக்கொள்கிறேன் என்பார். அவருக்கு அந்த பணி வழங்கப்படுவதோடு, டிப்ளோமேடிக்காக இல்லாமல் நேர்மையாக இருந்தமையால்தான் அது வழங்கப்பட்டதாகவும் காரணம் சொல்லப்படும்.
கொஞ்சம் அந்த காட்சிக்கு சில்லறைகளை சிதறவிட்ட பின் இயல்வாழ்க்கைக்கு வருவோம். தூங்கி எழுவதிலிருந்து, மீண்டும் தூங்க செல்லும் வரை எத்தனை முகமூடிகள் நமக்கு தேவைப்படுகின்றன. அம்மாவிடம், மனைவியிடம், கணவனிடம், தங்கையிடம், காதலனிடம், ஆட்டோ ட்ரைவரிடம், மேலாளரிடம், ஹோட்டல் வெயிட்டரிடம், குழந்தைகளிடம் என ஒவ்வொரு மட்டத்திலும் காரியம் சாதித்துக்கொள்ள எத்தனை வேஷம் தரித்துக்கொள்கிறோம். சில வேஷங்கள் நாமே மறந்து போய் நம்மோடே நிரந்தரமாகும் அளவிற்கு அத்தனை போலியாகத்தானே நாம் திரிந்துக்கொண்டிருக்கிறோம்.இங்கே எதில் உங்களால் நேர்மையாக இருக்கமுடியும். ஒரு நாள் உங்கள் முகமூடிகளை கலைந்துவிட்டு நடமாடி பாருங்கள். வாழ்க்கையின் கொடூரமான தனிமையை அன்று நீங்கள் உணரக்கூடும்.
நம் தவறைப் பூதாகரமாக சித்தரித்து, நம்மை சிறுமைப்படுத்தி உணர வைக்கும் முயற்சியாக அனுப்பப்படும் நீண்ட மெயிலுக்கு பற்களைக் கடித்துக்கொண்டாவது my sincere apologies என்று பதில் அனுப்புகிறோம். 'இப்படி செய்யவேண்டும்', 'வாய்ப்பே இல்லை' என்று சொல்லவேண்டிய இடங்களில் முறையே 'இப்படி செய்யலாம் என்று தோன்றுகிறது', 'வாய்ப்புகள் குறைவு' என்று சொல்கிறோம். இன்னொரு மனிதரிடம் நம் சுயத்தை இழந்து இப்படி பாசாங்காக நடந்து கொள்வதை பற்றி நாமே நொந்துக்கொண்டிருக்கும்போது, 'காலையிலிருந்து ஏன் மெசேஜ் பண்ணல' என்று வரும் செய்திக்கு, 'லவ் யூ' என்று அந்த மனநிலைக்கு ஒட்டாத ரிப்ளையும் ஒருவித பாசாங்குதான்.அலுவலக மொழி என்றொரு பதம் இருக்கிறது. முழுக்கவே பாசாங்கான மொழி அது. எதிர்வினைகளைக்கூட வாழைப்பழத்தில் ஊசியைப் போல மென்மையாக சொல்ல வேண்டும். 'தவறு' என்பதற்கு பதில், 'ஒரு விதத்தில் சரிதான், ஆனால்...' என்று சொல்லவேண்டும். 
இந்த பாசாங்கின் உட்சக்கட்டத்தை நாம் புரிந்துகொள்ள ஏதேனும் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்புகொண்டால் தெரியும். நம் குறைகளைக் கேட்பதற்காகவே பிறந்தவர்களைப்போல பேசிவிட்டு, எங்களால ஒன்னும் பண்ணமுடியாது, உன்னால முடிஞ்சத பாத்துக்கோ என்பதை எவ்வளவு நைச்சியமாக சொல்லுகிறார்கள் என்று கவனிக்கலாம். நட்சத்திர ஹோட்டல் சிப்பந்திகளும், விமான பணிப்பெண்களும் இந்த பாசாங்கிற்காகவே நேந்துவிடப்படப்பட்டவர்கள். 
குரு படத்தில் ஒரு வசனம் வரும்- 'ரெண்டு விதமான செருப்போட சுத்திட்டிருக்கேன், ஒன்னு தங்கத்துல, இன்னொன்னு வெள்ளில, யாருக்கு எது வேணுமோ அதால அடிச்சிட்டு மேல போய்க்கிட்டே இருப்பேன்', அதற்கு நானாஜி, 'அப்போ நீ என்னையும் செருப்பால அடிப்பியா' என்பார். 'உங்களுக்கெல்லாம் காதிதான்' என்பது பதில். நாம் சொல்லும்/கேட்கும், 'apologies'கள், 'may I'கள், 'தோன்றுகிறது'கள், 'லவ் யூ'கள், 'காத்திருந்தமைக்கு நன்றி'கள், 'sorry, but...'கள் எல்லாம் அப்படியான ஒவ்வொரு செருப்புதான். 
இப்படி போலியாகவே வாழ்க்கையைக் கடத்த நம்மை நிந்திக்கும் இந்த டிப்ளொமஸி நமக்கு அவசியமா என்றால் அவசியம் என்றுதான் படுகிறது. இந்த போலித்தனத்திற்கு நாம் தேவைகேற்ப இடம் கொடுத்திருந்தால் உலகத்தின் பெரும்பான்மையான போர்களைத் தவிர்த்திருக்கக்கூடும் என்றொரு சொல் உண்டு. நல்லுறவுகளைப் பேண இந்த போலித்தனம் அவசியம் என்பதுதான் முரண். சகோதரத்துவத்தில், காதலில், நட்பில் என உறவுகளில் கூட தேவைக்கேற்ப சிட்டிகையளவிலேனும் டிப்ளொமஸி அவசியமாகிறது. ஆனால், அது போன்ற நெருக்கமான மெல்லுறவுகளில் இந்த பாசாங்கு ஓரளவை மிஞ்சும்போது, ஒருவர் முழுக்கவே பொய்யான ஆசாமியாக முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கிவைக்கப்படுகிறார். எல்லோருக்கும் நல்லவனாக இருக்க துணிபதில் இருக்கும் சிக்கல் இது. கொஞ்சம் எதிரிகளும் தேவைப்படுகிறார்கள். அதற்காகவேனும் அவ்வப்போது முகமூடியை கழற்றி வைக்க வேண்டியிருக்கிறது. 
இணையத்திற்கும் இயல்பிற்கும் இடையே ஒரு மெல்லிய கோடு இருக்கிறது. இங்கே இயல்பை வெளிப்படுத்த ஒரு கட்டற்ற சுதந்திரம் நமக்கு இருப்பதாக நம்பப்படுகிறது. முக தாட்சயண்யம் எதுவும் இங்கே அவசியமில்லை. பாசங்கற்ற எதிர்வினைகளும், விவாதங்களும் இங்கே சாத்தியம். ஃபேக் ஐடியாக வலம் வருவதிலும் அடையாளத்தை மறைத்து இங்கு இயங்குவதிலும் இருக்கும் சாதகங்கள் அதுதான். இங்கே வந்து கெட்ட வார்த்தைகளைக் கொட்டி தீர்க்கும் ஒரு ஐடியை தனிப்பட்ட முறையில் எனக்கு தெரியும். நேரில் அத்தனை சுத்தமாக பேசுபவர். இந்த களம் அவரது போலியான சுத்தத்திற்கான ஒருவித escape zone. 
நாளடைவில், இணையம் இன்னொரு போலி முகத்திற்கான களமாகிறது. கும்பல் மனப்பான்மையில் ஒன்றிப்போய், போலி பகுத்தறிவு, போலி பெண்ணியம், போலி புரட்சி, போலி திராவிடம், போலி இலக்கியவாதம் என்று போலிகளின் கூடாரமாக ஃபேஸ்புக் மாறிவிட்டது போல தெரிகிறது. அவன் ஃபேஸ்புக்கில் எழுதுவதற்கும், அவன் இயல்பிற்கும் சம்பந்தமேயில்லை என்று யாரையேனும்பற்றி யாரோ சொல்லிக்கேட்டிருப்பீர்கள். ஃபேஸ்புக்கில் எழுதும் பிம்பத்தை வைத்து ஒருவரைக் காதலித்துவிட்டு, கண்ணீரில் முடியும் கதைகளை கேட்டுக்கொண்டேதான் இருக்கிறோம். இங்கேயும் பல செருப்புகள்தான் திரிந்துக்கொண்டிருக்கின்றன. இயல்பில் அதன் தேவைக்கேற்ப ஒரு போலித்தனம். இணையத்தில் அதன் கும்பலுக்கேற்ப ஒரு போலித்தனம். எந்த வரையறைகுள்ளும் சிக்காதவர்களாக தங்களை நிறுவ முயல்கிறார்களா என்று எப்படி யோசித்தும் புரியவில்லை. 
எழுபதுகளின் முடிவில் ஆதவன் எழுதியதைப் போல், 'பிம்பங்களைத் துறப்பதே இங்கே பிம்பமாகி வருகிறது.' அவ்வளவுதான்.
*