ஸினஸ்தீஸியா

நீங்கள் பார்க்கும் சிவப்புதான் நான் பார்க்கும் சிவப்பு என்று உங்களால் உத்தரவாதமாக சொல்லமுடியுமா?நீங்கள் பார்ப்பதுதான் உலகத்தில் எல்லோரும் பார்க்கும் சிவப்பா? அல்லது நீங்கள் பார்ப்பதுதான் சிவப்பு என்று எந்த அறிவை வைத்து சொல்கிறீர்கள்? இளையராஜாத்தனமான கேள்விதான். இப்படி வைத்துக் கொள்ளுங்கள், பிறந்ததிலிருந்தே நான் சிவப்பு என்று நம்பும் ஒரு வண்ணத்தை நீங்கள் மஞ்சள் என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்; என் மஞ்சள்தான் உங்களின் சிவப்பு. இதை, இல்லையென்று நம்மால் நிரூபிக்கமுடியுமா? உங்களை நான் அழைத்துக்கொண்டுப்போய், ரத்தம், குங்குமம், ரோஜா என நாம் சிவப்பு என்று நம்பும் ஒரு வண்ணத்திலான பொருட்களை காட்டுகிறேன். என் கண்ணுக்கு அவை என்னுடைய சிவப்பு நிறத்தில் தெரியும். உங்கள் கண்ணுக்கு அது உங்களின் சிவப்பு நிறத்தில் (அதாவது என்னுடைய மஞ்சள் நிறத்தில்) தெரியும். ஆக, இருவரும் காண்பது ஒரே பெயரிலான நிறத்தையேயொழிய ஒரே நிறத்தை என்று சொல்லிவிட முடியுமா? பிறப்பிலிருந்தே நாம் பார்க்கும் அந்த வண்ணக்கலவையிலான காட்சிகள்தான் எல்லோர் கண்களிலும் தெரிகிறதா? வேகமாக படித்திருந்தால் இந்த பத்தியில் நான் சொல்லியிருக்கும் சிடுக்கை நீங்கள் உணராமல் போவதற்குக்கூட வாய்ப்பிருக்கிறது.
இந்த தன்னுணர்வு சார்ந்த விஷயங்களை நிரூபிக்கவோ நிராகரிக்கவோ முடியாது. தன்னுணர்வு ஒரு விசித்திரம். குற்றமே தண்டனை படத்தில் விதார்த் சொல்லுவாரே, எல்லாருமே இப்படிதான் பாக்குறாங்க நெனச்சிட்டு இருந்தேன்னு, அது மாதிரிதான். அடுத்தவர்களின் காட்சி அவர்களுக்கானது. நாம் பார்க்கவே முடியாது. நான் காணும் உலகம் என்னுடைய வண்ணக்கலவையில் அத்தனை ரம்மியமாக இருக்கிறது. அது அடுத்தவனுக்கும் இதே அழகில் தெரிகிறதா என்ற அனுதாபம் ஒரு பக்கம் இருந்தாலும், அவனுக்கு என்னை விட இன்னும் அழகான காட்சிகளை அவனது வண்ணக்கலவை கொடுக்குமோ என்ற பொறாமையும் இருக்கிறது. நிறக்குருடு இருப்பவர்களிடம் பச்சை என்பதையோ சிவப்பு என்பதையோ எப்படி வார்த்தைகளால் விவரித்து சொல்லமுடியும். இப்படியே யோசித்துக்கொண்டு போனால் லைட்டாக கிறுக்கு பிடிப்பது போல இருப்பதால் நிற உணர்வு சார்ந்த தலைப்புகளை கொஞ்சம் மேய ஆரம்பித்தேன்.
அப்படியாக மேய்ந்ததில், ஸினஸ்த்தீசியா என்ற ஸ்வாரஸ்யமான ஒரு வியாதி (அப்படி சொல்லக்கூடாது; அந்த நோயாளிகளே அதனை வரம் என்கிறார்கள்) பற்றி நிறைய வாசிக்கக்கிடைத்தது.எளிமையாக சொல்லவேண்டுமெனில் இரு உணர்வுகளின் கலவை என்று புரிந்துகொள்ளலாம். அதில் முக்கியமான வகை, எண்-நிற அல்லது எழுத்து-நிற உணர்வுகள் சார்ந்த ஸினஸ்தீசியா. இந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு ஒவ்வொரு எழுத்தோ/எண்ணோ ஒரு வண்ணத்தை காட்டும். எ.கா. 7- ஊதா, 5- பச்சை, 2- மஞ்சள்...இப்படியாக. இந்த வகை ஸினஸ்தீசியா உடையவர்களை வைத்து நீண்ட அலசல்கள் நடத்தியிருக்கிறார்கள். 
மேலே சொன்ன உதாரணத்தின் அடிப்படையில், ஒருவரிடம் 5 என்று எழுதி காட்டினால், அவருக்கு அந்த 5 நாம் எழுதிய கருப்பு நிறத்திலும் தெரியும், அவர்களுக்கான பச்சை நிறத்திலும் தெரியும். அந்த பச்சை வண்ணமொன்றும் அரூபமாக மனக்கண்ணில் தெரிவதில்லை, கண்ணால் பார்ப்பதாகவே உணர்கிறார்கள். அவர்களிடம் ஐந்து என்று எழுதி காட்டினால் அந்த பச்சை நிறம் தெரிவதில்லை. ஐந்து என்பதை ரோமன் எண் முறை படி எழுதி காட்டினாலும் அந்த பச்சை நிறம் தெரிவதில்லை. ஐந்து என்று உச்சரித்தாலும் தெரிவதில்லை. ஆனால் அவ்வாறு உச்சரிக்கும்போது 5 என்ற வடிவம் மணக்கண்ணில் தோன்றினால் உடனே பச்சை லைட் எரிந்துவிடுகிறது. இதையெல்லாம் முதன்முதலில் வாசித்த நாட்களில் சூது கவ்வும் படத்தில் பகலவன் கேட்பது போல, என்ன செஞ்சா பாஸ் இந்த வியாதி வரும் என்று பெரிய ஏக்கமே வந்துவிட்டது.
உலகில் பல விஞ்ஞானிகள் ஸினஸ்தீசியா என்றதும் தெறித்து ஓடியிருக்கிறார்கள். இவனுகளுக்கு வேற வேலையில்ல என்று கடந்து போயிருக்கிறார்கள். தன்னுணர்வு சார்ந்த பிரச்சனைகளில் இதுதான் சிக்கல். நோயாளி என்ன சொல்கிறாரோ அதை நாம் அப்படியே நம்ப வேண்டும். பச்சைதான் எனக்கு தெரிகிறது என்றால் பொத்திக்கொண்டு நம்பத்தான் வேண்டும். ஆனால் விலயனூர் ராமச்சந்திரன் (அமெரிக்க இந்தியர்; நரம்பியல் விஞ்ஞானி) கடினமான சவால்களுக்கு பிறகு, அவர்களின் தன்னுணர்வை நிரூபிக்கிறார். ஓர் அட்டை முழுக்க 2 மற்றும் 5 எண்களை மட்டும் நிரப்பி, அந்த நோயாளிகளிடம் காட்டுவது. அவர்கள் அதைப் பார்த்து முடித்ததும், இரண்டு எண்களின் நிறமும் அவற்றை தனியே பிரித்து காட்டிவிடும், அவற்றின் அமைப்பின் வடிவம் அவர்களுக்கு சட்டென புலப்படும். எல்லா எண்களையும் கருப்பில் காணும் நமக்கு அந்த வடிவம் புலப்படாது 


இந்த வகை ஸினஸ்தீசியா போலவேதான் எழுத்து-வண்ணம் சார்ந்த வகையும். ஒரு வார்த்தையில் உள்ள எழுத்துகள் ஒரு வானவில்லையே கண்ணில் காட்டிவிடும். இவைகளை விட்டுவிடுங்கள். இசையைக் கேட்டால் சிலருக்கு வண்ணங்கள் தெரிகிறது. ஒரு சிறு இசை குறிப்பிற்கு ஒரு வண்ணம். அப்படியானர்வளுக்கு ஒரு பாடல் எப்படி இருக்கும். அவர்களின் பார்வையில் ராஜா- ரஹ்மான் குடுமிபிடி சண்டை போடும் நாம் எத்தனை அற்ப பதர்களாக தெரிவோம். சரி இதற்கெல்லாம் என்ன காரணம் என்றால், மூளையில் உணர்வுகளை ( குறிப்பாக நிறம் மற்றும் எழுத்து வடிவங்களை) புரிந்தறியும் இடங்களுக்கு நடுவிலிருக்கும் இணைப்புகளில் நடக்கும் ரசாயண கோளாறு. ஆனால் இந்த பிரச்சனை உள்ள யாரும் இதை சரி செய்துக்கொள்ள விரும்புவதில்லை. 
இன்னும் ஒரு படி மேலே போய், ஸினஸ்தீசியாவிற்கும் படைப்பாற்றலுக்கும் தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது, குறிப்பாக எழுத்தாளர்கள், கவிஞர்கள் (நா.முத்துக்குமாருக்கு இருந்திருக்கும்) மற்றும் ஓவியர்கள். யாருக்கு தெரியும், ராஜாவும் ரஹ்மானும் வெளியே சொல்லாமல் ஸினஸ்தீசியாவோடுதான் கோலோச்சிக்கொண்டிருக்கிறார்களாக இருக்கலாம். அதிலும் அப்படியான படைப்பாளிகளில் ஆறில் ஒருவருக்கு ஸினஸ்தீசியா இருக்கலாம் என்று சொல்கிறார்கள். உருவகங்களை அதிகமாக கையாளும் திறன் ஸினஸ்தீசியாவால்தான் சாத்தியப்படுகிறது என்றொரு பார்வையும் இருக்கிறது. 
உருவகமும் ஸினஸ்தீசியாவும் ஒன்றல்ல. உருவகத்தை ஸினஸ்தீசியாவின் எளிமையான வடிவம் என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். இதைப் பற்றி இன்னொரு கட்டுரை நீள்கிறது. முடிவில் உருவக குருடர்கள் இருப்பதாகவும் கண்டுபிடித்துவிட்டார்கள். அப்படியானவர்களிடம் ஒரு மிக சாதாரண உருவகத்தை சொன்னால் கூட (அவர்கள் கல்வியறிவிற்கு ஏற்ற உருவகம்) அவர்களால் சுத்தமாக அதனை புரிந்துகொள்ளமுடியாது. இன்னொரு ஐம்பது வருடங்கள் கழித்து ஏன் நம் வாலிப வயதில் நமக்கு காஜலைப் பிடித்தது, தமன்னா/ஹன்ஸிகாவைப் பிடித்தவர்களுக்கு மூளையில் என்ன கோளாறு இருந்தது என்றெல்லாம் சில்லுசில்லாக கண்டுபிடித்து சொல்லிவிடுவார்கள் என்று நினைக்கிறேன். அடுத்த நூற்றாண்டில் சமூக வலைதளத்தில் வந்து நான் இன்னாரின் ரசிகர் என்று கம்பு சுழற்றினால், அவருக்கு மூளையில் எந்த பகுதியில் ரசாயண பிரச்சனை என்று தெரிந்து போய்விடும். நம் தலைமுறையில் சாத்தியமில்லை. ஏதாவது டைம் ட்ராவல் சமாச்சாரம் கிடைத்தால் தேவலாம். நான்கைந்து பேரை நாராசமாக கிழித்து தொங்கவிடவேண்டும் போலிருக்கிறது
*
மார்ச் 2017