சங்கல்பம்

‘நாவமரத்தில் பால் சுரக்கிறது. பெரியம்மாவுக்குதான் ரொம்ப மேலுக்கு முடியாமல் இருக்கிறது.’ என்று கடிதத்தில் அப்பா எழுதியிருந்த இடத்தை நான் நிதானித்து கூட வாசிக்கவில்லை. ஒரு பதினைந்து பைசா தபாலட்டையில் எழுதிவிடக்கூடிய சேதிகளை முக்கால் ரூபாய் இன்லாண்ட் கடிதத்தில் நீட்டிமுழக்குவது அவரது வழக்கம். அதிலும் இதுபோன்ற தொடர்பற்ற வாக்கியங்களை அடுத்தடுத்து எழுதுவதில் விற்பன்னர்.
ஆனால் அடுத்த வாரத்தில், ஊருக்கு வந்து இறங்கியபோது விஷயம் வேறுவிதமாக இருந்தது. வீட்டிற்கு பின்னாலிருந்த ஒழுங்கையில் சனம் அடிக்கடி போவதும் வருவதுமாக இருந்ததை என்னவென்று விசாரிக்கப்போக, எல்லாம் அந்த நாவமரத்து பால் சுரக்கும் சமாச்சாரம்தான். நாவம்மாள் கோயில் புது விளக்கும் விசேஷமுமாக ஜேஜேவென இருப்பதாக அம்மா சொன்னார். ஓரெட்டு பார்த்துவிட்டு வரலாமென போனபோது, இரண்டாம் அடுக்கு கிளையில் ஒரு சிறிய தூக்குவாளி தொங்கிக்கொண்டிருந்தது. கடந்த ஒன்றரை வாரங்களுக்குள் அம்மரத்தில் ஆறு இடங்களில் வெடிப்பு உண்டாகி பால் வந்திருப்பதாக மாமா கை காட்டி சொல்லிக்கொண்டிருந்தார். எங்கிருந்தோ ஒரு பூசாரியை சம்பாரித்து கொண்டுவந்திருந்தார்கள். அவர் ஆளுக்கு அரை கரண்டி பாலை கையில் ஊற்றியதும், நாவிலும் தலையிலும் இட்டுக்கொண்ட எல்லோரும் தித்திப்பாக இருப்பதாக சொன்னார்கள். வேறுவழியின்றி ஒப்புக்கொண்டேன்.
அந்த இரவில் வேலியோரத்தில் குத்தவைத்திருந்த மாமாதான் முதன்முதலில் அதைப் பார்த்திருக்கிறார். என் பால்ய பிராயத்தில் குறைந்தபட்சம் நூறு விதமாகவேனும் அவரே இந்தக் கதையை என்னிடம் சொல்லியிருப்பார். துவக்கமும் தொடர்ச்சியும் எப்படியிருந்தாலும் கதையின் உட்சகட்டத்தை மட்டும் ஒரே மாதிரியான சுவாரஸ்யத்துடன் சொல்லிவிடுவார். அதுவும் கரெண்ட் கட் ஆனால் எங்கிருந்துதான் வருவாரோ, தூக்கி மடியில் வைத்துக்கொண்டு கதையை ஆரம்பித்துவிடுவார். அது அரவணைப்பல்ல; ஒரு விதத்தில் மூச்சுமுட்ட வைப்பது. அந்த இரவு, எல்லாம் ஒழுங்காக போய்க்கொண்டிருந்த வேளை, பேட்டரிக்கட்டை திடீரென எரியாமல் போக கிலியாகி பாதி காரியத்திலேயே எழுந்துவிட்டாராம். உடனடி இருள் கண்ணுக்கு பழகாமல் இருந்திருக்கிறது. அதற்குள், அண்டிராயரைத் தோளில் போட்டுக்கொண்டு கைலியை மட்டும் பட்டும்படாமல் இறக்கிவிட்டுக்கொண்டு, நாவமரத்தைத் தாண்டி மேட்டுக்கு குதித்து ஏறும்போதுதான், நெற்றியில் அது அடித்திருக்கிறது. மரக்கிளை மாதிரியில்லாமல் மெத்தென இருந்திருக்கிறது. ஈரம் வேறு. உற்றுப்பார்த்தபோதுதான் பாவாடைக்கிடையில் மூத்திரநெடியுடன் இரு கால்கள் புலப்பட்டிருக்கின்றன. நாவம்மாள் சுருக்கு வைத்துக்கொண்டு தொங்கிக்கொண்டிருந்ததை மாமாதான் முதலில் பார்த்திருக்கிறார்.
‘ஒம் பெரியப்பனதான் கெட்டிக்கனும்ன்னு இருந்தா.. ஏதேதோ ஆயி நடக்காம போயிருச்சு..’ இந்த இடம் வரும்போது மாமாவின் குரல் தொய்வாகிவிடும். நாவம்மாள் இந்த ஒரே தலைமுறையில் சாமி ஆனதையும் கதை கதையாக பலர் சொல்லி கேட்டிருக்கிறேன். அவள் தூக்குப்போட்டுக்கொண்ட அடுத்த நாள்தான் பெரியம்மா கருவாகியிருக்கிறாள். அதிலிருந்து அடுத்த ஏழு மாதங்களுக்கு ஊரிலிருந்த அத்தனை கர்ப்பவதிகளுக்கும் அம்மை போட்டிருக்கிறது. பிறந்த பெண் குழந்தைகள் எல்லாம் பிணமாகவேதான் பனிக்குடத்திலிருந்து வெளியாகியிருக்கின்றன. எட்டு சாவு விழுந்ததும் நாவம்மாளை சாமியாக்கிவிட்டார்கள். அம்மை போட்டு கிட்டத்தட்ட நிறைமாத சூலிலிருந்த பெரியம்மாவைப் பட்டினி போட்டு பதினெட்டு நாள் கணக்கு வைத்து பால்குடம் தூக்கவைத்திருக்கிறார்கள். பதினோராவது நாள் களைத்து மயக்கமான பெரியம்மா மூச்சிரைத்து விழ, மஞ்சள் புடவையின் அடியில் நீர் மண்ட ஆரம்பித்ததாம். பெரியப்பாவுக்கு அன்றுதான் முதன்முதலில் சாமி வந்திருக்கிறது. அப்பத்தாவே பிரசவம் பார்த்துதான் விஜயாக்கா பிறந்த கதையை அப்பாவே அடிக்கடி சொல்லியிருக்கிறார்.. பெரியம்மாவுக்கு அன்றோடுதான் பேச்சு வராமல் போயிருக்கிறது. அந்த நாளிலிருந்து ஊரில் ஒரு கருச்சிதைவு கூட ஏற்பட்டதில்லை என்பது நாவம்மாளின் கிருபையென மாமா சத்தியம் செய்வார்.

எனக்கு விவரம் தெரிய ஆரம்பித்த நாட்களில், பெரியப்பா நாவம்மாள் கோவிலில் அடிக்கடி சாமியாடுவதைப் பார்த்திருக்கிறேன். அசலூரில் இருந்தெல்லாம் கர்ப்பவதிகள் அங்கே வேண்டுதலுக்காக வந்துப்போவார்கள். காலவோட்டத்தில், எப்படி அந்த வழக்கமெல்லாம் ஓய்ந்துப்போனது என்றே தெரியவில்லை. கோயிலும் நல்லநாள் பெருநாளில் மட்டும்தான் திறக்கப்பட்டது. சில நாட்கள் பூசாரி வந்துப்போவார். சமயங்களில் டவுனிலிருந்து யாராவது ஐயரைக் கூட்டிவருவார்கள். பெரியப்பாவே ஓரிரு முறை காவித்துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு தீபார்த்தனை காட்டியது நினைவிருக்கிறது. சரியாக நினைவிருக்கும் பட்சத்தில் என் பத்தாம் வகுப்பின் கோடை விடுமுறையில் ஒருமுறை பெரியப்பா சாமியாடினார். அதுதான் கடைசி. அதெல்லாம் முன்பு அவருக்கு வழக்கமாயிருந்த சுருட்டு பழக்கத்தின் லாகிரியாக இருக்கவேண்டும் என்று பின்னாளில் நினைத்துக்கொண்டேன். விஜயாக்காவுக்கு கல்யாணம் ஆனதிலிருந்துதான் எல்லாமே மாறிப்போய்விட்டது. அனேகமாக நாவம்மாளையுமே எல்லோரும் மறந்துப்போய்விட்டார்கள்.
இந்த பால் சுரக்கும் வைபவம்தான் மீண்டும் எல்லாவற்றையும் கிளறிவிட்டிருக்கிறது. நாவம்மாள் கோவம் கொண்டுவிட்டதாக சிலர் கிளப்பிவிட்டதுதான் போதும். ஒரே வாரத்தில் அந்த மரத்தையும் அந்த சிறு கோயிலையும் அடையாளம் தெரியாத அளவிற்கு மாற்றிவிட்டார்கள். காலையிலிருந்து பொழுது சாயும் வரை ஆட்கள் வந்துப்போய்க்கொண்டிருந்தார்கள். புல் செத்தைகளையெல்லாம் கொத்திப்போட்டுவிட்டு சைக்கிள், டூவீலரெல்லாம் வந்துப்போகும் அளவிற்கு பாதை தயாராகிவிட்டது. துபாயிலிருந்த அத்தான் ஒருவர் கோயிலைப் புதுப்பித்து கட்டி கும்பாபிஷேகம் நடத்த நிதி கொடுக்க முன்வந்தார். கரையான் அரித்துப்போயிருந்த நாவம்மாளின் பழைய புகைப்படம் ஒன்றை ஓவியரை வரச்சொல்லி கொடுத்து சாமியாக்கி வரைய சொன்னார்கள். நான் அந்தப் படத்தைக் கையில் வாங்கிப்பார்த்தபோது ஒரு கணம் உடம்பே சில்லிட்டுப்போனது. ‘விஜயா மாரியே இருக்கால்ல?’ மாமாதான் கேட்டார். ஒரு பொட்டு வித்தியாசம் இருக்கவில்லை. அத்தனை விசேஷங்களுக்கு நடுவில், எல்லோரும் பெரியப்பாவுக்கு மீண்டும் சாமி வரும் என்று எதிர்ப்பார்த்தார்கள். மனிதர் அந்தக் கோயில் பக்கமே வரவில்லை.
ஒரு மாலை அப்பாவிடம் வந்து ஏதோ பேசியிருந்துவிட்டு போனவர், வேலி வரைக்கும் போய்விட்டு வீட்டைத் திரும்பிப் பார்த்தார். அவர் பார்க்கும் திசையில் ஒரு வேப்பமரம்தான் நின்றுகொண்டிருப்பதை நானும் பார்த்தேன். என்னை அருகில் வரும்படி செய்கை காட்டியவர், ‘ஆள அலச்சாந்து அந்த மரத்த கழிச்சு விடு..’ என்றார். ஒன்றும் புரியாமல் நான் பார்த்துக்கொண்டிருக்க, ‘சனிக்கெழமக்குள்ள கழிச்சுவுட்ரு..’ என்று மீண்டும் சொல்லிவிட்டு சைக்கிளைத் தள்ளிக்கொண்டு நடக்க ஆரம்பித்துவிட்டார். 
‘எதுக்கு வந்துட்டு போனாரு இப்ப?’
‘பெரியம்மாளுக்கு ரொம்ப முடியாம இருக்காம்.. முடிஞ்சுகிடிஞ்சு போயிரும்போல’ எந்த தடுமாற்றமும் இல்லாமல் அப்பா சொன்னார்.
‘வந்தா சும்மா போவாம.. மரத்த வெட்டு மசுர வெட்டுன்னு.. இதே பொழப்பு இந்தாளுக்கு..’
‘எந்த மரத்த சொன்னாரு..’
‘தெக்கால நிக்கிற வேப்பமரத்த..’
சிறிது யோசனைக்கு பிறகு, ’அவரு சொன்னபடியே செய்யி.. ’ என்றார். 
எனக்கு ஏனோ அதை நிச்சயம் செய்துவிடக்கூடாது என்று தீர்மானமாக தோன்றியது. அப்பாவும் ஓரிரு முறை கேட்டுக்கொண்டுதான் இருந்தார்.ஆள் கெடைக்கல என ஒப்பேற்றி இழுத்தடித்து மூன்று நாட்கள் ஆயிருக்கும். நான்காவது நாள் அதிகாலை ஒன்றுக்கு போவதற்காக வேலியோரத்திற்கு போனப்போதுதான் அதைப் பார்த்தேன். அத்தனை இருட்டிலும் மரத்தின் கீழ் கிளையில் ஒரு நீண்ட பொதிமூட்டை போல ஏதோ தரையை உரசிக்கொண்டு தொங்கிக்கொண்டிருந்தது. நெருங்கிப்போய் பார்த்தேன். இருபது மைல் தாண்டி கட்டிக்கொடுத்திருந்த விஜயாக்கா வயித்தில் எட்டு மாச குழந்தையுடன் அந்த வேப்பமரத்தில் வந்து தூக்குப்போட்டுக்கொண்டிருந்தாள். 
வேலிக்கு குறுக்காக ஓட்டமாக ஓடிப்போய் பெரியப்பா வீட்டை அடைந்தபோது, சட்டை பித்தான்களைப் போட்டவாரே வீட்டிலிருந்து வெளியே வந்தவர், வாயிலிருந்த கோழையை ஒரே உறுமலில் பெரட்டி துப்பிவிட்டு, ’அங்க விஜயா வந்துருச்சா? இங்க பெரியம்மாளுக்கும் முடிஞ்சுப்போச்சுய்யா’ என்று என்னைப் பார்க்காமலேயே சொன்னார்.
சரியாக அந்த அதிகாலையுடன் அந்த நாவமரத்தில் பால் சுரப்பதும் நின்றுபோனது.
*