ஸ்வீட் ட்ரீம்ஸ்

எம்பிபிஎஸ் முடித்துவிட்டு எம்எஸ் சேருவதற்குமுன் நானும் நண்பனும் திருவல்லிக்கேணியில் தங்கி நுழைவுத்தேர்விற்காக ஆயத்தமாகிக்கொண்டிருந்தோம். அது கொஞ்சம் கட்டுக்கோப்பான மாணவர் விடுதி. உடனிருப்பவர்கள் பெரும்பாலும் சி.ஏ. மாணவர்கள், மற்றவர்கள் சட்டக்கல்லூரி மாணவர்கள். அந்த விடுதி வார்டன் 60-70 வயதுக்காரர். அவரது மனைவிக்கு ஒரு சாமான்யனுக்கு தெரியும் எல்லா நோய்களும் இருந்தன. விடுதி வளாகத்திற்குள்ளேயே இருக்கும் அவரது வீட்டிற்கு, அவ்வப்போது எதும் மருத்துவ உதவிகள் வேண்டுமெனில் அழைப்பார். நானும் நண்பனும் செல்வோம்.
நாளடைவில் இது கொஞ்சம் அதிகமானது. முதலில் அவர் அழைக்கும்போது அதிலொரு தயக்கம் தெரியும். பின்னர் அது இல்லாமல் போனது. அவர் உரிமையாக எங்களிடம் பழக ஆரம்பித்துவிட்டார் என்பதைவிட, கொஞ்சம் அதிகார தொனியில் நடந்துகொள்ள ஆரம்பித்துவிட்டார் என்றுதான் எங்களுக்கு தோன்றியது. அல்லது, அதுநாள் வரை இருந்த அந்த சிறு தயக்கத்தை, எங்களின் ஈகோ உள்ளூர ரசித்திருக்கவேண்டும். கசப்பு வந்துவிட்டது. அதில் மேலும் பாகற்காயை பிழிந்துவிட்டது அந்த விடுதியின் வாட்ச்மேன். அவர்தான் எங்களை அழைக்க வருபவர். முதலிலெல்லாம் அறைக்கே வந்து வார்டன் கூப்ட்டாரு சார் என்று அழைக்கும் அந்த மனிதர், போக போக சார் காணாமல் போனது; வார்டன் கூப்ட்டாரு, வாங்க- வார்டன் கூப்ட்டாரு வாங்கப்பா- வாங்கப்பா- கொஞ்சம் நாட்களில் அறைக்கெல்லாம் வருவதில்லை; கீழே நின்றபடியே மாடியிலிருக்கும் எங்கள் அறையை நோக்கி, யபா வாங்கப்பா- டாக்டரே காது கேக்லியா உங்களதாம்பா, வாங்கப்பா. ஒரே நாளில் நான்கு முறை, ஆறு முறை. சீண்டப்பட்டுவிட்டோம்.
ஒரு பின்னிரவில் செகண்ட் ஷோ படத்திற்கு போய்விட்டு விடுதிக்கு வரும்போது அந்த வாட்ச்மேன் ரொம்பவே அலுத்துக்கொண்டு கதவை திறந்துவிட்டார். உடன் வந்த நண்பனை ஏதோ கொஞ்சம் மரியாதை குறைவாக பேசிவிட்டதாக அறைக்கு வந்து சொல்லிக்கொண்டிருந்தான். அடுத்த நாள் காலை நாங்கள் தூங்கி எழுந்துவந்து பார்க்கும்போது வாட்ச்மேன் அறையில் பெரிய கும்பல். போலீஸ் ஐந்தாறு பேர் நின்றுகொண்டிருந்தார்கள். பக்கத்து அறை நண்பர், அவர் தலை திருகி கொல்லப்பட்டிருப்பதாக வந்து தகவல் சொன்னார். தூக்கிவாரிப்போட்டது. ஒரு கண் முகத்தில் இல்லையென்றும் சொன்னார். நாங்கள் போய் பார்ப்பதற்குள் உடல் அப்புறப்படுத்தப்பட்டுவிட்டது. கடைசியாக அவரை யார் பார்த்தது என்று கேட்கும்போது நாங்கள் மூச்சேவிடவில்லை. மதியம் அறைக்குள் வந்த நண்பன், உன் செருப்பில் எப்படி ரத்தக்கறை என்று சந்தேகத்துடன் கேட்டான். காலையில் அந்த அறைக்கு போயிருக்கும்போது பட்டிருக்கும் என்று சொன்னேன். உன் புத்தக அலமாரியை திறந்து பார் என்றான். அதில் ஆஞ்சநேயர் படத்திற்கு கீழே ரத்தம் உறைந்த ஒரு கண் இருந்தது. நான் விநாயக பக்தன். அவன்தான் ஆஞ்சநேயர் கோவிலுக்கு போவான். எனக்கு அந்த கண்ணைவிட, அந்த ஆஞ்சநேயர் படம்தான் உச்சியில் வியர்க்கவைத்தது. இருவரும் சேர்ந்து அந்த எங்களுக்கு சம்பந்தமேயில்லாத கொலையை எப்படி மறைக்கலாம் திடீரென திட்டம் போட ஆரம்பித்துவிட்டோம். அப்போது நாங்கள் முந்தைய நாள் படம் முடிந்து திரும்பிவரும்போது, இன்னொரு முறை வாட்ச்மேன் கதவை திறக்கும் சத்தம் கேட்டதும், ஜன்னல் வழியாக விடுதி வாயிலை பார்க்கும் போது, ஒரு காரின் ஹெட்லைட் அணைவது தெரிந்ததும் நினைவுக்கு வந்தது. அந்த விடுதியில் கார் வைத்திருப்பவர் ஒருவர்தான். காலையில் அந்த மரணசெய்தியை எங்களிடம் சொன்னவர் அவர்தான்.
மரகதநாணயம் படம் பார்க்கும்போது இரும்பொறை அரசன் லாரி வடிவில் ஆவியாக வரும்போது, அந்த லாரியின் ஹெட்லைட் எரிகிறது. அது ஒரு துரு பிடித்த பழைய லாரி. அதன் வடிவமைப்பே விபத்து ஏற்படுத்தவே உருவாக்கப்பட்டதைப்போல இருக்கிறது.அந்த லாரி ஹெட்லைட் எரியும்போது எனக்கு அந்த விடுதி வாசலில் தெரிந்த காரின் ஹெட்லைட்தான் நினைவிற்கு வந்தது. இயக்குனருக்கோ கலை வடிவமைப்பாளருக்கோ அந்த லாரி கனவில் வந்த வடிமாக இருக்கலாம். எனக்கு அப்படிதான் தோன்றியது. காரணம் இரண்டாம் பத்தியில் விவரிக்கப்பட்ட என்னால் எப்போதும் மறக்கமுடியாத கொடுங்கனவுதான். வழக்கமாக அதிகாலை ஐஸ்ஹவுஸ் பள்ளிவாசல் தொழுகை சத்தத்தில் கண்விழிப்பவன், இந்த கனவின் முடிவில் மூன்று மணிக்கு வியர்த்து எழுந்தேன். முழு கனவையும் அப்படியே மீட்டுருவாக்கம் செய்யமுடியவில்லை. என்னென்னவோ தொடர்பில்லாத காட்சிகளெல்லாம் இடையில் வந்திருந்தன. அவற்றை கணக்கிலெடுக்கவில்லை. எனக்கு புரிந்த/ என் அச்சத்தை அதிகப்படுத்தக்கூடிய/ எனக்கு கோர்வையாக தெரிந்த சம்பவங்களை மட்டுமே கணக்கிலெடுத்துக்கொண்டிருக்கிறேன் என்பது பின்னாளில்தான் புரிந்தது.
ஃபிராய்டின் Interpretation Of Dreams கனவுகளுக்கான பொருள்விளக்கத்தை அறிய முனைபவர்களுக்கு ஓர் அட்டகாசமான புத்தகம். புத்தகம் பல படிகளாக கனவுகளை அலசும். அதில் குறிப்பாக, ஃபிராய்ட் தான் முதன்முதலில் பொருள்விளக்கம் காண முயற்சி செய்த கனவினை விவரித்திருக்கும் 'ஐர்மா'ஸ் இன்ஜெக்ஷன்' ஒரு ஸ்வாரஸ்யமான அத்தியாயம். ஹிஸ்டீரியாவால் பாதிக்கப்பட்டிருக்கும் ஐர்மா என்ற பெண் அவரிடம் பாதிக்கு மேல் சிகிச்சையை தொடராமல் போய்விடுகிறாள். ஐர்மா ஓர் இளம் விதவை. ஃபிராய்டின் தோழியும்கூட. வேறோர் ஊரில் இருக்கும் ஐர்மாவை, திடீரென ஒரு நாள் சந்திக்கும் ஃபிராய்டின் நண்பரான மருத்துவர் டாட், அவள் இன்னும் வியாதி குணமாகாமல் அவதிப்படுவாதாக சொல்கிறார். இதனை அறியும் ஃபிராய்ட், மருத்துவர் எம் என்பவருக்கு அது குறித்து சந்தேகங்கள் கேட்டு கடிதம் எழுதுகிறார். அந்த இரவு ஃபிராய்டுக்கு அந்த ஒரு கனவு வருகிறது. 
பெரிய கூடாரத்தில் ஒன்றில் ஒரு பிரம்மாண்டமான விருந்து உபசரிப்பு நடக்கிறது. அங்கே ஃபிராய்ட் ஐர்மாவை சந்திக்கிறார். அவளைத் தனியே அழைத்து சென்று, உனக்கு இன்னும் தொந்தரவுகள் சரியாகாமல் இருப்பதற்கு நீ முழுவதுமாக சிகிச்சை எடுத்துக்கொள்ளாததுதான் காரணம் என்கிறார். அவள் தனக்கு தொண்டையில்/குடலில் வலி இருப்பதாக சொல்கிறாள். அவளின் தயக்கத்தையும் மீறி ஃபிராய்ட் அவள் வாயைத் திறந்து பரிசோதிக்கிறார். உள்ளே வெள்ளை வெள்ளையாக கோடுகள் தெரிகின்றன. நாசி எலும்பைப் போல உள்வாய் வீங்கி இருக்கிறது. மருத்துவர் எம்'ஐ அழைக்கிறார். அவரும் அதனை ஊர்ஜிதப்படுத்துகிறார். அருகில் மருத்துவர் டாட்டும் இருக்கிறார். முடிவில் மருத்துவர் எம், ஐர்மாவிற்கு டிப்தீரியா இருப்பதற்கான அறிகுறிகள் இருப்பதாகவும், வயிற்றுப்போக்கு போனால் அந்த நச்சு உடலைவிட்டு போய்விடும் என்றும் சொல்கிறார். ஐர்மாவிற்கு மருத்துவர் டாட் முன்பொருமுறை போட்டிருந்த ஊசிதான் ஐர்மவின் நோய்தொற்றிற்கு காரணியாக இருக்கவேண்டும் என்றும் அந்த கனவு முடிகிறது. 
இந்த கனவை ஃபிராய்ட் அக்கு அக்காக பிரித்து அலசுகிறார். முதலில் ஐர்மாவின் நோய் சரியாகாமல் நீடிப்பதற்கு காரணம் அவள் சிகிச்சையை முழுமையாக தொடராதது; இரண்டாவது மனோதத்துவ சிகிச்சையில் ஹிஸ்டீரியா குணமாகியிருக்கும். அதற்கு சம்பதமில்லாத டிப்தீரியா தொந்தரவிற்கு ஃபிராய்ட் பொறுப்பாகமுடியாது; மூன்றாவது, வயிற்றுப்போக்கினால் உடலின் நச்சுகள் வெளியேறும் என்ற ஹீலர் பாஸ்கர்த்தன கருத்துகளை கொண்டிருக்கிறார் மருத்துவர் எம்; நான்காவது, மருத்துவர் டாட் போட்ட அசுத்தமான ஊசியின் விளைவாய்தான் ஐர்மாவின் இன்னல்கள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இவை முறையே, ஐர்மா மீதான குற்றச்சாட்டு, தன் சிகிச்சையில் எப்படி தவறிருக்கமுடியும் என்ற வறட்டு ஈகோ, மருத்துவர் எம் மீதான தொழில்முறை எள்ளல், உன் சிகிச்சை தோல்வியால் ஐர்மா இன்னும் அவதிப்படுகிறாள் என்று அன்று தெர்வித்த மருத்துவர் டாட் மீதான வெறுப்பு ஆகியவற்றை அழுத்தமாக பதிவுசெய்கிறது. இதன்மூலம் கனவுகள் எனப்படுபவை ஆழ்மன விருப்புவெறுப்புகளின் வடிகால் என்று ஃபிராய்ட் கொண்டு செல்வார். இந்த நான்கு மையச்சரடுகளைத் தவிர, அந்த கனவில் இருக்கும் ஸ்வாரஸ்யமான குறியீடுகளை பக்கம் பக்கமாக விளக்கிக்கொண்டே போவார்.
நம்முடைய ஒரு கனவு மூவாயிரத்து சொச்சம் மிஷ்கின் படங்களை விட அதிக குறியீடுகளை கொண்டது. கனவில் காதலியின் குரலில் எட்டாம் வகுப்பு மேத்ஸ் டீச்சர் பேசுவார். அத்தனையும் குறியீடு. கவனமாக அனைத்தையும் நினைவுக்கூரவேண்டும். தூங்கி விழித்து எவ்வளவு சீக்கிரம் முடிகிறதோ அவ்வளவு சீக்கிரம் அத்தனையும் நினைக்கூரவேண்டும். சீரற்ற முறையில் வரும் நினைவுகளை கோர்க்க எந்த முயற்சியும் எடுக்கக்கூடாது. அந்த முயற்சி கொஞ்சம் புனைவை உள்ளே கொண்டுவந்துவிடும். கனவின் பொருள்விளக்கத்தை நாம் அறிய முடியாமல் போய்விடும். குறியீடுகளை ஒவ்வொன்றாக பின்னர் டீகோட் செய்துக்கொள்ளலாம். ஏனெனில், ஒரு கனவைத் தெளிவாக நினைவுக்கூர்வது ஆக்கப்பூர்வமான ஒரு படைப்பிற்கு உதவலாம். அகஸ்ட் கெகுலே என்பவருக்கு கனவில் வந்த பாம்பு தன் வாலையே கடிப்பது போன்ற காட்சிதான், பென்சீன் என்ற வேதிப்பொருளின் அமைப்பை அவருக்கு கண்டுப்பிடிப்பதற்கான குறியீடாக அமைந்ததாம்.
கனவில் சிவப்பு நிறம் வந்தால் காதலையோ அழிவையோ குறிக்குமாம். (இரண்டும் ஒன்றுதான். ஹென்ஸ் ப்ரூவுடு). கனவில் கேக் வந்தால் ஏதோ கொண்டாட்டம் வரப்போகிறதாம். கனவில் கால்கள் தெரிவது விடுதலையுணர்வை குறிக்குமாம். வைட்டமின் பி காம்ப்லக்ஸ், தத்ரூபான கனவுகள் உருவாக உதவுகிறதாம். இப்படியாக கனவுகள் குறித்து நிறைய இருக்கின்றன. செய்யவேண்டியதெல்லாம் ஒன்றுதான். கனவை தூங்கி விழித்தவுடன், தெளிவாக நினைவுக்கூரவேண்டும். கடந்த நிகழ் எதிர் காலங்களின் கதம்ப சரக்கு அதில் இருக்கும். திருமணத்திற்கு சில நாட்கள் முன்பு எனக்கொரு கனவு வந்தது. மணமேடையில் நீல நிற புடவையுடன் வந்து மணப்பெண் அமர்கிறாள். அம்மா தாலியெடுத்து கொடுக்க, நான் கட்டுகிறேன். அந்த பெண்ணின் முகத்தை எவ்வளவு யோசித்தும் நினைவுக்கூரவே முடியவில்லை. அன்று மதியம் அனுஷ்யாவிடம் இதனை சொன்னேன். நிதானமாக எந்தவொரு சலனமுமின்றி கேட்டுக்கொண்டிருந்தாள். சில வாரங்கள் கழித்து திருமண ஜவுளி எடுக்க போயிருந்தப்போது, அம்மாவிடம் சொல்லி நீல நிற புடவையை தேர்வு செய்து எடுத்துக்கொண்டாள். அறிவியலையெல்லாம் வீட்டிற்கு வெளியே கழட்டிவைத்துவிட்டு வரவேண்டும் என்பதற்கான குறியீடு அது. Follow ur dreams. Closely.
°