மாற்றான் காலணி

இந்த வருடத்தில் எனக்கு ரொம்பவே பிடித்திருந்த இரண்டு படங்களும் ஏதோவொரு பொதுத்தன்மை இருப்பதாக தோன்றியது. அது இதுவாகத்தான் இருக்கமுடியும். முதலில், துருவங்கள் பதினாறு. படத்தில் அத்தனை உண்மைகளும் உடைத்து சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், ரஹ்மான் அந்த கெளதம் என்ற கதாப்பாத்திரத்திடம் சொல்வார், 'இந்த மொத்த கதையையும் உன்னோட பார்வைல சொன்னா, அதுல நான்தான் வில்லன்' என்பார். அந்த ஒரு வசனம் அந்த படத்தை பத்து படிகள் தூக்கி நிறுத்தியதாக எனக்கு தோன்றியது. படம் முடிந்து வீட்டிற்கு வரும்போது கெளதம் தரப்பிலிருந்து கதை சொல்லப்படுவதை யோசித்துக்கொண்டுதான் வந்தேன். இது விருமாண்டிக்கும் கொத்தாலனுக்கும் இடையேயான உண்மை/பொய் கதைசொல்லலல் அல்ல. ஒரே கதை. அதிலிருக்கும் இரு முக்கிய பாத்திரங்களின் கண்களின் வழி அதே உண்மை கதை. இங்கு கதை என்பது வெறும் கதை மட்டுமல்ல. அந்த பாத்திரங்களே அவற்றை விவரிக்கும்போது, அதில் வெளிப்படும் பேருணர்ச்சிகளும் சேர்ந்ததுதான் அதன் முழுவடிவம். மூன்றாம் மனிதன் கதை சொல்வதைவிட, எழுத்தாளனே கதை நாயகனாக நின்று சொல்லும் கதைகளில் எனக்கு கொஞ்சம் கூடதல் ஈடுபாடுண்டு. இந்த மாதிரியான கோணம் கிட்டத்தட்ட பெரும்பாலான படங்களில் சாத்தியம்தான். ஆனால் அது சொல்லப்படுவதில்லை. இந்த படத்தில் இந்த வசனம் பகிரங்கமாக சொல்லப்படும் இடம், ஏதோ மாபெரும் ஒரு தத்துவநிகழ்வைப் போல இருந்தது.

இப்போது விக்ரம்வேதா. 'சைமன் ஒரு போலீஸ், புள்ளி ஒரு க்ரிமினல்' என்று விக்ரம் சொல்லும்போது, வேதா சொல்கிறான் 'எதுனாலும் எமோஷன் ஒன்னுதான சார்'. சரியாக இந்த வசனத்திலிருந்துதான் அந்த படம் எனக்கு மிகவும் பிடித்துப்போனது. அபத்தமாக தெரியலாம். ஒரு போலீஸ்காரன் எப்படி ஒரு க்ரிமினலின் மன நிலையிலிருந்து யோசிக்கமுடியும்? விக்ரமிடம் போலீஸ் க்ரிமினல் என்ற வேற்றுமை அழுத்தமாக இருக்கிறது. அவனால் போலீஸை போலீஸாகவும் க்ரிமினலைக் க்ரிமினலாக மட்டுமே பார்க்கமுடியும். அந்த பார்வைதான் அவனை க்ரிமினலின் மகன் க்ரிமினலாகதான் ஆவான் என்று எண்ணவைக்கிறது. க்ரிமினலின் பார்வையிலிருந்து போலீஸைப் பார்க்கவைக்க வேதா தவணைமுறையில் சில கதைகள் சொல்கிறான். சில திறப்புகள் அவனுக்கு கிடைக்கின்றன. அட்டகாசம்.

எழுத்தப்பட்ட வரலாறுகள் எல்லாமே நாயகனின் பிம்பத்தை தூக்கிப்பிடிப்பதற்காக எதிரியை அத்தனை கொடூரமானவனாக சித்தரிக்கின்றன. அவனுக்கான நியாயங்கள் மறைக்கப்படுகின்றன. அவன் தரப்பில் இருக்கும் ஆசாபாசங்கள், சோகம், அழுகை, அவனின் செயலுக்கான விளக்கங்கள் எல்லாமே இருட்டடிப்பு செய்யப்பட்டு ஒருதலைபட்சமான விவரணைகளை நம் முன் அடுக்கி வைக்கிறார்கள். சில மாற்று முயற்சிகள் கவனிக்கப்படவேண்டியவை. கண்ணுக்கு தெரிந்த தூரத்தில் மகாபாரத கதையை கெளரவர்கள் பார்வையில் சொன்ன தளபதி திரைப்படம். இங்கே துரியோதனன் அத்தனை கெட்டவன் இல்லை. அவனை சார்ந்தவருக்கு அவன் நல்லவன். அர்ஜுனனும் நல்லவன். எந்த த்ரெளபதியும் இங்கே துயிலுரிக்கப்படவில்லை. மாறாக பாண்டவர் தரப்பிலிருப்பவனால் ஒரு பெண் வன்புணர்வு செய்யப்பட்டதற்கு கர்ணன் அவனை பழி தீர்க்கிறான். இப்படியாக ஒரு முயற்சி. அதே மணிரத்னம் ராமாயனத்தை ராவணனின் பார்வையில் சொல்ல எடுத்த முயற்சி மரண குப்பையாக முடிந்தது பெருஞ்சோகம். ஆனந்த் நீலகண்டன் எழுதியிருக்கும் அசுரன் நாவல் அதற்கு பிராயச்சித்தமாக நமக்கு கிடைத்திருக்கிறது. இதில் சீதை ராவணனின் மகளாக சித்தரிக்கப்பட்டு ராவணன் தரப்பிலிருந்து கதை நகர்கிறது. பின்னர் பத்ரனின் கதை வருகிறது. மாஸ்டர் பீஸ் என்று சொல்லவேண்டும். அதற்கான துவக்கம், வீழ்த்தப்பட்டவனின் தரப்பிலிருந்து ஒரு விஷயத்தை அணுக முயற்சிப்பதிலிருந்து எழுகிறது.

அடுத்தவன் நிலையிலிருந்து குறிப்பாக எதிராளியின் மனநிலையிலிருந்து ஒரு பிரெச்சனையை அணுகுவது மனோத்தத்துவ அடிப்படையில் மனித உறவுகள் மேம்பட ஒரு முக்கியமான கூறாக சொல்லப்படுகிறது. இதனை இரக்கம் அல்லது பட்சாதாபம் (sympathy) என்று எடுத்துக்கொள்ள தேவையில்லை. அது வேறு தளம். சில விலங்குகளுக்கு கூட இரக்கவுணர்வு உண்டு. இங்கே நான் சொல்லவருவது, ஒத்துணர்வு (empathy). இது மனிதர்களுக்கே ஆன உயர்பண்பு
ஒரு மனிதன் தோற்றுப்போகிறான், ஒரு மூலையில் போய் அமர்ந்து அவன் அழுதுகொண்டிருக்கிறான். உங்களுக்கு அவனைப் பார்த்ததும் கண்கலங்குகிறது. இது வெறும் இரக்கம். ஒரு கணம் அப்படியான தோல்வி உங்களுக்கு நடந்தால் என்ன நடக்கும் என்று யோசிக்கிறீர்கள். அந்த தோல்வியின் பாரம் ஓரளவிற்கு உங்களுக்கு புரிகிறது. தோற்றுப்போன மனிதரை உங்களுக்கு அகப்பூர்வமாக தெரியும். இந்த பாரத்தை அவர் எப்படி தாங்குவார் என்று யோசிக்கிறீர்கள். இது இருவருக்குமான ஒப்புமையால் வரும் ஒத்துணர்வு. (Empathy due to Analogy)

ஒருவருக்கு பிறவியிலேயே காது கேளாது. மொழி ஜோதிகாவை கற்பனை செய்துக்கோள்ளுங்கள். அவளுக்கு அடுத்தவர் தன் மீது பட்சாதாபம் கொள்வது பிடிக்கவில்லை என்று அறிந்த ப்ரித்விராஜ், அவளுடன் சகஜமாக பழக ஆரம்பித்தப்பின், அவளுடைய உலகம் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கிறார். கற்பனைக்கு அப்பாற்பட்ட விஷயமாக இருக்கிறது. காதுகளுக்குள் பஞ்சினைத் திணித்துக்கொண்டு சாலையில் நடந்துப்பார்க்கிறார். ஜோதிகாவின் நிலையிலிருந்து உலகத்தைப் பார்க்கும் முயற்சி. அதை அப்படியே நமக்கே கிடத்திக்கொண்டு அனுபவித்துப்பார்ப்பது. கண்ணெதிரே காயம் ஒருவருக்கு வலி கொடுக்கும்போது நமக்கும் கொஞ்சம் வலி எடுக்கும். உணர்வு பிரதிலப்பு சார்ந்த ஒத்துணர்வு. (Empathy due to mirroring effect) இது கொஞ்சம் அடிப்படையான வகை.
மூன்றாவது வகை கொஞ்சம் சிடுக்குகள் நிறைந்தது. நம் மூளைக்கென சில அகவிதிகள் உண்டு. அவற்றை நாம் வார்த்தைகளால் அடுத்தவரிடம் விவரிக்கும்போது அது அபத்தமாக இருக்கும். ஒரு விஷயத்தை ஒருவர் தனக்கான விதியுடன் அணுகுகிறார்மற்றொவர் அவருக்கான விதியுடன் அணுகுகிறார். இந்த இரண்டிற்கும் இடையிலான ஒரு மையப்புள்ளி இருக்கும் அதனை நெருங்கும்போது அவருடைய ஒருவரின் பார்வை இன்னொருவருக்கு புலப்படுகிறது. (Embodied simulation) ஒரு மனநல மருத்துவர் மேற்சொன்ன மூன்று வகையிலான ஒத்துணர்வின் கலவையுடன்தான் ஒரு நோயாளியை அணுகமுடியும்.

நேர்மையாக சொல்லவேண்டுமெனில், மருத்துவர்களுக்கு இரக்கவுணர்வைவிட இந்த ஒத்துணர்வுதான் முக்கியம் என்று சொல்வேன். மருத்துவர்கள் இல்லாத குடும்பத்தில் பிறந்த ஒருவன், மருத்துவ கல்லூரியில் சேர்கிறான். எம்.பி.பி.எஸ் முடிக்கிறான். சர்வ நிச்சயமாக மனிதனின் சராசரி உணர்வுகள் மறத்துப்போய்விடும். அவனுக்கு இப்போது கொஞ்சம் செல்வாக்கு வந்துவிட்டது. ஒரு தனியார் மருத்துவமனைக்குள் தான் ஒரு நோயாளியகவோ/ நோயாளியின் உறவினனாகவோ செல்லும்போது தன்னை ஒரு மருத்துவன் என்று அறிமுகப்படுத்திக்கொள்கிறான். கொஞ்சமேனும் கூடுதல் மரியாதை கிடைக்கிறது. வரிசையில் முன்னுரிமை கிடைக்கிறது. அங்கிருக்கும் பெரிய முதலை மருத்துவரிடம் கூடுதலாக இரண்டு ஐயங்களைக் கேட்க வாய்ப்பளிக்கப்படுகிறது. லேப் எங்கே என்று கனிவுடன் சொல்லப்படுகிறது. சில சேவைகளுக்கு கட்டணங்களும் வசூலிக்கப்படுவதில்லை. மருத்துவனாக அவன் அடுத்தடுத்த படிகள் போகும்போது இந்த அணுகூலங்கள் அவனுக்கு அதிகமாகிக்கொண்டே போகின்றன. ஒரு கட்டத்தில் நோயாளிகள் அல்லது நோயாளிகளின் உறவினர்கள் மனநிலையிலிருந்து முற்றிலும் அந்நியப்பட்டுப்போகிறான். மருத்துவர்கள் குறித்தோ மருத்துவமனைகள் குறித்தோ அவர்களின் பார்வை என்னவென்றே தெரியாத மேதாவி நிலைமைக்கு போய்விடுகிறான். தன்னுடைய அடையாளங்களை தொலைத்துவிட்டு ஒரு நோயாளியாகவோ, நோயாளியின் உறவினனாகவோ ஒரு நாள் ஒரு மருத்துவமனைக்குள் போனால், அந்த உண்மையின் சூட்டில் அவன் பொசுங்கிப்போவான். என்னை மருத்துவன் என்று சொல்லிக்கோள்ளாமல் அவ்வப்போது சில மருத்துவமனைகளில் நான் இதனை செய்வதுண்டு. செவிலியர்கள், அடிப்படை ஊழியர்கள் எல்லோரும் நம்மை கையாளும் விதம், சகநோயாளி நம்மிடம் பேசும் விஷயங்கள் எல்லாமே புதிதாக இருக்கும்இதுமாதிரியான சில விஷயங்கள் கொஞ்சம் என் நோயாளிகள்/உறவினர்களுடனான என் ஒத்துணர்வை மேம்படுத்தும் என்று அழுத்தமாக நம்புவேன்.

ஒத்துணர்வு குழந்தைகளுக்கு நாம் பயிற்றுவிக்க வேண்டிய விஷயமாக குழந்தை வளர்ப்பு நூல்கள் சொல்கின்றன. அந்த பருவத்தில் இதனை கற்றுக்கொடுக்கும்போது, அந்த குழந்தையிடம் ஒழுக்கமும் தன்னம்பிக்கையும் தன்னாலே கைக்கூடிவிடுகிறது. மிகமுக்கியமாக சமுதாய அக்கறை கொண்ட, சுயநலமற்ற மனிதர்களாக/தலைவர்களாக அந்த குழந்தைகள் வளர்கிறார்கள் என்று குழந்தைகள் மனநல ஆய்வறிக்கைகள் சொல்கின்றன. பொதுவாக தலைமை பொறுப்பில் இருப்பவர்களுக்கு இந்த ஒத்துணர்வு மிக முக்கியமான பண்பு. நம் அணியில் இருக்கும் ஒவ்வொருவரின் பார்வையும் அவருக்கு தெரியும்போது அவர் தன் அணியை வெற்றிக்கான பாதையில் எளிதாக கொண்டு செல்கிறார். அதேப் போல ஆசிரியர்கள். ஒவ்வொரு மாணவனின் பார்வையின் வழி அவர் அந்த பாடத்தை முன்னெடுக்க வேண்டும். இவ்வுணர்வு அதிகம் இருப்பவர்கள் நல்ல படைப்பாளிகள் ஆகிறார்கள். குறிப்பாக படைப்பை ஆராதிக்க போகிற ரசிகனின் மன ஓட்டம் தெரிந்தவர்களால் அந்த படைப்பை அந்த நயத்துடன் வெளிக்கொண்டுவர முடிகிறது. இந்த படத்தில் வருவது போல போலீஸ் க்ரிமினல் இடையில் கூட முக்கியம். அந்த க்ரிமினல் விஜய் சேதுபதியாக இல்லாமல் பொன்னம்பலமாக இருந்தால் இது சாத்தியமா? பொன்னம்பலம் பொன்னம்பலமாக இல்லாமல் இறங்கிவந்து ஒரு கதை சொல்லவா சார் என்று கேட்டால், அப்போது அந்த க்ரிமினலின் மனநிலையிலிருந்து யோசிக்க முயற்சிக்கதான் வேண்டும். எதிரிலிருப்பவர் இரண்டாம்பட்சம். நம் இறுக்கத்தை முதலில் தளர்த்திக்கொள்ள வேண்டும். அதுதான் பிரதானம். To put yourself in other's shoes, first unlace yours...

*