எக்கழுத்தம்




1


“இதெல்லாம் பேச நல்லா வெரப்பாதான் சார் இருக்கும்.. ஒரு வாட்டி சம்மட்டி அடியா வாங்குனா ஒங்களுக்கெல்லாம் தெளிஞ்சிரும்” - எப்போதும் என் பெயரைச் சொல்லியோ, ‘தம்பி’ என்றோ பேசுபவரின் புதிய ‘சார்’ சுள்ளென்றிருந்தது. “ஒங்களவிட ஜாஸ்தி புரட்சி பேசிட்டிருந்தவன் நானு.. எல்லாம் நம்மளோட வேட்டிய அவுத்துவுடுற வரைக்குந்தான்..” அச்சூழலுக்கான அமைதியுடன் இசையத்தான் குரலைத் தாழ்த்திக்கொண்டு சொன்னாரெனினும், எனக்கென்னவோ பல்லைக் கடித்துக்கொண்டு அவர் பேசுவதைப் போலிருந்தது.


எதிர்த்து வாதிட எனக்கு துணிச்சல் போதாதென்று மகேந்திரன் சார் நினைத்துக்கொண்டிருந்திருக்க வேண்டும். நானும் அப்படித்தான் அதுநாள் வரை நடந்துகொண்டிருந்திருக்கிறேன் - என் அசல் சுபாவமே அதுதானென ஒப்புக்கொள்வதுதான் சரியாக இருக்கும். மறுதலிக்க முடியாமல் அவர் திண்டாடுவதைக் கண்ட மனவுற்சாகம், மேற்கொண்டு அத்திசையிலேயே உந்தி தள்ளியது. எதிர்ச்சொற்களை சுருக்கென தொடுக்கமுடிந்த அக்கணத்தில் வேறொரு ஆளாக நானே என்னை ரசித்துக்கொண்டிருந்தேன்.


நாங்கள் போயிருந்த நேரமாய் பார்த்து பல்கலைக்கழக துணைவேந்தர் அமைச்சருடனான சந்திப்பில் சிக்கியிருந்தார். இரண்டுமுறை திறந்து மூடிய கதவிடுக்கின் வழியாக, அமைச்சரின் எதிரில் முதுகு வளைந்து நின்றுகொண்டிருந்தவரைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது. இதையெல்லாம் சேர்த்துவைத்து சற்றுநேரத்தில் எங்களிருவரையும் பொரித்தெடுப்பார் - நாங்களும் அதற்கு தயாராகியே இருந்தோம். அந்தச் ‘சற்று நேரம்’ என்பதுதான் எவ்வளவென்பது தெரியவில்லை. அதே சற்று நேரத்திற்குள்தான் எனக்கும் மகேந்திரன் சாருக்கும் இடையில் அசட்டு பிசட்டென ஆரம்பித்த பேச்சு எப்படியெப்படியோ திரிந்து வார்த்தைகள் முட்டிக்கொள்ளும் நிலைக்கு போய்க்கொண்டிருந்தது.


என்னுடைய வாதத்தின் நேரடி அர்த்தத்தை விட, இத்தனை நாட்களும் இப்படியான எதிர்க்கருத்துகளை வெளிக்காட்டாமல் உள்ளே வைத்துக்கொண்டு நான் பாசாங்கு செய்துவந்திருக்கிறேன் என்பதன் பதற்றம்தான் அவரது பேச்சில் தவித்தது. ரொம்பவே பாதுக்காப்பற்றவராக தன்னை வெளிப்படுத்திய பலவீனம் அதுவரையில் அவரிடம் கண்டிராத ஒன்று.  


“ஒங்களுக்கும் ஏ.ஓ. சாருக்கும் முட்டிக்கிட்ட பழய கதயெல்லாம் எனக்கு தெரியும்.. ஆஃபிஸ்ல பேச்சுவாக்குல கேள்விப்பட்டிருக்கேன்..” கூடுமானவரை இயல்பாகவே பேசியதுதான் அவரை இன்னும் அதிகமாக தொந்தரவு செய்திருக்க வேண்டும்.


எனக்கு விஷயம் தெரிந்திருக்குமென்பதை அவர் முன்பே கணித்திருந்தாலும் அதனைக் காட்டிக்கொள்ளாமல் ‘என்ன.. என்ன பழைய கதை?’ என்பதைப் போல நெற்றியைச் சுருக்கி இருமுறை முகக்குறியால் கேட்டார்.


நான் சொல்ல வருவதற்குள் துணைவேந்தரின் அறைக்கதவு திறக்க, அமைச்சர் தன் பரிவாரங்களோடு விருட்டென வெளியேறி வளாகத்தைக் கடந்து போனார். அந்த உடனடி பரபரப்பில் எங்களிருவருக்குமான வாதம் சட்டென நீர்த்துப்போய்விட்டது. ஏமாற்றமாக இருந்தாலும், ஒரு மனத்தாங்கல் உண்டாகாத நிலையிலேயே அப்படியது ஓய்ந்ததில் ஆசுவாசமாகவும் இருந்தது. நிச்சயம் பின்னொரு கணத்தில் விட்டுப்போன பேச்சு தொடருமென்பது மட்டும் உறுதியாக தெரியும். ஆனால் அவரே அன்று மதியம் மீண்டும் அப்பேச்சைத் தொடங்குவாரென்று நான் எதிர்ப்பார்த்திருக்கவில்லை.




2


திருவாரூர் கல்லூரி அலுவகத்திலிருந்து தஞ்சைக்கே மாற்றலாகி வந்ததில் அலைச்சல் ஒழிந்ததே தவிர உடல் நோவு தணிந்தபாடில்லை - ஒட்டுமொத்த அலுவலகத்தில் கணிப்பொறிப் பரிட்சயம் உள்ள ஒரே ஆள் என்பதால் அது சார்ந்த அனேக வேலைகளுக்கு என்னொருவனை மட்டும் குறிவைக்க ஆரம்பித்திருந்தார்கள். பணி நிமித்த கணிப்பொறிப் பயிற்சி அங்கிருப்பவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்தாலும், எளிய வேலைகளை ஒப்பேற்றத்தான் அது போதுமாக இருந்தது. கொஞ்சம் எங்காவது சிக்கிக்கொண்டாலும் அல்லது சிக்கிக்கொண்டதாக நினைத்துவிட்டாலும், என்னைப் பிராண்ட ஆரம்பித்துவிடுவார்கள். 


‘சரி சார்.. சைட் ஓப்பன் ஆனதும் நா க்ராஸ் ச்செக் பண்ணி சொல்றேன்..’ ‘நீங்க விடுங்க மேடம்.. நா அப்லோட் பண்ணிடுறேன்..’ - ஒப்புக்கொண்ட அடுத்த கணமே எனக்கே என் மீது வெறுப்பாக இருக்கும். வேலையைத் தலையில் கட்ட அவர்கள் தரிக்கும் முகமூடிகளை நான் நம்புவதாக அவர்கள் நினைத்துக்கொண்டிருப்பதுதான் அவலம். அந்த ஆபாசங்கள் இல்லாவிடினேனும் ஓர் உதவி செய்த நிறைவாவது எஞ்சி நிற்கும். ‘இல்லை’ ‘முடியாது’ ‘என்னுடைய வேலையே நிறைய தேங்கியிருக்கின்றன’ ஏதோவொன்றைச் சொல்லிட வக்கற்ற என் சாத்வீகத்தை உள்ளுக்குள் நொந்துகொள்வேன். அப்படித்தான் வளர்க்கப்பட்டிருக்கிறேன்; பாரங்களை உதறி மறுக்கமுடியாமல் ஏற்று புழுங்கிச் சாகவே நிந்திக்கப்பட்ட பிறப்பு.


இதற்கெல்லாம் விமோசனமாக ஓரிருவர் இருக்கத்தான் செய்தார்கள்; தானுண்டு தன் வேலையுண்டு என வந்து போகும் நேர்க்கோட்டு ஆசாமிகள் - குறிப்பாக எம்.ஈ1 பிரிவிலிருந்த மகேந்திரன் சார். 


கட்டம் போட்ட அரைக்கை சட்டை, மொழுமொழுவென மழித்த முகம், கார்பன் ஃபிரேம் கண்ணாடி என பார்த்துப் பழகிய அமரிக்கையான அலுவலக முகம். மற்ற மேசைகளில் நின்று கதையளப்பவர்கள் எவரும் அவர் பக்கம் போய் நான் பார்த்ததேயில்லை. கோப்புகள் எதிலும் என்னுடைய உள்ளீடு வேண்டுமெனில் பியூனிடம் கொடுத்தனுப்புவார். சராசரி அலுவலக ஆங்கிலமாக இல்லாமல் என்னவோ ஒன்று அவரது மொழியில் மிதமிஞ்சியிருக்கும். அதில் எனக்கெதுவும் ஐயமெனில் அவரது மேசைக்கு போய் கேட்டுக்கொள்வேன் - ரொம்ப வளவளக்காமல் நறுக்குத்தெறித்தாற்போல விஷயத்தைச் சொல்லிவிட்டு அவர் நிறுத்துமிடத்தில், ‘மேற்கொண்டு இங்கு நின்று என் நேரத்தை வீணாக்காதே’ என்று சொல்வதைப் போலிருக்கும். மனிதர் விஷய ஞானத்திலும் கெட்டி; அலுவலகத்தின் எந்தப் பிரிவில் என்ன குழப்பமெனிலும் அவரிடம் ஒரு தீர்வு இருக்கும் - சமயங்களில் நேராக; பெரும்பாலும் குறுக்காக. 


அலுவலக நேரம் ஆரம்பித்து அரை மணி தாமதமாக உள்ளே வருபவர், பரபரப்போ பகட்டோ இல்லாமல் மந்தகதியில் இயங்குபவராகத்தான் தெரிவார். ஆனால் வேலையெதையும் நிலுவையில் விட்டுச்சென்றதாக கேள்வியில்லை. இருக்கையில் இருந்தவாக்கில் அத்தனை பிரிவுகளையும் இடையிடையே நோட்டம் பார்ப்பார்; யாரையும் எதுவும் சொல்ல மாட்டார். நான் கவனித்தவரை யாரும் அந்தப் பார்வையைச் சட்டை செய்வதுமில்லை. எனக்குதான் அப்பார்வை அநாவசிய குற்றவுணர்ச்சியை விதைக்கும்; முறுவலிப்பேன், பணிவதைப்போல தலையசைப்பேன், லேசாக இருக்கையில் முன்னே நகர்ந்து பலவீனமாக உட்காருவேன் - எதையுமே அங்கீகரிக்காமல் அவர் மீண்டும் தன் வேலையைத் தொடர ஆரம்பிப்பார். மிகக் குறுகியக் காலத்திற்குள் என் மரியாதைக்கும் பொறாமைக்குமுரிய மனிதராக அவரை உருவப்படுத்திவிட்டேன். ஒரு நாளும் அவரைப் போல நிறையமைதியும் கவனக்குவிப்பும் கொண்ட ஒருவனாக என்னால் ஆகமுடியப்போவதில்லை என்பதெனக்கு தெரியும். அல்லது அங்கிருக்கும் எஞ்சியவர்கள் என்னை அனுமதிக்கப்போவதில்லை.


மதியம் இரண்டு மணிக்கு உணவு இடைவேளை எடுத்துக்கொள்ளும் அலுவலக வழக்கத்தில் ஒட்டாமல் ஒரு மணிக்கெல்லாம் கூடையைத் தூக்கிவிடுவார். அந்த மந்தையிலிருந்து அப்படி தன்னைத் தனித்துக்கொள்வதுதான் அவரது கவர்ச்சியாக இருக்கவேண்டும். 


காலையுணவு கொள்ளாத நாளொன்றில் மதியம் சீக்கிரமே உணவறைக்குள் நுழைந்தபோது மகேந்திரன் சார் அங்கு உட்கார்ந்திருந்தார். சுண்டியிழுக்கும் மீன் வாசனை. சிரித்தால் கூட பதிலுக்கு சிரிக்கமாட்டார். தயங்கிதான் அவருக்கெதிரில் அமர்ந்தேன்.


நிமிர்ந்து பார்த்து ‘வா’ என்பதைப் போல தலையசைத்தார். சாப்பிட்டு முடிக்கும் நிலையில் இருந்தார். வாளை முள்ளை இடக்கையைக் கொண்டுவராமல் பிரித்தெடுத்து உண்ணும் நேர்த்தியைப் பார்த்துக்கொண்டே கேரியரை மேசை மீது விரித்து வைத்தேன்.


“சாப்பாடு ஒய்ஃபா அம்மாவா?” அந்தக் குரலிலிருந்த கனிவை முந்தைய மூன்று மாதங்களில் நான் கேட்டதேயில்லை.


“சார்..”


“லன்ச் யாரு கட்டிக்கொடுப்பான்னு கேட்டேன்..”


“இன்னும் கல்யாணம் ஆகல சார்..” சொல்லவே தயக்கமாகத்தான் இருந்தது. உருவத்தை வைத்து இரண்டு குழந்தைகளுக்கு தகப்பன் என்று கணக்கிட்டிருந்தாலும் ஆச்சர்யமில்லை. 


“அக்கா தங்கச்சி யாருக்கும் இன்னும் முடியாம இருக்கா?” மிகச் சாதாரணமாகத்தான் கேட்டார்.


“தங்கச்சிங்க சார்”


“சொந்த ஊரெது?” மேற்கொண்டு முந்தைய கேள்வியை நீட்டிக் குடையாமல் விட்டதே நிம்மதியாக இருந்தது.


“வல்லம் சார்.. அங்கிருந்துதான் டெய்லி வர்றேன்..” 


“வல்லமா.. அப்பா பேரு..?” டப்பாவிலேயே கையைக் கழுவியபடி விசாரித்தார்.


சொன்னேன். எந்தத் தெரு என்பதுவரை கேட்டறிந்தார். ஒரு மிடறு தண்ணீரை வாயிலெடுத்து ஏதோ யோசிப்பதைப் போல கண்ணை மூடி கொப்பளித்துக்கொண்டே இருந்தவர், முடிவில் நினைவுக்கு வரவில்லை என்பதுபோல தலையசைத்து வாயிலிருந்த நீரை அப்படியே விழுங்கினார். எனக்கு குமட்டிக்கொண்டு வந்தது.


“வீட்டு பொறுப்பு இருக்குற ஆளு.. இங்க எவங்கிட்டயும் எதுக்கும் வாயக் கொடுத்து வம்புக்கு போகாத.. வந்தோமா போனோமான்னு இரு..” டப்பாவை மூடி கூடைக்குள் வைத்துக்கொண்டார். எதற்காக அப்படி சொன்னாரென்று தெரியவில்லை எனினும், அந்தக் கணத்தில் அவரோடு ரொம்பவே அணுக்கமாக உணர முடிந்தது. 


“தங்கச்சிங்கள செட்டில் பண்ணிட்டுதான் உனக்கா?”


புன்னகைத்தேன்.


“எல்லா கஷ்டத்துக்கும் சீக்கிரம் பழக ஆரம்பிக்கனும்.. கல்யாணத்த சட்டுன்னு பண்ணு.. வயசாயிட்டா புதுசா வளைய வராது..” தலையாட்டிக்கொண்டேன். அவ்விடத்தோடு பேச்சை முறிக்கவேண்டுமென்ற கட்டாயமேதோ இருப்பதைப் போல, கையை மெல்ல உயர்த்திக்காட்டிவிட்டு உணவறையிலிருந்து வெளியேறினார். மாற்றலாகி வந்த மூன்று மாதங்களில் நேரடியாக எந்தக் கேள்வியும் - பெயரைக் கூட - கேட்டிராதவர், இவ்வளவு பேசிவிட்டு போனது ஒரு வினோத மனோவுணர்ச்சியைக் கொடுத்தது.


தேக்கிவைத்திருந்த வேலைகளை முடிக்க மாலை ஆறு மணி ஆகிவிட்டது. நானும் கமாலுதீன் சாரும் மட்டும்தான் அலுவலகத்தில் எஞ்சியிருந்தோம். அவர் மாணவர்களுக்கான உதவித்தொகை, ஊக்கத்தொகை பட்டுவாடாக்களைக் கவனிப்பவர். 


“மதியம் உள்ள பாத்தேன்.. அந்த சொணையன் கூட ஒக்காந்து சாப்ட்டு இருந்தீங்க..” கோப்புகளில் ஏதோ பென்சிலால் எழுதிக்கொண்டே கேட்டார். முகத்தில் சிரிப்பு இருந்தது.


“சும்மாதான் பேசிட்டிருந்தாரு.. எந்த ஊரு என்ன எவட எல்லாம்..”


“அதெல்லாம் நேக்கா எல்லாத்தையும் அளந்துருப்பான் ஏற்கனவே.. தெரியாதமாரியே கேப்பான்..” சம வயதுக்காரர்களாக இருந்தாலும், மகேந்திரன் சாரை அவன் இவன் என அவர் பேசியது எனக்கு அசெளகர்யமாக இருந்தது. மேற்கொண்டு எதுவும் சொல்வார் என எதிர்ப்பார்த்ததில் ஏமாற்றம்தான்.


“அவனும் பாவந்தான்.. இந்நேரத்துக்கு ப்ரொமோஷன் வந்திருக்க வேண்டிது.. இங்கயே ஒக்காந்திருக்கான்..” நீண்ட இடைவெளிக்கு இதைச் சொன்னார்.


“ஏன்.. என்ன பிரச்சன..?”


“அது ஒரு கேசு.. என்க்கொயரி அது இதுன்னு சிக்கி.. மாரிமுத்து இருக்காருல்ல..?” கோப்புகளை மூடி அடுக்கி சனலைக் கொண்டு கட்டினார்.


“ஏ.ஓ. சாரா?”


கடைசிக்கட்டமாக சரிப்பார்ப்பதைப் போல ஏதோ ஒரு தாளில் டிக் அடித்துக்கொண்டு வந்தார். நான் பதிலுக்காக காத்திருந்தேன்.


“ஏ.ஓ. சார சொல்றீங்களா?” மீண்டும் கேட்டேன்..


“அந்த சாருதான்.. அந்த சாருனாலதான் எல்லாம்..”


எனக்கு புரியவில்லை. விளக்கிச் சொல்லுவாரென்று எதிர்ப்பார்த்தேன். அவரோ, மேசை லாக்கரை மூடிவிட்டு எழுந்துவிட்டார். மேற்கொண்டு கேட்க என்னவோ தடுத்தது. அலுவலக ரீதியிலான ஏதோ முரண் - அது சார்ந்த ஏதோ பிரச்சனையாக இருக்குமென்று நானும் முதலில் அதனை மலினப்படுத்திக்கொண்டுவிட்டேன்.




3


வழக்கத்தைவிட அன்று தாமதமாக பணிக்கு வந்து சேர்ந்தபோது உள்ளே நுழைவதற்கு முன்பே ஏதோ சச்சரவொலி கேட்டது. மகேந்திரன் சாரின் பிரிவில்தான் ஏதோ அமளி - முதுநிலைப் படிப்பிலிருக்கும் மாணவரொருவர் ரொம்பவே நிதானமிழந்து சண்டையிட்டுக்கொண்டிருந்தார். மகேந்திரன் சாரோ தன் தோரணையில் இம்மியும் அசைவின்றி பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டிருந்தார்.


பக்கத்து மேசை இளமதியிடம் என்ன தகராறென விசாரித்தேன். ‘எதோ கவுன்சிலுக்கு லெட்டர் அனுப்பாம விட்டாங்களாம்’ என்றாள். அதற்குள் சத்தம் அதிகரித்தது. அம்மாணவர் சாரை ஒருமையில் வைத்து பேசிக்கொண்டிருந்தார். மற்ற மேசையாட்களும் அங்கு கூட ஆரம்பித்தார்கள். மனிதரிடம் எந்த பிரதியுணர்ச்சியும் வெளிப்படவில்லை. தன் மகன் வயதிலிருக்கும் ஒருவன் அப்படி பேசும்போது எப்படி அவரால் அத்தனை அமைதியாக பதிலுரைக்க முடிகிறதென வியந்து பார்த்துக்கொண்டிருந்தேன்.


அந்த மாணவர் உள்ளே அழைக்கப்படுவதாக ஏ.ஓ. அறையிலிருந்து சேதி வந்தது. நானும் ஒரு சிலரும் கூடவே சென்றோம்; மகேந்திரன் சார் இடத்திலிருந்து அசையவேயில்லை - ஏ.ஓ. அறையின் வாசலில் நின்றபடி நான் அவரையேதான் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு முறை என்னை ஏறிட்டுப் பார்த்துவிட்டு மேசையிலிருந்த தாள்களை அடுக்கி வைக்க ஆரம்பித்தார். 


சண்டையிட்டவர் இறுதியாண்டு மாணவரென்றும், முதலாமாண்டு சேர்க்கையின் போது மருத்துவக் கவுன்சிலுக்கு அனுப்பவேண்டிய பட்டியலில் அவரது பெயர் விடுபட்டிருக்கிறதெனவும், கவுன்சிலிலிருந்து மூன்று முறை முழுப்பட்டியலுக்கான கெடு கொடுக்கப்பட்டும் அவரது பெயர் அனுப்பப்படவில்லையென்றும், தேர்வுக்கான இறுதிப்பட்டியல் இப்போது வந்திருக்கும் நிலையில் தன்னுடைய பெயர் அதில் இல்லையென அறிந்து பதறி விசாரிக்க போக, விஷயம் தெரியவந்திருக்கிறதென்றும் அங்கு நடந்த பேச்சுவார்த்தையில் விளங்கக் கிடைத்தது. முத்தாய்ப்பாக, அவர் அந்தப் படிப்பிலிருந்து வெளியேற்றப்படுகிறாரெனவும் கவுன்சில் நோட்டீஸ் பிறப்பித்திருக்கிறது. கேட்கும்போதே சற்று தலை சுற்றியது - எத்தனை பெரிய அலுவலகப் பிழை. மகேந்திரன் சாரால் எப்படி துளியும் சலனப்படாமல் இருக்க முடிகிறதெனப் புரியவில்லை.


“எல்லா காப்பீஸையும் ஒரு ஃபைல்ல போட்டு கொடுங்க.. இன்னிக்கு சாயந்தரம் டீன்கிட்ட பேசிட்டு ஒரு சொல்யூஷனுக்கு வந்துரலாம்.. தைரியமா இருங்க..”  மாரிமுத்து சாரின் சொற்களும் அணுகுமுறையும் அந்த நேரத்து ஒப்பேற்றலாக தெரியவில்லை. வந்திருந்த மாணவரும் கொஞ்சம் சாந்தப்பட்டதைப் போல தெரிந்தார். குறிப்பிட்ட அப்பணியை ஒருங்கிணைக்குமாறு மாரிமுத்து சார் என்னிடம் சொன்னார். எனக்கு புரியவேயில்லை - சம்பந்தப்பட்ட பிரிவிலிருக்கும் மகேந்திரன் சாரிடமே நேரடியாக சொல்லாமல், என்னை ஏன் உள்ளே இழுக்கிறாரென எரிச்சல் மண்டியது. வெளியே வந்தபோது, மகேந்திரன் சார் அதே நிச்சலனத்துடன் கணிப்பொறித் திரையைப் பார்த்துக்கொண்டிருந்தார். கொடுக்கப்பட்ட பணிக்கு தலையாட்டிவிட்டு வந்திருந்த என் கையாலாகாத்தனத்தின் மீது அக்காட்சி காறி உமிழ்வதைப் போலிருந்தது. 


“என்ன சார் பண்ணி வெச்சிருக்கீங்க?” எப்படி அவ்வாறு குரலை உயர்த்தினேனென தெரியவில்லை. கண்ணாடியைக் கழட்டி நிமிர்ந்தவர் நேரடியாக கேட்டார் - “ஒனக்கென்ன வேணும்?”, எதிலிருப்பவனைத் தடுமாறச் செய்யும் உறுதியான குரல்.


“அந்த ஸ்டூடண்ட்டோட கவுன்சில் க்ளியரன்ஸ்.. அத ஏ.ஓ. சார் என்னய பாக்க சொல்லி சொன்னாரு..”


“அதுல ஒனக்கு ஒன்னும் புரியாது.. நாம்பாத்துக்குறேன்.. போ..” மேசையிலிருந்த எதையாவது எடுத்து அவர் மீது வீசவேண்டும் போல இருந்தது. அசையாமல் நின்றிருந்த அந்த நொடியில் ஒட்டுமொத்த உடலும் அதிர்ந்துகொண்டிருந்தது. மேற்கொண்டு அவரே பேசினார். “தம்பி.. அவன் என்னைய கூப்ட்டு சொல்ல யோசிச்சிட்டு ஒங்கிட்ட சொல்லி அனுப்பிருப்பான்.. நா சரி பண்ணிக்கிறேன்.. நீ விடு..” சிறுமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்ததன் நடுக்கம் இந்தப் பிற்சேர்க்கையில் சற்று தணிந்தது. விலகி வந்துவிட்டேன்.


மதிய உணவு சமயத்தில் இளமதியிடம் விசாரித்தேன், “மகேந்திரன் சாரும் ஏ.ஓ.வும் பேசிக்க மாட்டாங்களா? அந்த ரூம் பக்கம் இவர் போயி பாத்த மாரியே நெனப்பில்ல..”


“முந்தி எதோ ப்ரெச்சன ஆயிடுச்சு போல.. எனக்கும் முழுசா தெரியாது..”


“என்க்கொயரின்னு கமால் சார் என்னவோ சொன்னாரு ஒரு நாளு..”


“அதான்.. ரெண்டு பேரும் ஒரே கிரேடுல இருந்த டயத்துல வாய் தகராறாட்ருக்கு.. கெட்ட வார்த்த சொல்லி மகேந்திரன் சார் திட்டிருக்காரு.. அதுக்கு அவரு பிசீஆர் கேஸ் கொடுத்துட்டாருன்னு சொன்னாங்க..”


“யாரு.. ஏ.ஓ வா? அவரு எஸ்சியா?” 


நான் சொல்லக்கூடாத வார்த்தை எதையோ சொல்லிவிட்டதைப் போல இளமதி சுற்றிமுற்றி ஒரு முறை பார்த்தாள்.


“எதாவது வம்புல இழுத்துவுட்றாதீங்க.. மெதுவா பேசுங்க..”


“கேஸ் ஆயிருந்தா சிக்கலாயிருக்குமே.. அரெஸ்ட் அது இதுன்னு போயிருக்கும்ல..”


“சார் அத விடுறீங்களா.. நமக்கது தேவயில்லாத விஷயம்..” ஏதோ புரளி கேட்கும் தொனியில் என் கேள்வி ஒலித்துவிட்டதோவென அவமானமாக இருந்தது. பின்வாங்கிவிட்டேன்.


அன்று மாலையே டீன் அறையில் அம்மாணவரின் கவுன்ஸில் விவகாரம் விவாதிக்கப்பட்டது. மாரிமுத்து, மகேந்திரன் மற்றும் பல்கலைக் கழகம் சார்ந்த அலுவலகப் பணிகளைக் கவனிக்கும் இருவர் - முன்வரிசையில் இருந்தார்கள். நான் மாரிமுத்து சாருக்கு பின்னாலிருக்கும் நாற்காலியில் இருந்தேன். யாரையும் மாற்றி மாற்றி குறை சொல்லிக்கொள்ளாமல் எப்படி தீர்வு காணலாம் என்ற திசையில் அந்தப் பேச்சு போய்க்கொண்டிருந்ததைக் காண ஆச்சரியமாக இருந்தது.


தன்னைக் குறிப்பிட்டு கேட்கப்படாத எந்தக் கேள்வியிலும் மகேந்திரன் சார் மூக்கை நுழைக்கவில்லை. இறுதியில் தன் முறைக்காக காத்திருந்தவர் போல வாய் திறந்தார்.


“சார்.. ரெண்டு வருஷத்துக்கு முந்துன எரர் இது.. என்னோட டேபிளுக்கு ஒரு வாட்டி வந்திருக்கு.. நான் எண்ட்ரி போட்டு இனிஷியல் பண்ணி சைனுக்கு அனுப்பிருக்கேன்.. சைன் ஆகி மேற்கொண்டு நகராம இருந்திருக்கு..” சொல்லியவர் வைத்திருந்த உரையிலிருந்து ஒரு தாளை உருவிக் காட்டினார்.


டீனுடைய பார்வை ஒரு முறை மாரிமுத்து சாரின் பக்கம் போய் வந்தது. ஏதோ விளக்க முற்படுவதைப் போல மனிதர் முன்னே நகர்ந்து ஆயத்தமாகும்போதே, அவர் மீண்டும் மகேந்திரனிடம் திரும்பி, “இதப் போயி இப்ப கவுன்சில்ல சொல்லமுடியுமா? உள்ளயே சேக்க மாட்டானுக..” மொபைலை எடுத்து யாரிடமோ ஆலோசனை கேட்க முயலுவதைப் போல தேடிக்கொண்டிருந்தார்.


“அப்டியேலாம் போனா செல்லாதுதான் சார்.. முன்னாடி அந்த பீரியடுல டீனா இருந்த ராதாகிருஷ்ணன் சார்க்கிட்ட போயி பழைய டேட்ட போட்டு ஒரு சைன மட்டும் வாங்கிட்டு, போஸ்டல் எரர் மாதிரி காமிச்சிரலாம்.. பழைய ரெஜிஸ்டர் போஸ்ட் நம்பர் எதையாச்சும் மாத்தி காமிச்சு எக்ஸ்ப்ளனேஷன் லெட்டரோட சேத்து சப்மிட் பண்ணா செட்டில் ஆயிரும் சார்..” ஏற்கனவே யோசித்து வைத்ததைச் சொல்வதைப் போல தடங்கலின்றி மகேந்திரன் சொல்லி முடித்தார்.


“ஆர்கே ஒத்துப்பாரா இதுக்கு?”


“நா பேசிக்கிறேன் சார்” மகேந்திரன் சாரின் தீர்க்கம் நம்பிக்கையளிப்பதாக இருந்தது. 


சந்திப்பு முடிந்து மாரிமுத்து சாரும் ஏனைய இருவரும் அறையை விட்டு வெளியேறியதும், டீன் மகேந்திரன் சாரை மட்டும் நிறுத்தி பேசிக்கொண்டிருந்தார். நான் புறப்படலாமா இல்லையா என்ற குழப்பத்தில் தடுமாறிக்கொண்டிருந்தேன். ரொம்பவே முணக்கமாக அவர்களுக்குள் பேசிக்கொண்டிருப்பது கேட்டுவிட முடியாதபடி சற்று தள்ளி நின்றுகொண்டிருந்தேன். அந்த நாகரிக இடைவெளியையும் மீறி அவ்வுரையாடலிலிருந்து ஒன்று மட்டும் காதில் விழுந்தது.


“கேண்டிடேட்டும் அந்தாளும் ஒன்னு சேந்துப்பானுக.. எதுனாலும் உன்னதான் இழுப்பானுக.. போன வாட்டி மாதிரி திருப்பிவிடவும் தயங்கமாட்டான் மாரிமுத்தான்.. வாய மட்டும் உட்றாத..” 




4


மாரிமுத்து சார் குறித்து என்னிடம் எந்தவொரு அளவீடும் அதுவரை இருக்கவில்லை. யோசித்து சொல்லவேண்டுமெனில், துருத்தலாக தெரியாத அதிகாரப் பகட்டு ஓரளவிற்கு உண்டு; எளிதில் சினந்துவிடக்கூடிய முகவெட்டு, ஆனால் யாரிடமும் கோபம் கொண்டு நான் பார்த்ததில்லை. அதேவேளை மருந்துக்கும் ஒரு சினேகப் புன்னகையைக் கூட காட்டமாட்டார். கீழிருப்பவர்கள் முறையாக வேலையை செய்துமுடித்தால், ஒரு கையெழுத்து போடும் இயந்திரம் என்பதைத் தாண்டி அவருடைய குறுக்கீடு எதிலேயும் இருந்ததில்லை. 


“முந்தி எம்.ஈ1 ல மாரிமுத்துதான் இருந்தான். எனக்கு பீ.காம் காலேஜ்மேட்டு அவன்.. மகேந்திரன் எங்கள விட ரெண்டு வருசம் கம்மி.. ஆனா சர்வீஸ்ல அவனுக ரெண்டு பேரும் எனக்கு நாலு வருச சீனியர்.. நல்லாதான் பேசிப்பானுக மாதிரி தெரியும்.. உப்பு சப்பில்லாத ப்ரெச்சன.. வாய் வார்த்த முத்திப்போயி சட்டைய புடிச்சிக்கிட்டானுக.. வெலக்கி விடும்போது மகேந்திரன் ரெண்டு மூணு வார்த்தய எச்சாவா விட்டான்..” கமாலுதீன்தான் பின்னொரு நாளில் விஷயத்தைச் சொன்னார்.


“ஜாதிய சொல்லியா?”


“சாதி பேரெல்லாம் வரவேயில்ல.. பொழக்கத்துல பேசுற வார்த்தைங்கதான்.. ஆனா மாரிமுத்து கேஸ கொடுத்துட்டான்.. மகேந்திரனுக்கு தெரிஞ்ச ஆளுங்க உள்ள இருந்ததால கேஸ எடுக்கல.. இவனும் விடுறாப்ல இல்ல.. கட்சி லாயெரெல்லாம் உள்ள கொண்டாந்து.. இவன் சைடுலேந்தும் ஆளுங்க வந்து.. மத்துசம் பண்ணி செட்டில் ஆவறதுக்குள்ள ஒரு வழி ஆயிருச்சு.. டீன் என்க்கொயரி நடந்து மகேந்திரனுக்கு மெமோ வெச்சி.. சஸ்பெண்ட் ஆகுற மாதிரில்லாம் இருந்துச்சு..”


 “முன்னல்லாம் அவரு.. மகேந்திரன் சார்.. நல்லா பேசுவாரா எல்லார்ட்டையும்?”


“எப்பவும் முசுடுதான் அவன்.. ஆனா அதுக்கப்றம் ரொம்பவே ஓஞ்சுட்டான்..” 


“பொய்யா கம்ப்ளைண்ட் போட்டதா நெனைக்குறாரா?”


“நெனைக்கிறதென்ன.. அது பொய் கேசுதான?”


எண்ணங்கள் ஓரிடத்தில் ஓயவில்லை. அவரிடம் மேற்கொண்டு ஏதேனும் விசாரிக்கவேண்டுமென இருந்தும் என்ன கேட்கவேண்டுமென உத்தேசமாக தெரியவில்லை.


“எப்டி ஒருத்தரோட ஜாதி இங்க இன்னொருத்தருக்கு தெரியுது?” எதற்காக இப்படி கேட்டேனென தெரியவில்லை. அக்கேள்வியின் அபத்தம் எனக்கே அருவருப்பாக இருந்தது. 


கமாலுதீன் ஆனால் பொருட்படுத்தியே பதிலளித்தார், “தெரிஞ்சுக்கனும்ன்னு அரிப்பு இருந்தா அதுல என்ன கஷ்டமிருக்கு..”


“எங்கிட்ட இது வரைக்கும் நேரடியா யாரும் அப்டி கேட்டதில்ல” இப்படி நான் சொல்லியதற்கு பரிகசிப்பதைப் போல சிரித்துவிட்டார். நீண்ட நேரம் எதுவுமே அவர் பேசவில்லை. இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டுமா என்பதாக அதைத் தவிர்த்துவிட்டதாக எனக்கு பட்டது. நிதானிக்க போதுமான மெளன இடைவேளை கிடைத்ததும், என் கேள்வியில் நியாயமில்லாமல் இல்லை என்று தோன்றியது. மீண்டும் கேட்டேன்..


“ஒங்க பேர வெச்சு நீங்க முஸ்லீம்ன்னு எனக்கு தெரியுது.. இந்த ப்ரெச்சன தெரிஞ்சதால மாரிமுத்து சாரோடது தெரியுது.. இங்க இருக்குற வேற யாரோட சாதியும் எனக்கு தெரியாது..” அநாவசியமாக நான் வியாக்கியானம் பேசுவதாக தோன்றினாலும் என்னால் அதனை நிறுத்தமுடியவில்லை.


“திரும்பவும் அதேதான் சொல்றேன்.. தெரிஞ்சுக்கனும்ங்கற அரிப்பு வந்துட்டுன்னா அதெல்லாம் தன்னால தெரிஞ்சுடும்.. நேரா கேக்கவும் யாருக்கும் கூசுறதில்ல”


“ம்ம்..”


“எல்லாவனுக்கும் அடுத்தவன் என்ன சாதின்னு தெரிஞ்சுக்கிறத விட.. இன்னயின்ன சாதி இல்லன்னு முடிவுக்கு வர்றதுதான் முக்கியம்.. மகேந்திரன்லாம் மூக்க வெச்சே சொல்லிருவேன்னு சொல்லுவான்.. பொண்ணெடுத்த ஊரு, தாத்தா பேரு, கொல தெய்வம்.. அவ்வளோ ஏன்.. நீ டப்பாவ தெறக்குறப்ப வர்ற மசாலா வாசன போதும்.. எதாச்சும் ஒன்னுல புடிபட்ரும்..”


எண்ணெய் மிதந்துகொண்டிருந்த என் ரசஞ்சோற்றில் எந்த வாசனையும் எனக்கு தெரியவில்லை. மேற்கொண்டு எதுவும் பேசவேண்டாமென வலுக்கட்டாயமாக நிறுத்திக்கொண்டேன்.




5


சொல்லியபடி முந்தைய டீனிடம் முன்தேதியிட்டு கையெழுத்து வாங்கி, டெல்லியிலிருக்கும் மருத்துவக் கவுன்சிலுக்கு விளக்கமும் மன்னிப்பும் சமர்ப்பிக்கப்பட, அவை பரிசீலனைக்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதற்கான அத்தாட்சியை சென்னையிலிருக்கும் பல்கலைக் கழகத்தில் ஒப்படைத்து, அம்மாணவருக்கான தேர்வு நுழைவுச் சீட்டை வாங்கிவர மகேந்திரன் சாரையும் என்னையும் அனுப்பிவைத்தார்கள்.  


இந்தப் பிரச்சனை ஆரம்பித்த நாளிலிருந்து மகேந்திரன் சாரை அதே பழைய கோணத்தில் என்னால் அணுக முடியவில்லை. அவருடைய பார்வையிலிருந்தது வெறுமையாக இல்லாமல் புதிய அர்த்தங்களைப் பட்டவர்த்தனமாக்கியது. அவரது ஆங்கிலத்திலிருக்கும் சிடுக்கையும் ஏ.ஓ. மேசையிலிருக்கும் ஏ.எஸ்.ஹார்ன்பி அகராதியையும் அரூபச் சங்கிலியொன்று பிணைத்துக் காட்டியது. மிக உன்னிப்பாக கவனித்தால், அவருக்கான குழாம் ஒன்றும் ஏ.ஓ.விற்கான குழாம் ஒன்றுமாக இரு அணிகள் அங்கு இயங்கிக்கொண்டிருப்பதாகத் தெரிந்தன. அவரிடம் தெரிவது பொதுவான விலக்கம் அல்ல என்பது அத்தனை லேசில் புரிந்துவிடவில்லை. அவரது பார்வை இப்போதெல்லாம் ஒரு கசப்பைதான் உண்டு செய்கிறது; அவர் நோட்டம் பார்க்கும் வேளைகளில் குனிந்துகொள்ளவோ அல்லது அவர் குனியும் வரை நேருக்கு நேராக பார்க்கவோ பழகிவிட்டேன். அவரது கோப்புகளில் எதுவும் புரியவில்லையெனில், என் இருக்கையிலிருந்தே உரக்க கேட்க ஆரம்பித்தேன்.


தாம்பரத்திலிருந்து கிண்டி வரும்போது, அந்த மாணவரின் ஆவணங்களைப் புரட்டிக்கொண்டே வந்தவர், சாதிச் சான்றிதழ் வந்ததும் புரட்டுவதை நிறுத்தியிருந்தார். எனக்கு ஆயாசமாக இருந்தது - இருவருக்கும் ஏற்கனவே தெரிந்திருந்த அந்த விஷயத்தை எதற்காக மீண்டும் நினைவில் பதியவைக்க முயல்கிறாரென தெரியவில்லை - பார்த்தும் பாராததைப் போல தலையைத் திருப்பிக்கொண்டேன்.


“தெரியிதா.. ஒங்க ஏ.ஓ. எதுக்கு கெடந்து அப்புடி தவ்வுனான்னு..” கண்ணாடி பிரேமுக்கு வெளியே புருவங்கள் உயர்ந்திருந்தன.


புதிதாக எதையோ பார்ப்பதைப் போல பாவனை செய்தேன். சான்றிதழிலிருந்த சாதிப்பெயரை விரலால் வட்டமிட்டுக் காட்டினார். கூடுமானவரை முகத்தில் எந்த குறிப்பையும் நான் காட்டிக்கொள்ளவில்லை.


“செக்‌ஷன் எரர் செக்‌ஷன் எரர்ன்னு ஆயிரம் வாட்டி சொல்றானே அன்னிக்கு.. நேக்கா என்னய மட்டும் இந்தப் பயலுக்கு எதிரா திருப்பிவிடுறான்.. ஆபிஸ் மிஸ்டேக்ல அவனுக்குந்தான பொறுப்பிருக்கு..”


“அவரு ஒங்கள மட்டும் கொற சொன்ன மாதிரி எனக்கு தெரியல..” இங்கிருந்துதான் ஆரம்பித்தது. பல்கலைக்கழகத்தை அடைந்து, துணைவேந்தரின் அறையிருக்கும் தளத்திற்கு சென்ற வரை கூட பேச்சில் அத்தனை காரம் சேர்ந்துவிடவில்லை.


“அந்தப் பய அன்னிக்கு வந்து என்கிட்ட அத்தன சத்தம் போட்டானே.. ஏ.ஓ. ரூமுள்ள போனதும் சவுண்டு ஏன் கொறஞ்சுது..?” நான் என் பதிலைச் சொல்ல வாயெடுப்பதற்குள் அவரே தொடர்ந்தார், “இத்தனைக்கும் நா அந்த வேலைய செய்யாம இல்ல.. செக்‌ஷன்ல ரிசீவ் ஆயிருக்கு.. இனிஷியலாயிருக்கு.. ரெஜிஸ்டர்ல போயி பாரு.. எண்ட்ரியிருக்கு”


“ரிட்டயரான டீன் கிட்ட போயி ஆண்ட்டி-டேட் போட்டு கையெழுத்து வாங்க யோசிக்கிற ஒங்களுக்கு இப்ப ரெஜிஸ்டர்ல எண்ட்ரி காமிக்கிறதெல்லாம் ஒரு விஷயமா சார்” இந்த இடத்தில்தான் அவர் சீண்டப்பட்டிருக்க வேண்டும்.


“இந்த சைனெல்லாம் வாங்க நா கெடந்து அலையறதால.. தப்பு எம்மேலன்னு ஒனக்கு தோனிடல.. அவனுக ஒன்னா கூட்டு சேந்துக்கிட்டு நிக்கிறானுக.. விக்டிம் அவம்பக்கம் நிக்கிறான்.. அதான்.. அதுனால ஒங்க ஏ.ஓ. நாயஸ்தனா ஒனக்கு தெரியிறான்..” 


நான் மறுத்து தலையசைப்பதை அவர் பொருட்படுத்தவேயில்லை.


பதற்றமும் கோபமுமாக வார்த்தைகளை அவர் கொட்டத் துவங்கிய சமயத்தில், நானும் பழைய கதையெல்லாம் தெரியுமென உளறியிருக்க வேண்டாம். நல்லவேளையாக துணைவேந்தர் அறைக்குள் சீக்கிரமே அழைக்கப்பட்டுவிட்டோம்.


ஒப்புதல் படிவத்தைப் பெற்றுக்கொண்டு, அந்த வளாகத்திலேயே இருக்கும் உணவகத்தில் மதிய உணவுக்காக போய் உட்கார்ந்தோம். எதிரிலிருக்கும் புற்தடமெங்கும் மேற்படிப்பிற்கு தயாராகும் மாணவர்கள் நுழைவுத்தேர்வுக்கான பெரிய பெரிய புத்தகங்களை வைத்து படித்துக்கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் நாங்களிருவரும் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை - தொந்தரவளிக்கும் அமைதி - அந்த நமைச்சலை உடைக்க நானே வாய் திறந்தேன்.


“சார் ரிட்டன் உழவன்தானே? நைட்டு எத்தன மணிக்கு வண்டி அது?”


“பழைய கேஸ் பத்தி தெரியும்ன்னு சொன்னியே.. என்ன தெரியும் ஒனக்கு..” அவ்வளவு நேரமும் உள்ளுக்குள் கனன்று கொண்டிருந்திருக்கிறார் என்பதை வெளிக்காட்டும் கொதிப்பு அந்தக் கேள்வியிலிருந்தது. எதையோ நிரூபித்துவிடும் ஆங்காரத்தோடு பேச ஆரம்பித்திருந்தார். “அந்த பொய் கேச மட்டும் எடுத்திருந்தா யோசிச்சு பாரு.. விசாரணையே கெடையாது..”


“ஏன் பொய் கேசுன்னு சொல்றீங்க?”


“அத சொல்லலயா எவனும் ஒங்கிட்ட? நா ஒரு வார்த்த கூட அந்த மசுரான ஜாதிய வெச்சு திட்டல.. ஆனா கம்ப்ளைண்ட எப்டி கொடுத்தாம் பாத்தியா? சாதிய குறிச்சு கேவலமா பேசிட்டான்னு.. அதாம் புத்திங்கறது.. எவ்வளோ பெரிய அயோக்கியந் தெரியுமா அவன்?” காதுகள் விடைக்க பேசிக்கொண்டிருந்தார்.


“இவன் ஜாதி தெரிஞ்சுதான் எனக்கு கோவம் வந்துச்சா? இவனுகள எதித்து ஒரு வார்த்த சொன்னா போதும்.. அதுக்கு ஜாதிய வெச்சு கேவலப்படுத்திட்டான்னு குய்யோ முய்யோன்னு.. வேண்டாதவன பழி வாங்குறத்துக்குன்னே இவனுகளுக்கு ஒரு சட்ட மசுரு.. அந்த ஒத்த என்கொயரிக்காக எவ்வளவு அலஞ்சிருக்கேன் தெரியுமா.. எத்தன பேரு கால புடிச்சு, எங்கெல்லாம் காசடிச்சு.. நாய் மாதிரி அலையவுட்டான்.. ப்ரொமோஷனும் தள்ளி போயி..”


என் எந்தவொரு வார்த்தையும் அவரை மேலும் உடைத்துவிடுமெனப் புரிந்ததால் நாவைக் கட்டுப்படுத்திக்கொண்டேன். அப்படியான வார்த்தைகள்தான் வம்படியாக உள்ளுக்குள் பிரவாகமெடுத்துக்கொண்டிருந்தன.


“வந்த மெயிலெல்லாம் அவம் பாக்கலயாமா?” அவருக்கு இளைப்பெடுத்தது. “இங்க்ளீஷும் வராது ஒரு மயிரும் வராது.. சும்மா பந்தாவுக்காக மெயில ஓப்பன் பண்ணிட்டு ரெஸ்பாண்டும் பண்ண தெரியாம..” முணுமுணுத்தாலும் நிச்சயம் என் காதில் விழவேண்டும் என்பதாகத்தான் சொன்னார்.


“எனக்கென்னவோ… அவர மட்டந்தட்டி ஒரு இமேஜ உருவாக்கனும்ன்னே நீங்க பேசுற மாதிரி இருக்கு..”


“புதுசா நா என்னத்த நெகட்டிவா கொண்டு வந்து நொட்டனும்.. ஒவ்வொருத்தனையா தனியா கூட்டு விசாரிச்சு பாரு.. சொல்ல முடியாம அடச்சி வெச்சிருக்கிறத யெல்லாம் கொட்டுவான் ஒவ்வொருத்தனும்.. இவரு உள்ள ஒக்காந்து ஆடர் மசுரு போடுறாரு இன்னிக்கு.. வெய்க்க வேண்டிய எடத்துல வெய்க்கனும் எல்லாவனையும்..” விரலை கிட்டத்தட்ட என் முகம் வரை கொண்டு வந்து சொன்னார். அத்தனை நிதானபுத்தியற்றவரா என அதிர்ச்சியாக இருந்தது. “தராதரம் இல்லாத நாயெல்லாம் கொண்டாந்து..” சொல்லவந்ததை அப்படியே நிறுத்திவிட்டார். என் கண்கள் நொடிப்பொழுதேனும் விரிந்ததை அவர் கவனித்திருக்க வேண்டும். சோற்றுத் தட்டை பாதியிலேயே கீழே வைத்தவருக்கு மேல்மூச்சுகள் ஓய்ந்தபாடில்லை. அந்த இடத்தில் கட்டாயம் உள்ளுக்குள் உறுத்திக்கொண்டிருந்ததைச் சொல்லிவிட வேண்டுமெனத் தோன்றியது.


“ரெண்டு விஷயம் சார்” திடமாக ஆரம்பித்தேன்.


“வயசுல மூத்தவரு, சர்விஸ்ல சீனியர்.. அத்தன பேருக்கு முன்னாடி கெட்ட வார்த்த போட்டு திட்ட முடிஞ்சிருக்கு..” உடனடி மறுப்பிற்கான செய்கையெதையும் அவர் வெளிக்காட்டாமலிருந்ததால் என் பேச்சின் திண்ணம் மேலும் வலுத்தது. “நீங்க சொல்லாததா சொல்ற வார்த்த.… நிச்சயமா அந்த காதுக்கு கேட்டுருக்கும்..”


“ரெண்டாவது..” இடறியத் தொண்டையை ஒருமுறை செருமிக்கொண்டேன். “எனக்கு தெரிஞ்ச வரைக்கும் மகேந்திரன் சார்ங்கறவரு.. மூணு ரிமைண்டர் வந்த அஃபீஷியல் மெயில கவனிக்காத அளவுக்கு.. அலட்சியமானவர் கெடையாது” 


சொல்லிவிட்டு அமைதியாக இருந்தேன்.. அப்போது அவர் கண்கள் என் பார்வையைச் சந்திக்கவேயில்லை. மாறாக, மிகக் கூர்மையாக அவை என் மூக்கைப் பார்த்துக்கொண்டிருந்ததாக எனக்கு பட்டது.




முற்றும்








 



( நன்றி : மணல்வீடு )