இருள் ஊடுருவும் சாளரம்

 




1


கிள்ளியெடுத்த அளவிற்கு கங்கு இரு கண்களிலும்; அவளுடைய மூக்குக்கும் சிவக்க வரும் என்பதை நம்பமுடியாமல்தான் நின்றுகொண்டிருந்தேன். மழை ஓய்ந்ததின் நிசப்தம் அச்சுறுத்துவதாக இருந்தது; புழுக்கம் வேறு. அடுப்படியிலிருந்து ஊசி விழும் சத்தம் கூட கேட்கவில்லை; அம்மை ஏதோ துணுக்குற்றிருக்கவேண்டும். நான்கு மாத கலவரங்கள் அனைத்தும் முடிவுக்கு வந்துவிட்டதாகத் தோன்றியது. மூச்சு விடும் அசைவு கூட வெளிப்படாமல் அமலி நின்றுகொண்டிருந்தாள்; இமைக்காத விழியோரம் தவறிவிழத் தயாராக இரு முத்துகள் திரண்டிருந்தன. 


கொஞ்சமாய் துணிச்சலைத் திரட்டிக்கொண்டு கேட்டேன். “அமலிக்கு.. என்னாச்சு?” வழமையான செல்லங்கொஞ்சும் குரலைச் சிரமப்பட்டு கொண்டுவந்துவிட்டேன்.


கண்களை மூடிக்கொண்டாள். அப்போதைக்கு அந்தச் சலனமே கூட போதுமென்றிருந்தது; ஆறுதலாக இருந்தது. அவதிஅவதியாக எச்சிலை விழுங்கினாள். உடைந்து அழப்போகிறாளா? காதுக்கு பின்னாலிருந்து தொண்டைக்கு கோடு போட்டதைப் போல வியர்வை இறங்கிக்கொண்டிருந்தது; அவிழ்த்திருந்த முதல் பித்தான் அனுமதிக்கும் எல்லை வரை அதைப் பார்க்கமுடிந்தது. பார்வை அங்கு விழுவதை உணர்ந்தவளாக துணியின் இருமுனைகளையும் இறுக்கிப் பிடித்துக்கொண்டாள். அடுப்படி அரவம் மிக மெலிதாகக் கேட்டது - வெளியே கேட்டுவிடக் கூடாதென்று அதில் தொனித்தக் கவனம் ஒருவித எச்சரிக்கைதான். மெல்ல நகர்ந்துபோய் அடுப்படி பக்கம் எட்டிப்பார்த்தேன். அடிவயிறு நிரம்பி முட்டியது. வந்து அமலியின் கரங்களை விலக்கி அவிழ்த்த பித்தானை நானே மீண்டும் போட்டுவிட்டேன். எதிர்ப்பே இருக்கவில்லை. 


“அமலி.. கண்ண தெற.. ஒன்னு ஆகல.. சரியா போச்சு..” கன்னத்தில் தட்டியதில் தேங்கியிருந்த கண்ணீர்தான் தெறித்தது.


அடுப்படியில் அலுமினிய குண்டான் எதையோ ஆங்காரமாக தரையில் போட்டு உடைப்பது கேட்டது. சொல்லிவைத்ததைப் போல மழை மீண்டும் கொட்ட ஆரம்பித்தது. அடுத்தடுத்த நாட்களில் நடக்கப்போவதை எண்ணி உள்ளுக்குள் நடுக்கம் அழுத்தியது.


எப்போது அங்கிருந்து புறப்பட்டேன், எப்படி மழையில் ஓடி வந்தேன், எப்போது வீடு வந்து சேர்ந்தேன்.. எதுவுமே ஒட்டவில்லை. ஜோக்குட்டியிடமிருந்து இரண்டு அழைப்புகள் வந்திருந்தன. அந்த வீட்டிலிருந்தும் ஓர் அழைப்பு. தலைமயிரை உலர்த்தவோ உடையை உரிந்துவீசவோ தோன்றாமல் ஈரம் சொட்ட சொட்ட மூன்று வில்ஸை இழுத்து முடித்திருந்தேன். அதற்குள் முப்பது முறையாவது செத்துப்போயிருப்பேன்; தற்கொலைகள்தான் அனேகம்.


மீண்டும் அமலியிடமிருந்து அழைப்பு.. 


“கதிரே.. ஓடிப்போய்ட்டியா?”


“…”


“குண்டு இங்க கெழங்கு சுட்டுவந்து ஒன்ன தேடுச்சு.. ஒன்னோடதையும் சேத்து நானே திண்ணுட்டேன்..” கதறி அழவேண்டும் போலிருந்தது. 




2


அந்நிலத்தைச் சரியவிடாமல் தாங்கிநிற்கும் வேர்களை ஒவ்வொரு முறையும் வியந்திருக்கிறேன். முரட்டு எருமையின் கொம்புகளைப் போன்ற லாவகமான வளைவுகள் ஒவ்வோர் அடுக்கிலும் - அவை தேக்கிப் பிடித்திருக்கும் மண்ணும் கல்லும்தான் உச்சியை நோக்கிய படிகள் - தேர்ந்த மூளைகளால் திட்டமிடப்பட்டால் கூட சாத்தியப்படாத கட்டுமானம் அது. ஆறாவது அடுக்கில் வளைந்து ஏறிப்போய் மேலே நிற்கும்போது ஏதோவொரு சிறு குன்று நம் அதிகாரத்திற்குள் வந்துவிட்டதைப் போலிருக்கும். ஓடுகளின் பாசிக் கவுச்சியும் ஊறிப்போயிருக்கும் மண்தரையின் பிசுப்பிசுப்புமாக ஜோக்குட்டியின் பழைமையான வீடு இருக்கும் உச்சி அதுதான். கீழேயிருந்து பார்த்தால் அப்பெருமரத்தின் மறைவிலிருந்து அவ்வீடு ரகசியமாய் எட்டிப்பார்ப்பதைப் போலிருக்கும்.


ஜோக்குட்டி துபாயிலிருந்து கொடுத்தனுப்பிய பையைக் கொடுக்க முதன்முறையாக அங்கு போய் நின்றபோது அமலியை விட என்னை அதிகமாக பரவசப்படுத்தியது அந்த இடமும் வீடும்தான். இத்தனைக்கும் அங்கிருந்து ஆறு மைல் தொலைவுக்குள்தான் எங்கள் வீடு - பாலைவனத்தைப் பிரதியெடுத்ததைப் போன்ற பரப்பில் குத்துயிராய் நிற்கும் போன தலைமுறை காரைவீடு. நான் உருப்படாமல் போனதற்கு எங்கள் வீட்டின் தரித்தரியத்திற்கும் பெரும்பங்கு இருக்கவேண்டும். 


நிலப்பரப்பின் வசீகரமோ அங்கு கிடைக்கும் உளக்கிளர்ச்சியோ - ஜோக்குட்டியின் வீட்டிற்கு போவதை ஒரு முறையோடு நிறுத்திக்கொள்ள முடியவில்லை. மூட்டு வலி அம்மையையும் இப்படியான அமலியையும் தூரதேசத்திலிருந்து அரவணைக்க ஜோக்குட்டிக்கும் நான் அவசியப்பட்டிருக்க வேண்டும். அம்மைக்கு, உணர்ச்சிகளுக்கு இடமேயில்லாத மெழுகிய முகம்; இடமில்லை என்பதைவிட சாத்தியமில்லை - அது ஏதோ நரம்பு வியாதி என்றும் அதற்கு முறையாக மாதமாத்திரைகள் வாங்கிக்கொடுக்க வேண்டும் என்பதும் ஜோக்குட்டியின் விண்ணப்பம். ஆனால் அந்த முகத்தைக் கொண்டே என் மீது போதுமான வெறுப்பை அவளால் காட்ட முடிந்தது. நடையும் அடி பிரதட்ண வேகம்தான். உருண்டுதிறண்ட பிருஷ்டத்தையும் தொடையையும் தாங்கி தாங்கியே பாவப்பட்ட மூட்டுகளிரண்டும் வீங்கி போயிருக்கும். அமலியும் கூட அறுபது வயதில் அப்படித்தான் இருப்பாளாய் இருக்கும்.  


ஜோக்குட்டியை விட இரண்டு வருடங்கள் மூத்தவளென்ற கணக்கில் அமலிக்கு முப்பத்தொன்று என்றால் நம்புவது சிரமம். பார்வைக்கு செளகரியமாக பத்தைக் கழித்துக்கொள்ளலாம் - பூஞ்சை உடம்பும் பிஞ்சு முகமும் மறுப்பே சொல்லாது. சிக்குவிழுந்த மயிரை வகிடெடுக்காமல் தூக்கியே வாரியதால் ஏறிப்போன நெற்றியும் பருவெடிப்புகள் பள்ளம் பெயர்த்திருக்கும் கன்னங்களும் எந்நேரமும் எண்ணெய் பிசுக்கில் ஊறிப்போயிருக்கும் காதுமடல்களுமாக மிகப் பரிட்சயமான நீள்வட்ட முகம். அந்த முகத்திற்கு துளியும் பொருந்தாத அகலமான சிரிப்புதான் விநோதம். அதுவும் அவளைப் புரியும்வரைதான்.


சுடிதாருக்கு பேண்ட் அணியாமல் பாவாடை கட்டிக்கொள்வாள்; தூரநாட்களுக்கு மட்டும் அம்மையின் சாயம் வெளுத்த உள்பாவாடை. உட்காரும்போது நாடா இடுக்கின் கிழிசலின் வழியே மேல்தொடை தெரியும். முகத்தையும் கையையும் விட அவ்விடம் அத்தனை வெளுப்பு. துள்ளிக் குதித்து நடக்கும்போதும் புறங்கை பிணைத்து நிற்கும்போதும் எதிரிலிருப்பவன் தடுமாறுவதெல்லாம் அவளுக்கு புரியப்போவதுமில்லை. 


“துண்ட எடுத்து குறுக்க போடு..”, அமலியின் அம்மை என்னை வைத்துக்கொண்டே கத்துவாள். அது அமலியின் மீதான ஆத்திரமல்ல என்பது சீக்கிரமே புரிந்துவிட்டது. நான் அங்கு போக ஆரம்பித்த சில நாட்களில் அமலி ஜோக்குட்டியின் சட்டைகளையும் நைட்டிகளையும் அணிய ஆரம்பித்தாள். அம்மையின் கண்டிப்பாக இருக்கவேண்டும். அந்த உடுப்புகளுக்குள் இரண்டு அமலிகளை அடக்கலாம்.    

  

முதன்முறை அமலியிடம் பேசும்போதே விஷயம் ஓரளவுக்கு விளங்கியது. பொதுவாக அப்படியானவர்களிடம் உடனடி விலக்கம் உண்டாகிவிடும் எனக்கு அவள்மீது பரிதாபமோ வெறுப்போ ஏற்படவில்லை; என் விருப்புக்குரிய எதுவோ ஒன்று அவளிடம் இருக்கிறது -பெருங்குறைகளை மலினப்படுத்தும் ஈர்ப்பை அதுதான் சாத்தியப்படுத்துகிறது. துபாயிலிருந்த நாட்களில் ஜோக்குட்டி இதைப் பற்றிச் சொன்னதேயில்லை. அவனிடத்தில் நானிருந்தாலும் இதையெல்லாம் சொல்லியிருக்கமாட்டேன்தான். கல்யாணம் முடிக்காத அக்கா ஒருத்தி இருக்கிறாள் - அவ்வளவுதான். நானும் என்ன காரணம் என்றெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கவில்லை.


“ஒன்னோட பேரு எனக்கு வாய்லயே வரல.. கதிருன்னு கூப்ட்டுக்கவா?” ஒவ்வொரு கேள்வியின் முடிவிலும் அந்த அகலப் புன்னகை வந்துவிடும். தொண்டையிலிருந்து வலிந்த சிரிப்பொலி ஒன்றும் வரும்.


“கதிர்ங்கறது யாரு?”


“படம் பாத்தன்.. டிவியில.. அதுல ஒன்னாப்லயே தாடி வெச்சுட்டு ஒருத்தன் வந்தான்.. அவம் பேரு..” இரு கைகளாலும் வாயைப்பொத்திக்கொண்டு “அவனும் அளகா இருந்தான்” என்று சிரிக்க ஆரம்பித்தாள். இப்படி ஆரம்பிக்கும்போதெல்லாம் சலிப்பூட்டும் நீளத்திற்கு சிரித்துக்கொண்டே இருப்பாள். சற்று நெளிய ஆரம்பிப்பேன். ‘போதும் போதும்’ என செய்கை காட்டினால் சிரிப்பு இன்னும் உக்கிரமாகிவிடும். அடுப்படியிலிருந்து “அமலீ..” என்றோர் அதட்டல் வந்ததும் திடுக்கிட்டு நிறுத்துவாள். அம்மை மேல் ரொம்பவே பயம் உண்டு.


“நீ இருந்தா இந்த குண்டு என்ன அடிக்காது.. இங்கவே இரேன்..”


“அடிப்பாங்களா என்ன?” வார்த்தையாக இல்லாமல் செய்கையாகத்தான் கேட்டேன். பெரும்பாலும் அப்படித்தான் செய்கிறேன் - ஏனென்று தெரியவில்லை. குறைபாடுகளை எப்படியோ குழப்பிக்கொள்கிறேன். அம்மையின் காதுக்கு விழாமல் பேசவேண்டும் என்ற கணக்கும் அதில் சேர்த்திதான்.


“அடிக்கும் அடிக்கும்.. குண்டுசனியன்.. பிசாசு அது.. குட்டிக்கு போன் பண்ணும்போது மாட்டிவுட்ருவேன்.. பக்கத்துலயே நின்னுக்கிட்டு கிள்ளிவிட்ரும்..” என்றவள், “இங்க பாரு..” சட்டென மேலாடையை பாதியாக உயர்த்தி காட்டினாள். உள்ளாடை அணிந்திருக்கவில்லை. காட்டிய இடத்தில் காயம் எதுவுமில்லை.. “இங்கதான் நேத்து கில்லுச்சு.. நொம்ப அழுதேன்..” அவளது இடது விலாக்கூட்டிலிருந்து உயரும் தசைமேடு வரை கண்முன் வெளிச்சமாக இருந்தது. நானே அவளது பனியனை பதறி கீழே இழுத்துவிட்டேன். அடுத்த கால் மணி நேரத்திற்கும் மேலாக அவள் பேசியதும் சிரித்ததும் வேறெங்கேயோ நடப்பதைப் போலிருந்தது. 


நள்ளிரவு வரை அந்தக் கொதிப்பு என்னைத் தூங்கவிடவில்லை. ஆடையை உயர்த்தியதும் துருத்தித் தெரிந்த மாரின் அடிச்சதை கொடுத்த மின்னதிர்வை மனதிற்குள் மீட்டுக்கொண்டேயிருந்தேன். இடையிடையே குற்றவுணர்வோ பதற்றமோ பயமோ குறுக்கிடாமலும் இல்லை. ‘இந்தப் பெண்ணை இப்படியெல்லாம் யோசிக்கக்கூடாது’ என பரிதாபப்படும் அதே மனம், ‘அவளுக்கு என்ன குறை.. அவளும் சாதாரணப் பெண்தான்..’ என வசதியாக சப்பை கட்டும். 


அடுத்த நாளிலிருந்து அம்மை அருகிலில்லாத நேரங்களில், “நேத்து எதும் அடிச்சுதா?” என்று ரகசியக் குரலில் கேட்பேன். அவளும் குற்றஞ்சாட்டும் தொனியில் அடுக்க ஆரம்பிப்பாள். “மெதுவா சொல்லு.. காதுல உழப்போகுது..” என்று நான் காட்டும் அபிநயங்கள் எதையும் பொருட்படுத்தும் நிதானத்தில் அவள் இருக்கமாட்டாள். அம்மை நிச்சயம் உடனடியாக வந்துவிட முடியாத தருணங்களில், “எங்க அடிச்சுது.. காமி” என கேட்க ஆரம்பித்தேன்.





3 


அம்மைக்கு வார்த்தைகளும் வெட்டி வெட்டித்தான் வரும். கோவமோ களிப்போ கண்டிப்போ.. எல்லாமே ஒரே வேகம்தான், ஒரே ராகம்தான். அதனாலேயே என்ன அர்த்தத்தில் ஒரு சேதியைச் சொல்கிறாள் என்பது பெரும்பாலும் புரியாமல் போகும். மூன்று நாட்களுக்கு ஒருமுறைதான் குளிப்பாளாய் இருக்கும்; மூட்டுவலி தைல நெடி வேறு. ஜம்பருக்கு மேலே ஜிப்போ கொக்கியோ விட்டுப்போயிருக்கும் நைட்டியை அணிந்துகொள்வாள். அடிதொடை வரை அதை அசிங்கமாக ஏற்றிவேறு கட்டிக்கொள்வாள்.


“இவனே.. மாத்தர முடியப்போவுது..” இப்படியான இடத்தில் மட்டும் ராகம் எப்படியோ இளகிவிடும். “இவனே.. ஐயர் கட வரைக்கும் போய்ட்டு வர்றியா..”, “இவனே.. ஊட்லேந்து வர்றப்ப குப்பாயித்தாட்ட முருங்கக்கா ரெண்டு வாங்கியார்றியா?” இவனே இவனே இவனே.. ஈஎஸ்ஐ அட்டையோ ஒயர் கூடையோ மேசைக்கு வந்துவிட்டால் இந்த அருவருப்பான அன்புக்கு தயாராகிவிடுவேன்.


“அமலி குளிக்கிறா.. செத்த இரு..” கதவை மடாரென சாத்துவாள். கொல்லையில் குளித்தவள் உள்ளே வந்து உடுத்திமுடிக்கும்போது, “அமலீ.. கதவ தெறந்துவுடு..” என்பாள். என்னுடைய இயல்புக்கு மறுமுறை அந்த வாசற்படியை மிதிக்கவே கூடாது. அரை நிமிடம்கூட தாங்காத கொதிநிலை. “கதிரே.. நல்லார்க்கா?” கதவைத் திறந்து என்னைப் பார்த்ததும் அமலி கேட்பாள் - குளித்துவிட்டு உடுத்தும் எந்தவொரு கந்தலும் அவளுக்கு புத்தாடைதான்.   


அமலிக்கு எதையாவது வாயில் போட்டு அரைத்துக்கொண்டே இருக்கவேண்டும். இதையே சாக்காக வைத்து இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு தட்டில் அவித்த கடலையோ மிக்சரோ ரொட்டியோ இரண்டு பெரிய கண்களோடு வரும் - அந்தப் பார்வை - என்னை ஓர் அற்ப உயிரினமாக எண்ணிக் குறுகவைக்கும். சிறுத்து நிற்கும்போது, “திண்ணு..” என ஊட்டுவதைப் போல் அமலி நீட்டுவாள். காயமும் மருந்துமாகவே கடக்கும் கணங்கள்.


“எங்கிட்ட பேசாதன்னு எதும் அம்ம சொல்லுச்சா?” 


“இல்லயே..” மிகக் கடினமான கணிதப் புதிரை உடைத்து விளக்குவதைப் போல முகத்திலொரு பெருமிதத் தீவிரம் இருக்கும். 


“அதுக்கு என்னய கண்டாலே புடிக்காதுல்ல..”


“அப்றமா கேட்டு நாளிக்கு சொல்லவா?” ரொம்பவே பொருட்படுத்தி இதைச் சொல்லுவாள்.


“ஏ ஏய்.. அதெல்லாம் கேக்கக்கூடாது போயி..”


“ஏன் குண்டு அடிக்குமுன்னு பயமா? ஒன்னயல்லாம் அடிக்காது.. நேத்திக்கும் நைட்டு படுக்குற முன்னாடி ச்சுச்சா போயிட்டு வரலன்னு அடி.. ஸ்கேலு வெச்சிருக்கு.. மரத்துல..”


“அதுக்கா அடிச்சுது..”


“பாய்ல போயிட்டா அதுக்கும் அடிக்கும்..” சிரிக்க ஆரம்பித்துவிட்டாள்.


நிறுத்தும்வரை காத்திருந்து கேட்டேன், “எங்க அடிச்சுது?” சுற்றியும்முற்றியும் பார்த்துக்கொண்டேன்.


“இங்க..” இடுப்பை உயர்த்தி பின்புறம் காட்டினாள்..


“எத்தன அடி?”


உதட்டைப் பிதுக்கி, மூன்று விரல்களை உயர்த்தினாள். உயர்த்திய இடுப்பு இறங்கியிருக்கவில்லை.


“வலிச்சுதா?” மெல்ல கையை அவ்விடம் வைத்தபோது அவள் முகத்தையேதான் அளந்துகொண்டிருந்தேன். 


வேகமாக மறுத்து தலையசைத்தாள், “ஆனா அழுதேன்.. அப்பதான் அடிக்காது.. இல்லன்னா கொட்டும்.. கிள்ளும்..”.  ஸ்பரிசத்துக்கான சலனம் துளியும் இருக்கவில்லை. துணிந்து அழுத்தத்தை அதிகரித்தேன் - பாலியஸ்டர் பாவாடை நெகிழ்ந்துகொடுத்தது. விரல்களுக்கிடையில் கொள்ளுமளவிற்கு சதையைப் பற்றி அவள் கண்களை ஏறிட்டேன்..


“அங்க இல்ல.. கீழ.. இப்ப வலிக்கல” என்றபடி தரையில் உட்கார்ந்தாள். என் கை மீதுதான். பிடியைத் தளர்த்தாமல் மெல்ல இறுக்கத்தைக் கூட்டினேன். “நீயும் கிள்ளாத கதிரு..” சத்தமாக சொல்லிவிட்டாள். சட்டென கையை உருவவதற்கும் அம்மையின் நிழல் அங்கு நுழைவதற்கும் சரியாக இருந்தது. பதைப்பின் உச்சத்தில் தடுமாற ஆரம்பித்தேன். நிச்சயம் அம்மையிடம் ‘கதிரு இங்க கிள்ளிடுச்சு’ என்று சொல்ல போகிறாள். பாவடையை உயர்த்திக்காட்டினால் கூட ஆச்சரியமில்லை. நிலவிய மெளனம் ரொம்பவே கனத்தது. வந்தவள் தைல பாட்டிலை எடுத்துக்கொண்டு மெல்ல அசைந்து வெளியேறினாள். அதுவரை மூச்சு விட்டேனா என்பது கூட தெரியவில்லை.


அந்தத் தொடுகையில் எனக்கு பித்தேறிப் போயிருந்தது. நாளுக்கு நாள் அதன் வட்டம் சுருங்க ஆரம்பிக்க தீண்டலின் போதை திண்டாடவைத்தது. அமலிக்கு அப்படியொன்றும் சுண்டியிழுக்கும் வாலிப்பெல்லாம் இல்லை. புளித்துப் பொங்கியிருக்கும் அரிசி மாவைப் போல உடலெங்கும் திரண்டிருக்கும் தசைகள். சருமச் சுருக்கம் வரை கெண்டைக்காலும் வயிறும் எனக்கு அத்துபடி. சுலபமாய் கிடைக்கும் இரையில் சுவையேது? அமலியின் அம்மைதான் ஆட்டத்தை சுவாரஸ்யப்படுத்தியிருக்கவேண்டும். அத்துமீறும் ஒவ்வொரு முறையும் எப்படித்தான் மோப்பம் பிடிப்பாளோ.. குரல் கொடுப்பாள்; வருவித்து இருமுவாள்; பாத்திரத்தை உருட்டுவாள்; இயன்ற வேகத்தில் அரைத்து அரைத்து வந்து நிற்பாள் - எதற்குமே பிடிக்கொடுக்காமல்தான் மிதந்துகொண்டிருந்தேன்.     


ஒரு கட்டத்தில் அதை விட்டொழித்திருக்க முடியும்; ஓசையே எழாத கருவியைத் தட்டிக்கொண்டிருக்கும் வெறுமை நிச்சயம் விலகச்செய்திருக்கும் - திடீரென வீணையின் ஒரு தனி நரம்பு மட்டும் அதிர்ந்துவிட்டது போலும் - மிக ரகசியமான அடரிருளில் ஒளிந்திருந்த எதையோ கண்டுபிடித்து மீட்டுவிட்டேன். அடிவயிற்று மடிப்பைப் பற்றிய தருணத்தில் நிகழ்ந்த மாயம் அது. அகன்று சிரிக்கும் வாய் முதன்முறையாகக் கிறங்கி குவிந்தது. கண்கள் பெருகி மூடி, இழுத்து பிடித்த மூச்சுடன் கழுத்துநார்கள் புடைத்து முழு உடலையும் எக்கி விம்மினாள். அந்த ஒரு நொடி - பூரணப் பெண்ணாக திரிந்து மறைந்தாள்; பதறிப்போய் கையை எடுத்ததும் ஒருவிதமாக நாணிச்சிரித்தாள். அந்தக் கணத்தை அப்படியே உறைய வைக்கமுடிந்தால் எப்படியிருக்கும். அன்றைய இரவைக் கடக்க எத்தனை யுகங்கள் தேவைப்பட்டிருக்கும்.


வேறொரு அமலியைப் பார்க்கப்போகும் துள்ளலுடன்தான் அடுத்த நாள் உச்சிக்கு ஏறினேன். அவளும் நான் வருவதற்கு முன்பே தயாராகியிருப்பதைப் போல குளித்து தலையை அள்ளிக்கட்டி புதிதாக சிறு கீற்று சந்தனப்பொட்டிட்டு பச்சை பாவாடை சட்டையில் நீர் தெளித்து பறித்த முளைக்கீரையின் பொலிவுடன் மிணுங்கினாள். வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். சிரிப்பின் அளவு சிறுத்திருப்பதாகக் கூட தெரிந்தது. நடையில் ஓர் ஒடுக்கம். புறங்கை கோர்க்கவில்லை. அறைக்குள் போனவள் திரும்பும்போது மாருக்கு குறுக்கே துண்டைப் போட்டுக்கொண்டு வந்தாள். அப்போது என்னைப் பார்த்து விஷமமாக சிரித்ததைப் போலத்தான் இருந்தது. அம்மை அடுப்படிக்கு போவதற்காகக் காத்துக்கொண்டிருந்தேன்.


அருகில் வந்து அமர்ந்தவள், ஒரு மேரி பிஸ்கட் பாக்கெட்டைப் பிரித்துவைத்தபடி டிவியைப் போட்டுவிட்டாள். “கதிரு.. ரொட்டி சாப்டுறியா?” - எனக்கு சட்டென கனவு கலைந்ததைப் போலிருந்தது. குரலின் அதே பழைய குழைவு ஏமாற்றமாக இருந்தது. எதுவும் வம்படியாக நடிக்கிறாளா? 


நிதானித்து கேட்டேன், “வெள்ளனவே குளிச்சிட்ட போல..”


காதிலேயே போட்டுக்கொள்ளாமல் ரிமோட்டைத் தேய்த்துக்கொண்டிருந்தாள். புறமண்டையில் ஓங்கி அறையவேண்டும் போலிருந்தது.


“இந்த பாட்டு பாக்குறியா.. நல்லார்க்கும்”


அங்கு உட்காரவே கொள்ளவில்லை. கையைத் தட்டிக்கொண்டு புறப்பட ஆயத்தப்பட்டேன்.


“இவனே.. போறப்ப இந்த கரண்டு பில்ல கெட்டிட்டு போறியா.. கடெசி நாளு இன்னிக்கு..”


அந்த வீட்டையே கொளுத்தவேண்டும் போலிருந்தது. அட்டையை உருவிக்கொண்டு இறங்க ஆரம்பித்தேன். ஈபி அலுவலகத்தில் வண்டியை நிறுத்தவில்லை. பீஸ் கட்டையைப் பிடுங்கிக்கொண்டு போகட்டும். ஒரு வாரத்துக்கு அட்டையையும் கொண்டுபோய் கொடுக்கப்போவதில்லை. வீட்டுக்கு வந்து தலையை முழுகிவிட்டு, கடை வேலைக்கு புறப்பட்டேன். மாமாவின் கடைதான். வரலாம் போகலாம். கல்லாவிலும் உட்காரலாம். லோடு இறக்கிவைக்கும் வேலையும் வரலாம்.


“செத்த ஒக்கார்றியா.. எதும் வெளிவேலயிருக்கா?”


“இல்ல மாமா.. இருக்கேன்..”


“மழ வராப்ல இருக்கு.. ஈபி வரைக்கும் போயிட்டு வந்துர்றேன்..” 


எதையோ உள்ளுக்குள் கசக்கியதைப் போலிருந்தது. மேல்வயிற்றிலிருந்து திகட்டிக்கொண்டு வந்தது. என்னால் இதைவிட மோசமாக நடந்துகொள்ள முடியாதென தோன்றியது. ஒரு கணம் அந்த உச்சி வீட்டில் அமலியும் அம்மையும் மின்சாரமில்லாமல் உறங்கும் ஓரிரவை யோசித்துப்பார்த்தேன். வானம் கருத்துக்கொண்டு வந்தது.


“குடுங்க மாமா.. நானே போயிட்டு வர்றேன்..”


கதவை அமலியேதான் திறந்தாள்.


“சட்ட மாத்திட்ட.. அதான் நல்லார்ந்துச்சு..” பழைய மாதிரியே சிரித்தாள்.


“இந்த அட்டைய அம்மக்கிட்ட குடுத்துர்றியா..” என்னவோ அங்கு நிற்கவே சங்கடமாக இருந்தது.


“ஏன் போற.. உள்ளுக்கு வா.. குண்டு உள்ள கெழங்கு செய்யிது.. வா.. திண்ணுட்டு போவலாம்..” கையைப் பிடித்துக்கொண்டாள். “யம்மே.. கதிரு வந்திருக்கு..” உள்ளுக்குள் திரும்பி சத்தமிட்டாள். அங்கிருந்து எதுவும் பதிலில்லை. அல்லது மழை இரைச்சலில் எனக்கு கேட்கவில்லை.


எப்போதும் உட்காரும் பெஞ்சிற்கு போனதும் காலை உயரத் தூக்கி வைத்துக்கொண்டு சம்மனமிட்டாள். இப்போதாவது ‘இவ்வளவு நேரம் சும்மா நடிச்சேன்..’ என்று சொல்வாளென ஏங்கினேன். அதில் என்ன தருக்கமென்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் முந்தைய நாளின் மலர்ச்சி அத்தனை சத்தியமான ஒன்று - நிமிர்ந்து அவள் கண்களைப் பார்த்தேன் - அப்படியொன்று வந்து போனதற்கான தடயமே இருக்கவில்லை. மழை சடசடக்கும் ஓசை குறைய ஆரம்பித்தது.


“அமலி..”


“ம்ம்..” சட்டையின் கழுத்து விளிம்பையெடுத்து காதையொட்டி துடைத்துக்கொண்டே கேட்டாள். கதவைத் திறக்க வந்தபோது கொஞ்சமாக நனைத்திருந்தாள். அருகில் நெருங்கியமர்ந்து, கவனமாக ஒருமுறை அடுப்படி பக்கம் பார்த்துவிட்டு, “விடு நா தொடைக்கிறேன்” என்றேன். அப்படிச் செய்யவேண்டாம் என்றும் ஏகநேரத்தில் தோன்றியது. அவள் மாரிலிருந்த துண்டையெடுத்து கழுத்தில் துடைத்ததோடு நில்லாமல் சட்டையின் முதல் பித்தானை விடுவித்தேன். தன்னிச்சையாக புலன்கள் இயங்கிக்கொண்டிருந்த மந்திரத்தருணம் அது. மறுப்பு இல்லையென்பது ஆசுவாசமாக இருந்தாலும் காத்திருந்த பேருணர்ச்சிக்குறி வெளிப்படாதது ஏமாற்றமாக இருந்தது. பொறுக்கமாட்டாமல் கையைச் சற்று உள்ளே கொண்டுபோய் கிட்டிய அளவு தசையைப் பற்றிவிட்டேன். அந்த மூர்க்க பிடி என் உடலை தலைகீழாகத் தொங்கவிட்டு உலுக்கியதைப் போலிருந்தது. படரென என் கையை உருவி வெளியே வீசிவிட்டாள். அத்தனை வெறுப்பு அந்த முகத்தில்.  


அன்று ஓடிவந்தவன்தான். ஜோக்குட்டி துபாயிலிருந்து திரும்பிய நாள் வரை இரண்டரை வாரங்கள் அமலியின் முகத்தையே பார்க்கவில்லை. அன்றைய மாலைக்கு பின் அவளிடமிருந்தும் அழைப்பு எதுவும் வரவில்லை.




4


ஒரு மாத ஆண்டிறுதி விடுப்பிற்காக ஜோக்குட்டி வந்திருந்தான். ஏர்ப்போட்டுக்கு அழைக்க நான்தான் போயிருந்தேன். வீட்டில் போய் இறக்கிவிட்டவன் சாமானை உச்சிக்கு ஏற்றிக்கொடுத்துவிட்டு வேலை இருப்பதாகச் சொல்லி வந்துவிட்டேன். அமலி தூங்கிக்கொண்டிருப்பதாக அம்மை சொன்னாள். உண்மையாக இருக்கவேண்டும் என விரும்பினேன். 


தொடர்ந்த நாட்களில், ஜோக்குட்டியை வீட்டில் வைத்து சந்திப்பதைத் தவிர்ப்பதே உத்தமமெனப் பட்டது. இரண்டு முறை பாருக்கு அழைத்துப் போனான். வேளாங்கண்ணிக்கு ஒரு நாள் பைக்கிலேயே போய்வந்தோம். எந்தத் தருணத்திலும் அம்மையைப் பற்றியோ அமலியைப் பற்றியோ அவன் எதுவுமே பேசாமலிருந்தது ரொம்பவே அசெளகரியப்படுத்தியது. எனக்கு முன்னாலிருக்கும் புகைத்திரையை ஏன் விலக்க மறுக்கிறான். அம்மைக்கு இருக்கும் சீக்கு இவனுக்கும் தொற்றிவிட்டதா? முகத்தில் எவ்வித உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் எப்படி இப்படி மழுங்கியிருக்க முடியும். அதை உடனடியாக உடைக்கவேண்டும் போலிருந்தது.  


“அம்ம அமலியெல்லாம் செளக்கியந்தான.. பாத்து நாளாச்சு.. வரணும்ன்னு நெனைக்கிறது.. அப்டியிப்டின்னு வேல எதாச்சும் வந்து மண்டிருது..” ரொம்பவே திக்கிச் சேகரித்துதான் இவ்வார்த்தைகளைக் கோர்த்தேன்.


தலையை மட்டும் மேலும் கீழுமான ஆட்டினானேயொழிய பதில் எதுவும் சொல்லவில்லை.


“நாளிக்கு முசிறி வரைக்கும் போறேன் வர்றியா.. ஒரு வேல..” என்றான். பதிலளிக்கவே எரிச்சலாக இருந்தது. அப்படியே முறித்துக்கொண்டுக் கூட விலகிவிடலாம். 


“மாமா ஊர்ல இல்ல.. லோடு வர்ற நாளு..”


“வண்டி ஒன்னத எடுத்துட்டு போறேன்..” 


மறுப்பு சொல்லவேண்டும் போலத்தான் இருந்தது. “காலேல வந்து எடுத்துக்க..”


அவன் முசிறிக்கு போயிருந்த வேலையில் வீட்டு பக்கம் போய் வரலாமா என்று யோசித்தேன். இதென்ன அவனுக்கு அஞ்சி ஒளிந்திருப்பதா? யாருக்காக பயப்படுகிறேன். அமலியிடமிருந்து ஏன் அழைப்பு எதுவுமில்லை. தயக்கத்தை விழுங்கிக்கொண்டு நானே அழைத்தேன்.


“கதிரே..” அப்படி எனக்கொரு பெயரிருப்பதே திடீரென விநோதமாகப் பட்டது.


“அமலி.. எப்டியிருக்க..”


“குட்டி எங்கயோ போயிருக்கு.. நீ வர்றியா இங்க..” 


ஒரு கணம் தலை கிறுகிறுத்தது. அவளது உளப்போக்குடன் ஒத்திசைக்க முடியாமல் தடுமாறினேன். வழுக்கிக்கொண்டு போகும் எதையோ வலுக்கட்டாயமாகப் பிடித்து நிறுத்தும் விளையாட்டு. திரவம் என நினைத்து கொட்டினால் கண்ணாடியாக விழுந்து நொறுங்குகிறது. மூச்சை இறுக்கி தூக்க முயன்றால் தானாக மேலெழுந்து உயரப் பறக்கிறது.


“கதிரே.. வர்றியா..”


இணைப்பைத் துண்டித்தேன். கோக்குமாக்காக முண்டியடிக்கும் மனதில் உள்ளே அலசி நுழைந்தால் வெறுமைதான் எஞ்சியது. ஜோக்குட்டி திரும்பியதும், அந்த வீட்டிற்கு அவசியம் போக வேண்டும் என்று மட்டும் முடிவு செய்துகொண்டேன்.


“ஏன்டா.. நைட்ல வந்திருக்க.. வண்டி வேல இருக்கா? சொல்லிருந்தா கடைல வந்து விட்ருப்பேன்ல நானே”


“இல்ல இல்ல.. சும்மாதான்..”


இருவரும் உள்ளே நுழைந்ததும், நாற்காலியில் உட்கார்ந்திருந்த அம்மையின் காலருகில் போய் குத்தவைத்தவன், அவளுக்கு தைலம் தேய்ப்பதைத் தொடர்ந்தான்.


“அமலி எங்க..” எப்படி இதைக் கேட்டேன் என்று தெரியவில்லை.


“தூங்கிட்டா.. நா வர்றதுக்கு முந்தியே சாஞ்சுட்டா போல..” மூட்டை நீவியபடியே பேசினான். அம்மை என்னை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். பொசுக்கிவிடுவாள் போலிருந்தது.


பார்வையைப் பின்வாங்கிகொண்டு, “என்ன வேலயா முசிறி..?” ஏதோ கேட்கவேண்டுமேயென கேட்டேன். 


“சாவி வண்டிலயே இருக்குன்னு பாக்குறேன்.. அப்டியே எடுத்துக்கிட்ரு..” அவன் பதிலளிக்க விரும்பவில்லை என்பதே மிக மோசமாக வதைத்தது.


“முசிறி என்ன வேலையான்னு கேட்டேன்..” எதையோ இறுதிப்படுத்திக்கொள்ளும் முனைப்புதான் இப்படி கேட்க வைத்திருக்கும்.


“அமலிக்குதான்.. துபாய்ல நம்மகூட குலசேகர் இருந்தாருல்ல.. அவரு சொல்லிவிட்டது..”


“என்ன அமலிக்கு..” புரிந்ததை உறுதிப்படுத்தத்தான் கேட்டேன்.


“அடகு வியாபாரம் பண்றவரு.. வீட்டம்மாக்கு கைய கால இழுத்து கெடக்கு போல.. புள்ளையும் இல்ல.. அது ஒத்து வருமான்னு பாத்துட்டு வருவோமுன்னு போனேன்.. ப்ச்..”


“ஏன் இப்படில்லாம் பாக்குற..” நல்லவிதமாக எதையேனும் சொல்லவேண்டும் என்ற நிச்சயத்துடன்தான் சொன்னேன்.


“இவளுக்கு வேற எப்டி பாக்க சொல்ற..” முகத்தைத் திருப்பாமல்தான் கேட்டான்.


“அதுக்குன்னு.. இப்டி.. என்ன.. வயசு… அந்தாளுக்கு..” உத்தேசமாக எதையோ கேட்டேன்


“அத விடு.. அது சரியா சேரல..” கொஞ்சம் திருப்தியாக இருந்தது. அம்மையைப் பார்த்தேன். அதே வெறிப்பு மாறாமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.


“நல்லதுதான்னு நெனச்சுக்கோ..”


எதுவுமே சொல்லாமல் வட்டமாக அந்தப் பெரிய மூட்டைத் தேய்த்துக்கொண்டிருந்தான்.


“அவளுக்கு சாதாரணமா பாத்தாதான் என்ன.. நாமலே ஏன் இப்டி கொண்டி தள்ளணும்..”


“ஒனக்கு எதும் அப்டி பண்ணிக்க தோனுதா என்ன?” 


செவி ஒருமுறை அடைத்துத் திறந்ததைப் போலிருந்தது. உடல் சில்லிட்டு மயிர்க்கால்கள் பிடுங்கிக்கொள்ளும் போலிருந்தது. ததும்பிப் பொங்கி வந்த உணர்ச்சிகளை விக்கித்து விழுங்கி அவன் சொல்லப்போகும் அடுத்த வார்த்தைக்காக காத்திருந்தேன். நீவுவதை நிறுத்திவிட்டு என்னை நேருக்கு நேராகப் பார்த்தான். கண்களில் கோபமும் ஏமாற்றமும் சரிவிகிதத்தில் தெரிந்தன. மிக உறுதியான புன்னகை உதட்டோரத்தில் இருந்தது. கண்களைத் தாழ்த்திக்கொண்டேன். தலைக்குனிய தயாராகத்தான் இருந்தேன். புறப்பட்டுவிடலாம் என தோன்றினாலும் அசையமுடியவில்லை. நான் நிமிர்வதற்காக இரு கண்கள் காத்திருந்தன என்பது தெரியும். மேற்கொண்டு அவனிடமிருந்து ஒரு வார்த்தை இல்லை. எத்தனை நிமிடங்கள் இப்படியே கடந்தன?


இறுதியில், அம்மை ஒருமுறை அழுத்தமாக தொண்டையைச் செறுமினாள்.


“இவனே.. சாப்ட்டியா?”


நிமிர்ந்து பார்த்தேன்


“தோச ஊத்தி தர்றேன் திங்குறியா?”



முற்றும்